மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பிரதமர் மோடியின் படம் பதித்த சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தடுப்பூசி போட பதிவு செய்யும் கோவின் ஆப் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்தல் நேரத்தில் பொது மக்கள் வரிப்பணத்தில் பிரதமர் விளம்பரம் தேடிக் கொள்கிறார். இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல். உடனடியாக இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று திரிணமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
தேர்தல் தேதி அறிவித்த பின்னர் பிரதமர் ஆதாயம் பெரும் வகையில் எந்த உரிமையும் கோர இயலாது. இது தேர்தல் நன்னடத்தை விதி 7க்கு எதிரானது என்று அந்த கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரிக் ஓபரைன் தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறியுள்ளார்.
எனவே, தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.