இந்தியா

3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பேச்சுவார்த்தைக் குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பது உள்ளிட்ட விபரங்களுடன் குழு தொடர்பான உத்தரவு மாலை வெளியிடப்படும்.

3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அம்பானி, அதானி போன்ற பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாக பொதுமக்கள், விவசாயிகள், எதிர்க்கட்சிகள் என எவரிடமும் எந்த கருத்துகேட்பு மற்றும் ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் பெரும்பான்மையை பயன்படுத்தி புதிய வேளாண் சட்டங்களை மத்திய மோடி அரசு நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியில் நிறைவேற்றியது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயத்தை அழித்தொழிக்கும் வகையில் அமைந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, மத்திய, உத்தர பிரதேசம் மற்றும் குஜராத், ஒடிசா போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 48வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க எம்.பி. திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா உள்ளிட்ட பலர் தாக்கல் செய்திருந்த மனு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே மற்றும் ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்டங்களை கொண்டு வருவதற்கு முன்பாக என்ன நடைமுறைகளை, ஆலோசனைகளை மத்திய அரசு நடத்தியது? கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினீர்கள். அதனுடைய முடிவு என்ன? இனியும் முடிவு எட்டப்படாத ஏன்? பேச்சுவார்த்தை முடியும் வரை இந்த சட்டங்களை நிறுத்தி வைக்காதது ஏன்?

பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாதது கவலை அளிக்கிறது. விவசாயிகள் போராட்டத்தை சுமூகமாக முடிக்க வேண்டும். ஏன் இன்னும் சட்டங்களை நிறுத்தி வைக்கவில்லை? போராட்டத்தால் ஏதேனும் பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் யார் பொறுப்பு ஏற்பது? இப்படியாக கேள்விக்கணைகளை மத்திய அரசுக்கு தொடுத்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று தெரிவிப்பதாக நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பேச்சுவார்த்தைக் குழுவில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பது உள்ளிட்ட விபரங்களுடன் குழு தொடர்பான உத்தரவு மாலை வெளியிடப்படும் என தெரிவித்த பொருளாதார நிபுணர்கள் அசோக் குலாட்டி பிரமோத் ஜோஷி உள்ளிட்டோர் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், மறு உத்தரவு வரும் வரை வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடாது எனக் குறிப்பிட்டு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

banner

Related Stories

Related Stories