நாடாளுமன்றத்தில் 2020-2021ம் ஆண்டுக்கான மிக நீண்ட மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். நிதியமைச்சரின் இந்த பட்ஜெட்டில் பிரச்சனைக்குரிய அம்சங்கல் இருப்பதாக சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில்தான் உள்ளது. ஏன் இதனை சொல்கிறேன் என்றால் பட்ஜெட் என்றால் அதில், வளர்ச்சியை உறுதி செய்வது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது, பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பது, பொருளாதாரம் அந்தத் தருணத்தில் எதிர்கொண்டுவரும் பிரச்சனையை சரிசெய்வதற்கான வழிகள் ஆகியவை இருக்க வேண்டும்.
குறிப்பாக பொருளாதாரம் வீழ்ந்துக்கிடக்கும் நிலையில், அரசு முன்வந்து அதனைத் தூக்கி நிறுத்த வேண்டும். அதிலும் தனியார் முதலீட்டாளர்கள் இல்லையென்றாலும் அதனை சரி செய்யும் நிலைக்கு அரசே முன்வரவேண்டும். இதில் நான் குறிப்பிட்டுள்ள முதல் மூன்றின் நிலைமை படுமோசம், கடைசியாக உள்ள பொருளாதார பிரச்சனை வரலாற்றில் இல்லாத அளவில் மோசமாக இருக்கிறது.
2013 - 2014-ல் வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சி என்று குற்றம் சாட்டி அதிகாரத்திற்கு வந்த இவர் ஆட்சியில் வேலை வாய்ப்புமும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. இந்த வளர்ச்சியை உருவாக்குவதற்கு ரிசர்வ் வங்கி முடிந்தவரை அதாவது ஐந்து முறை வட்டி விகிதங்களை குறைத்தது. அதன் மூலமாக வளர்ச்சி அதிகரிக்குமென எதிர்பார்த்தார்கள். ஆனால், வளர்ச்சி கீழே சென்றுகொண்டேயிருக்கிறது.
இந்த நிலையில் உணவுப் பொருட்களின் பண வீக்கம் என்பது அதிகரித்துள்ளது. அதை தேக்கநிலை - Stagflation என்பார்கள். பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் விலைவாசியும், வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துக்கொண்ட செல்கிறது.
இந்த ஒருசூழல் இந்தியாவில் இதுவரை இருந்ததில்லை என்பதே நிதர்சனம். இந்த பிரச்சனைகள் வெளிப்படையாக எல்லொருக்கும் தெரிந்தாலும் அரசு இதனை ஒப்புக்கொள்வதில்லை. சரி இந்த பட்ஜெட் பற்றி பேசுவோமானல், இந்த பட்ஜெட் புள்ளி விவரங்களை என்னால் நம்பமுடியவில்லை. ஏன் என்றால், சரியான புள்ளிவிவரங்களை இந்த அரசாங்கம் பட்ஜெட்டில் கொடுக்கவில்லை.
உதாரணமாக வருவாயை எடுத்துக்கொண்டால், வசூலிக்கப்பட்டும் வருவாயில் நவம்பர் வரை சுமார் 11 லட்சம் கோடிதான் வசூலாகியுள்ளது. ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் (Revised Estimate) 21.6 லட்சம் கோடி ரூபாய் வந்திருப்பதாகக் காட்டியிருக்கிறார்கள்.
இதுபெரிய ஆச்சரியம் தானே! அதனால் தான் இந்த பட்ஜெட் நம்பக்கூடியதாக இல்லை. நவம்பரில் இருந்து மீதமுள்ள மூன்று மாதங்களுக்கும் சேர்த்து பத்து லட்சம் கோடி ரூபாயை இந்த அரசாங்கம் வசூலித்துவிட்டதா? அல்லது வெறும் மதிப்பீடா?. ஒருவேலை மதிப்பீடாக எடுத்துக்காட்டினாலும் இவ்வளவு பெரிய வித்தியாசம் எப்படி இருக்கும்?
கடந்தாண்டு நிதியமைச்சர் வெளியிட்ட பட்ஜெட்டில் எகனாமிக் சர்வேவில் உள்ள புள்ளி விவரங்களுக்கும், பட்ஜெட்டில் இருந்த புள்ளிவிவரங்களுக்கும் இடையில் 1.76 லட்சம் கோடி ரூபாய் வித்தியாசம் இருந்தது. இதனை அக்கட்சியின் சுப்பிரமணியசாமியே தெரிவித்திருந்தார். அதனால் தான் இந்த முறை எகனாமிக் சர்வேவில் திருத்தப்பட்ட வரி வருவாய் மதிப்பீடே தரவில்லை என நினைக்கிறேன்.
இதுபோல ஒவ்வொரு புள்ளி விவரங்களையும் பற்றியும் பேசமுடியும். அரசின் இந்த தவறான புள்ளிவிவரத்தால் இதனால், நிதி பிரச்சனை இன்னும் தீவிரமாகும். நிதி நிலைமையை சரிசெய்யக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பையும் தவறவிட்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு பட்ஜெட் முதல் வாய்ப்பு. அதில் நிறைய தவறுகள் இருந்தன. இதனால், நிலைமை மோசமானது. இம்மாதிரி சூழலில் பொருளாதாரம் எப்படி முன்னோக்கி செல்லும்?” எனத் தெரிவித்துள்ளார்.