
முத்தமிழறிஞர் கலைஞரின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியின் தலைமையகமான அன்பகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 75 அடி உயர கம்பத்தில் கழகத்தின் இருவண்ணக் கொடியை கழகத் தலைவர் - முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதன்பிறகு, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் மார்பளவுச் சிலைகளைத் திறந்துவைத்து, அன்பகத்தின் முதல் தளத்தில் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தைத் திறந்துவைத்து;
இளைஞர் அணி மேற்கொண்டுவரும் ஆக்கபூர்வமான பணிகளைப் பார்வையிட்டார். ஏற்கெனவே புதுப்பிக்கப்பட்ட இரண்டாவது தளத்திற்கும் சென்று, அங்கு நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டார்.

1964-ஆம் ஆண்டு முதல் கழகத் தலைமையகமாக அன்பகம் செயல்பட்டு வந்த நிலையில், 1987-ஆம் ஆண்டு அண்ணா அறிவாலயம் உருவாக்கப்பட்டு, கழகத் தலைமையகம் ஆனது. அதன்பிறகு, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி 11 லட்சம் ரூபாயை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களிடம் கொடுத்து, அன்பகத்தை இளைஞர் அணிக்குப் பெற்றுக்கொடுத்தார் இன்றைய கழகத் தலைவர் அவர்கள்.
தி.மு.கழக இளைஞர் அணியின் அலுவலகமாக மாற்றப்பட்ட அன்பகத்தை இதே நாளில்தான் 03.06.1988 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் முன்னிலையில் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் திறந்துவைத்தார். இந்த இனிய நாளில் புதுப்பொலிவு பெற்றிருக்கிறது அன்பகம்.






