தி.மு.க

“1 கோடி மரம் நடும் விவேக்கின் கனவை திமுக நிறைவேற்றும்” - கார்த்திகேய சிவசேனாபதி நெகிழ்ச்சி அறிவிப்பு!

மறைந்த நடிகர் விவேக் அவர்கள் விட்டுச்சென்ற ஒரு கோடி மரம் நடும் பணியைத் தி.மு.க சுற்றுச்சூழல் அணி மேற்கொள்ளும் என கார்த்திகேய சிவசேனாபதி அறிவித்துள்ளார்.

“1 கோடி மரம் நடும் விவேக்கின் கனவை திமுக நிறைவேற்றும்” - கார்த்திகேய சிவசேனாபதி நெகிழ்ச்சி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மறைந்த நடிகர் விவேக் விட்டுச்சென்ற ஒரு கோடி மரம் நடும் பணியைத் தி.மு.க சுற்றுச்சூழல் அணி மேற்கொள்ளும் என்று மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன் நகைச்சுவையால் மக்களைச் சிரிக்க வைத்த, அதன் மூலம் சிந்திக்கவும் வைத்த சிறந்த நகைச்சுவை நடிகரும்,குணச்சித்திர நடிகருமான பத்ம ஸ்ரீ விவேக் மறைவு நமக்கெல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

தனது நகைச்சுவையால் மக்களிடையே இருந்த அறிவியலுக்குப் புறம்பான எண்ணங்கள் குறித்துப் பல வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் காரணமாகவே தலைவர் கலைஞர் அவர்களால் "சின்னக் கலைவானார்" என்று அழைக்கப்பட்டார்.

அதே நேரம் அவர் நடிகர் என்பதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பராகவும், சுற்றுச்சூழல் முன்னெடுப்புகள் பலவற்றிலும் என்னுடன் துணை நின்றவராகவும் இருந்துள்ளார். மேலும், லட்சக்கணக்கான மரங்கள் நட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறப்புக்குரியவர்.

அந்த வகையில், மறைந்த நடிகர் விவேக் 1 கோடி மரங்கள் நடுவதைத் தன் இலட்சியமாக வைத்திருந்தார். அதில் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பெரும் பணியைச் செய்தும் காட்டியுள்ளார். சுற்றுச்சூழல் நன்மை மீது அளப்பரிய ஆர்வமும் அதையொட்டி பணியாற்றுவதில் மிகுந்த ஈடுபாடும் கொண்டிருந்தார்.

ஆனால் மரம் நடும் பணியை முழுமை செய்வதற்குள் இயற்கை அவரை எடுத்துக்கொண்டது. ஆனால் அவர் கொண்ட ஓர் உயர்ந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான கைமாறாக இருக்கும். எனவே, அவர் நட்ட மரக்கன்றுகளின் மீதி எண்ணிக்கையை நடுவதற்கு நம் கழக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.

இந்த நற்செயலில் அவருடன் பயணித்த அவரது நண்பர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து இது குறித்த செயல்கள் பற்றிக் கலந்தாலோசிக்க இருக்கிறோம். என்றும் போல் மக்களாகிய நீங்கள் தங்கள் நல் ஆதரவைத் தந்து அவர் லட்சியம் நிறைவேறத் துணை நிற்க வேண்டும். விவேக்கின் உயர்ந்த எண்ணத்தை ஒன்றிணைந்து நிறைவேற்றுவோம்.” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories