தி.மு.க

“இதுவரை தமிழகம் பார்க்காத காட்சி..! தமிழகமே விரும்பும் ஆட்சி..!” : #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின்

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் வெற்றி சூட்சமத்தை விளக்குகிறார் ஆசிரியர் ப.திருமாவேலன்.

“இதுவரை தமிழகம் பார்க்காத காட்சி..! தமிழகமே விரும்பும் ஆட்சி..!” : #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

தமிழகம் இதுவரை எத்தனையோ மேடைகளைப் பார்த்திருக்கிறது. இதுவரை இப்படி ஒரு காட்சியைப் பார்த்தது இல்லை! தமிழகம் இதுவரை எத்தனையோ தலைவர்களின் வாக்குறுதிகளைக் கேட்டிருக்கிறது. இதுவரை இப்படி ஒரு வாக்குறுதியை எந்தத் தலைவரும் தந்தது இல்லை! தமிழகம் இதுவரை எத்தனையோ முதலமைச்சர் வேட்பாளர்களைப் பார்த்திருக்கிறது. இதுவரை இப்படி ஒருவர் சொன்னது இல்லை! அப்படி ஒரு மேடை தான்: "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்பதாகும்! அப்படி ஒரு வாக்குறுதிதான்: "நூறு நாட்களில் உங்கள் பிரச்சினையைத் தீர்ப்பேன்" என்பதாகும்! அப்படி ஒருவர் சொன்னதுதான்: "நிறைவேற்றாவிட்டால் நீங்கள் என்னிடமே வந்து, என்னைக் கேள்வி கேட்கலாம்" என்பதாகும்! இத்தகைய புதுமையான, புதுமாதிரியான, நம்பிக்கை ஊட்டும் தலைவராக உயர்ந்தும் எழுந்தும் நிற்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின்!

மேடையில் வரிசையாக தலைவர்கள்! எதிரே மக்கள்! தலைவர்கள் பேசுவார்கள்! மக்கள் கேட்பார்கள்! இதுவரை பார்த்த மேடைகள் இதுதான்! ஆனால் இன்று, மேடையில் தலைவர்! மக்கள் பேசுகிறார்கள்! தலைவர் செவி மடுக்கிறார். விளக்கம் அளிக்கிறார். உறுதியளிக்கிறார். இது கதையல்ல, நிஜம்! மக்களின் எதிர்ப்பார்ப்பு என்பது எப்போதும் ஒன்றே ஒன்றுதான். தங்கள் குறைகளை, தங்களது இழப்புகளை, தங்களது கோரிக்கைகளை யாராவது காது கொடுத்துக் கேட்கமாட்டார்களா என்பதுதான் முதலாவது. காது கொடுத்துக்கேட்டாலே பாதி பாரம் குறைந்துவிட்டதாக மக்கள் மனநிறைவு கொள்வார்கள். ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்வின் வெற்றிச் சூட்சுமம் இதில்தான் அடங்கி இருக்கிறது. தாய்க்குத் தெரியும், தன் பிள்ளைக்கு என்ன வேண்டும் என்று. குறிப்பிட்ட வயது வரைக்கும் தாயே செய்து தருவாள். ஒரு கட்டம் தாண்டியதும் தனக்குத்தேவையானதை பிள்ளை கேட்கும். தாய் செய்து கொடுப்பாள். இந்தக் குடும்பக்காட்சி அரசியல் வெளியில் நடந்தால் எப்படிஇருக்கும்? அதைத்தான் தமிழகம் இப்போது பார்க்கிறது!

“இதுவரை தமிழகம் பார்க்காத காட்சி..! தமிழகமே விரும்பும் ஆட்சி..!” : #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின்

திருவண்ணாமலையில் தொடங்கி ஆரணியில் நகர்ந்து, வேலூரில் மையம் கொண்டு, ராணிப்பேட்டை வழியாக திருவள்ளூர் வந்து, மீண்டும் கிருஷ்ணகிரி, தருமபுரியில் மு.க.ஸ்டாலினின் முதல்கட்டப் பயணம் முற்றுப் பெற்றுள்ளது. இந்தத் தொகுதி, அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஓரளவு கவலை குறைந்த மனநிலையில் இருப்பார்கள். கண்ணீரோடு ஒரு குரல், கவலையோடு மறுகுரல், உணர்ச்சியோடு இன்னொரு குரல், ஏதிலியாய் அடுத்த குரல் - என ஒவ்வொருவர் கோரிக்கைக்கும் பின்னால் ஒரு உணர்வு இருக்கிறது. இந்த உணர்வுக்குப் பின்னால் ஒரு நம்பிக்கை இருக்கிறது. ``இவர் ஆட்சி அமைந்தால் நம் கவலைகள் தீரும்" என்பதே அந்த நம்பிக்கை! எழிலரசி அதற்கு ஒரு உதாரணம். எழிலரசி என்ற பெண்ணின் தனிப்பட்ட கவலை மட்டும் தீர்ந்துவிட்டதாக பொருள் கொண்டுவிடக்கூடாது. ஏராளமான எழிலரசிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கிறார் அந்தப்பெண். தனது துன்பம் அனைத்தையும் அவர் சொன்னார். அரசாங்கம் அவருக்கு உதவி செய்ததாகச் சொன்ன தொகையைத் தரவில்லை. ``உங்கள் அரசாங்கம் வரும் வரை நான் காத்திருக்க முடியாது. எனக்கு உடனே தீர்வு சொல்லுங்கள்" என்று சொன்னார்.`‘இன்று இரவுக்குள், நாளைக் காலைக்குள் தீர்வு காண்பேன்" என்றார் தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் ஆரணிக் கூட்டத்தை முடித்துவிட்டு, வேலூருக்கு வருவதற்குள் எழிலரசியின் கணக்கில் பணத்தைப் போட்டுவிட்டார் பழனிசாமி. ``யார் முதல்வர்? பழனிசாமியா? மு.க.ஸ்டாலினா?’’ என்பதுதான் இப்போது மக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகம்."ஆட்சியில் இல்லாத போதே இவ்வளவு செய்யமுடியுமானால், ஆட்சிக்கு வந்தால் எவ்வளவோ செய்ய முடியுமே"" என்று தலைவர் சொன்னார்.

இந்தத் திட்டத்தின் நோக்கே அதுதான். எல்லோரும் நினைக்கிறார்கள்; மக்களின் கோரிக்கை என்றாலே பல்லாயிரம் கோடி செலவாகும் என்று. மக்கள் எதிர்பார்ப்பது அம்பானிகள், அதானிகளைப் போன்ற கோரிக்கைகள் அல்ல. அவை மிகச்சர்வசாதாரணமானவை. அவர்களுக்கு அவசியம் தேவைப்படுபவை. அந்த அவசர, அவசியத் தேவையை நிறைவேற்றிக் கொடுத்தாலே அவர்கள் கவலை மறந்து வாழ்வார்கள். அந்த நம்பிக்கையை உணர்த்தவே இந்தத் திட்டம். எந்த நோக்கத்துக்காக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதைத்தான் இந்த ஒரு வாரநிகழ்வுகள் காட்டுகின்றன. "இந்த இடத்துக்கு வந்த உடனே அனைவரும் தங்கள் குறைகளை முன்பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்திருந்தேன். அந்த முறைப்படி உங்கள் குறைகளை எழுதிக் கொடுத்திட்டீங்களா? அதுக்கு இந்த மாதிரி ஒரு ரசீது கொடுத்தாங்களா? அந்த ரசீதை வாங்கிட்டீங்களா? காட்டுங்க! அப்படி யாராவது ரசீது வாங்காம இருந்தீங்கன்னா இந்தக்கூட்டம் முடிந்ததும் போய் ரசீதை மறக்காம வாங்கிக்கோங்க! அது சாதாரண ரசீது மட்டுமல்ல. அதை வைத்து நீங்கள் என்னைக் கேள்வி கேட்கலாம். அதற்கான உரிமை சீட்டு அது" என்று தி.மு.க. தலைவர் சொல்கிறார். இதுதான் இதுவரை தமிழகம் பார்க்காத காட்சி! "என்னைக் கேள்வி கேட்கலாம்" என்ற உரிமையை மக்களிடம் கொடுத்திருக்கிறார் தலைவர்.

இந்த உரிமையை வழங்க ஒரு தைரியம் வேண்டும். துணிச்சல் வேண்டும். அதன் வடிவமாக எல்லா மேடைகளிலும் காட்சி அளிக்கிறார். பெரிய பெட்டியில் போடப்பட்ட மனுக்களில் இருந்து மனுக்களை எடுத்துப்பேச வைக்கிறார் தலைவர். வேலூரில் தான் திடீரென்று ஒரு குரல், `ஐயா! எங்களுக்கும் பேச வாய்ப்பு கொடுங்கய்யா' என்று. ஒலி பெருக்கியை அவர்களுக்கு தரச்சொல்கிறார். `எனக்கு எழுதத் தெரியாதுய்யா, எங்க கோரிக்கையையும் கேளுங்கய்யா' என்று அந்தப் பெண் சொல்கிறார். பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் அவர். அவரது கோரிக்கையைச் சொல்கிறார். அதன்பிறகு, திருநங்கைப் பெண்கள், பேசவாய்ப்பு கேட்கிறார்கள். அவர்களுக்கும் ஒலிபெருக்கி தரப்படுகிறது. அவர்களும் தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இப்படி, அனைவருக்குமான களமாக அமைந்திருக்கிறது,‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'நிகழ்வு!

“இதுவரை தமிழகம் பார்க்காத காட்சி..! தமிழகமே விரும்பும் ஆட்சி..!” : #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின்

விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறுகுறு தொழில் செய்வோர், ஏழைகள், ஒடுக்கப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், ஆதரவற்றோர், அபலைகள், முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர், சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள், புறம் தள்ளப்பட்டவர்கள், ஆகியோரின் மேம்பாட்டுக்கு எவை அடித்தளமாக அமையுமோ அத்தகைய திட்டங்களைத் தீட்டிய அரசுதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு! "வீட்டில் நான்கு குழந்தை இருந்தால் மெலிந்த குழந்தை மீதுதான் பெற்றோருக்கு அன்பு இருக்கும். அதைப்போலத்தான் மெலிந்த குழந்தைகளை முன்னேற்ற நினைக்கிறேன்" என்று சொன்னார் தலைவர் கலைஞர் அவர்கள். அதைப்போலவே நானும் செயல்படுவேன்" என்று வாக்குறுதி கொடுக்கிறார் தி.மு.க. தலைவர். இது எல்லோர்க்கும் பெய்யும் மழையாக இருக்கிறது. அனைவருக்கும் வீசும் தென்றலாக இருக்கிறது. அனைவருக்கும் ஒளிகொடுக்கும் சூரியனாய் இருக்கிறது. பேச வாய்ப்பு கிடைப்பது பத்திருபது பேராக இருக்கலாம். ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் இதன் மூலமாக நம்பிக்கையைப் பெறுகிறார்கள். இத்தகைய நம்பிக்கையை ஒரு தலைவர் பெறுவதுதான் முக்கியமானது. அதை மு.க.ஸ்டாலின் அவர்களே சொன்னார்கள். “கண்களில் கனவுகளோடும் கையில் மனுக்களோடும் இதயத்தில் ஏக்கத்துடனும் இந்த அரங்கத்தை நோக்கி வந்திருக்கும் உங்களது நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு என்னால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நீங்கள் வந்திருக்கிறீர்கள். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்! அடுத்தவர் நம்பிக்கையைப் பெறுவதுதான் ஒரு மனிதனின் மாபெரும் சொத்து. இவர் நல்லவர், நம்பிக்கையானவர், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவார், இவரை நம்பி நம்முடைய கோரிக்கையை வைக்கலாம் என்று உங்களிடம் நான் நம்பிக்கையைப் பெற்றதைத்தான் என்னுடைய சொத்தாகக் கருதுகிறேன். இத்தகைய நம்பிக்கையைப் பெறுவது சாதாரணமான விஷயம் அல்ல.

நீங்கள் எத்தகைய நம்பிக்கையை வைத்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன்! உங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் 100 சதவிகிதம் உண்மையாக இருப்பேன் என்ற வாக்குறுதியை திருவண்ணாமலையில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்!" என்றுதான் தி.மு.க. தலைவர் தனது உரையைத் தொடங்கினார். இந்த நம்பிக்கைக்குக் காரணம், 100 நாட்களில் உங்களின் குறையைத்தீர்ப்பேன் என்ற ஒரு வாக்குறுதி மட்டுமல்ல. திடீரென்று நாளைக்கு காலையில் ஒருவர் எழுந்து வந்து, ``உங்கள் குறைகளை நான் 100 நாட்களில் தீர்ப்பேன்" என்று சொன்னால் மக்கள் நம்பப்போவது இல்லை. அந்த வாக்குறுதியைச் சொல்வது யார் என்று மக்கள் பார்க்கிறார்கள். என்ன வாக்குறுதி தரப்படுகிறது என்பதை விட முக்கியமானது, அந்த வாக்குறுதியை யார் தருகிறார்கள் என்பது! இப்படி ஒரு வாக்குறுதியைத் தருபவரை இந்த தமிழகம் ஐம்பது ஆண்டுகளாகப் பார்க்கிறது. தியாகத்தால் சிறையையும் நிரப்பி இருக்கிறார். வெற்றியால் சட்டசபையையும் நிரப்பி இருக்கிறார். நாட்டின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பவராகவும் இருக்கிறார்.

“இதுவரை தமிழகம் பார்க்காத காட்சி..! தமிழகமே விரும்பும் ஆட்சி..!” : #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின்

பல நலத்திட்டங்களைக் கொண்டுவந்து அறிமுகப்படுத்தியவராகவும் இருந்திருக்கிறார். கழகப் பணியையும் தமிழகம் பார்த்துள்ளது. நிர்வாகப் பணிகளையும் தமிழகம் பார்த்துள்ளது. அந்த அரை நூற்றாண்டு காலமாகச் சிறுகச்சிறுக வளர்ந்த நம்பிக்கை தான் இன்று மாபெரும் விருட்சமாகக் காட்சி தருகிறது. பல நூறு கோடி செலவு செய்து விளம்பரம் செய்து,‘உங்கள் பிரச்னையை 100 நாளில் தீர்ப்பேன்' என்று அவர் சொல்லவில்லை. மக்களுக்கு இது எப்படி பரவியது? அவரை நம்பும் மக்கள் தொகை அதிகமாகி, அதிகமாகி லட்சங்கள் கோடியாகி, அந்த நம்பிக்கையை விதைத்துவிட்டது. அதனால்தான் அவரிடம் மனுக் கொடுக்க, அவரிடம் கை கொடுக்க, அவரைப் பார்க்க, அவரிடம் சொல்ல, அவர் சொல்வதைக் கேட்க மக்கள் சாரை சாரையாக வருகிறார்கள்! "உங்கள் கவலைகளை, உங்களது கோரிக்கைகளை, உங்களது எதிர்பார்ப்புகளை என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். இவற்றை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன்."" என்று சொன்னார். "மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன்.

உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு"" என்ற உறுதிமொழியைத் தொகுதி தொகுதியாக போய் 234 தொகுதிகளுக்கும் போய் அவர் சொல்லிக் கொண்டு இருக்கிறார். ‘நான்' என்று சொல்லலாமா? சொல்லலாம்! அத்தகைய உறுதிமொழியைக் காப்பாற்றும் நம்பிக்கை ஒரு தலைவருக்கு இருந்தால் நிச்சயம் சொல்லலாம்! "ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான், திராவிட சமுதாயத்தை மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் பணியை மேற்போட்டுக்கொண்டு..."" என்றுதான் பெரியாரே புறப்பட்டார்!"""" இந்த அண்ணாத்துரையால் என்ன சாதித்து விடமுடியும் என்று கேட்கிறார்கள். எதையெல்லாம் சாதிக்க முடியாது என்று நினைக்கிறார்களோ அனைத்தையும் இந்த அண்ணாத்துரையால் சாதிக்கமுடியும்"" என்றுதான் பேரறிஞர் அண்ணா எழுந்து நின்றார்! "நீங்கள் என்னைக் கடலில் தூக்கி எறிந்தாலும் கட்டுமரமாக நான் மிதப்பேன், நீங்கள் அதில் ஏறிச் சவாரி செய்யலாம்" என்றுதான் முத்தமிழறிஞர் தனது முதுகைப் படகாகக் காட்டினார்! "உங்கள் பாரங்களை, எனது முதுகில் வைத்துள்ளீர்கள். இனி இவை எனது பாரங்கள்" என்று தளபதி மு.க.ஸ்டாலின் செய்துள்ள முழக்கம் என்பது காலத்தின் குரல். இதுவரை தமிழகம் பார்க்காத காட்சி! தமிழகம் விரும்பும் ஆட்சியும் அவர் ஆட்சியே!

banner

Related Stories

Related Stories