தி.மு.க

ரூ.800 கோடியை மீட்க போலிஸ் வேட்டை: எடப்பாடிக்கு பதில் விஜயபாஸ்கர் பேசுவது ஏன்? - K.N.நேரு சரமாரி கேள்வி!

அமைச்சர் துரைக்கண்ணு விவகாரத்தில் ரூ.800 கோடி மீட்க நடத்திய போலீஸ் வேட்டை குறித்த குற்றச்சாட்டுக்கு, முதலமைச்சர் பழனிசாமி பதில் கூறாமல் அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் சொல்வது ஏன் என கே.என்.நேரு கேள்வி.

ரூ.800 கோடியை மீட்க  போலிஸ் வேட்டை: எடப்பாடிக்கு பதில் விஜயபாஸ்கர் பேசுவது ஏன்? - K.N.நேரு சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"கழகத் தலைவர் ஆட்சிக்கு வந்ததும், அமைச்சர் துரைக்கண்ணு விவகாரம் மட்டுமின்றி, ஜெயலலிதா அம்மையார் மரணத்தில் மறைந்துள்ள சதி, குட்கா, குவாரி முறைகேடு, ஆர்.கே.நகர் தேர்தல் முறைகேடு, கொரோனா கொள்முதல் ஊழல் உள்ளிட்ட அனைத்தையும் விசாரிக்க நடவடிக்கை எடுப்பார்; குற்றவாளிகள் தப்ப முடியாது என எச்சரிக்கிறேன்" என தி.மு.க. முன்னாள் அமைச்சரும் தலைமைக் கழக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ., அறிக்கை விடுத்துள்ளார்.

அதில், “அமைச்சர் துரைக்கண்ணு அவர்களின் இறப்பு குறித்து பொய்யான அறிக்கை வெளியிட்டதாக எங்கள் கழகத் தலைவர் மீது சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று அறிவித்துள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் “காவிரி டெல்டா மாவட்டத்தில் ஏன் போலீஸ் படை சூழ ரெய்டு நடத்தப்பட்டது” “அங்குள்ள ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் போடப்பட்டு ஏன் கைது செய்யப்பட்டார்கள்” என்பதை உள்நோக்கத்தோடு மறைத்திருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைச்சரின் மரணத்தில் - அதற்கான சிகிச்சையில் சந்தேகத்தை எங்கள் கழகத் தலைவர் எழுப்பவில்லை. அவர் மறைந்த பிறகு - உடலை வைத்துக்கொண்டு - சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காகக் கொடுக்கப்பட்ட 800 கோடி ரூபாயை மீட்க நடந்த பேரம் - நடத்தப்பட்ட போலீஸ் வேட்டை குறித்து நக்கீரன், தினகரன் உள்ளிட்ட பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் - எங்கள் கழகத் தலைவர் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த “கோடிகள் மீட்பு குறித்தும் - எந்த சீனியர் அமைச்சர் அவசரமாக டெல்டா மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு அந்த பணம் மீட்கப்பட்டது” என்பது குறித்தும் வாயே திறக்கவில்லை என்பது “மர்மமாக” இருக்கிறது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையாரின் இறப்பு குறித்து “குழாயடிச் சண்டை” நடத்தியவர்கள் அ.தி.மு.க. அமைச்சர்கள். அதில் விஜயபாஸ்கரும் அடக்கம். அ.தி.மு.க. ஆட்சியில் - அவர்கள் எல்லாம் பொறுப்பில் இருக்கும் போதே ஜெயலலிதா அம்மையாரின் மரணம் பற்றி - அவருக்கு அளித்த சிகிச்சைகள் குறித்து ஒருவருக்கொருவர் பொது வெளியில் உளறிக் கொட்டியதை- “போர்ப்பரணி” பாடி - குஸ்தி போட்டதை இந்த நாடே அறியும். தங்களின் முதலமைச்சர் குறித்த சிகிச்சை விவரங்களையே முழுமையாக வெளியிட வக்கில்லாத விஜயபாஸ்கர் எங்கள் கழகத் தலைவர் குறித்து கேள்வி கேட்க என்ன யோக்கியதை இருக்கிறது?

ரூ.800 கோடியை மீட்க  போலிஸ் வேட்டை: எடப்பாடிக்கு பதில் விஜயபாஸ்கர் பேசுவது ஏன்? - K.N.நேரு சரமாரி கேள்வி!

ஜெயலலிதா மரணத்தில் “முதல் குற்றவாளி யார்” என்று அமைச்சர் விஜயபாஸ்கரும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் நடத்திக் கொண்ட “பேட்டிப் போர்” எல்லாம் மக்கள் மறந்து விட்டார்கள் என்று நினைக்கிறாரா விஜயபாஸ்கர்? ஒரு முதல்வரின் மரணத்திலேயே முதல் குற்றவாளி என்று – அப்போது முதலமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தாலேயே குற்றம் சாட்டப்பட்ட விஜயபாஸ்கருக்கு எங்கள் கழகத் தலைவர் பற்றி குறை சொல்ல என்ன தகுதி இருக்கிறது?

ஒட்டுமொத்த அமைச்சரவையே அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோதும் ஜெயலலிதா அம்மையாரின் மரணம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது ஏன்? அந்த மரணத்தில் உள்ள சந்தேகங்களை விசாரிக்கத்தானே! அப்படியொரு கமிஷனை அமைத்து விட்டு “கால நீட்டிப்பு”க் கொடுத்து - ஜெயலலிதா அம்மையாரின் மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளியே வந்து விடக்கூடாது என்று அரண் போல் பாதுகாத்து நிற்பது யார்? அமைச்சர் விஜயபாஸ்கரும், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர்ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்தானே?

“அம்மா” “அம்மா” என்று கூறி நாடகம் போட்ட விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் இப்போது ஜெயலலிதா அம்மையாரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளிக்கொண்டு வராமல் மறைத்து நிற்கிறார்கள். அந்த மரணத்தின் மர்மங்களையே மறைத்தவர்கள் - துரைக்கண்ணுவின் சிகிச்சை - அதற்குப் பிறகு மரணம் - உடலை வைத்துக்கொண்டு நடத்திய போலீஸ் வேட்டை ஆகியவற்றையா சொல்லப் போகிறார்கள்? நிச்சயமாக இல்லை.

அதனால்தான் எங்கள் கழகத் தலைவர், அமைச்சர் துரைக்கண்ணு விவகாரத்தில் 800 கோடி ரூபாயை மீட்க நடத்திய போலீஸ் வேட்டை குறித்து விசாரிக்கப்படும் என்றார். உடனே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குளிர் ஜூரம் வந்து விட்டது போலிருக்கிறது. போலீஸ் துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதற்கு எடப்பாடி பழனிசாமிதான் பதில் சொல்லியிருக்க வேண்டும். அதை விடுத்து விஜயபாஸ்கர் ஏன் முந்திரிக்கொட்டை போல் முன்னாடி வந்து பதில் சொல்லியிருக்கிறார்?

அப்படியென்றால் - காவிரி டெல்டாவில் மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 800 கோடி ரூபாயும் - அதற்காக நடைபெற்ற போலீஸ் வேட்டையும் அமைச்சர் விஜயபாஸ்கரின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதா? மேற்கு மண்டலத்தில் போலீசை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்டுப்படுத்துவது போல் - மத்திய மண்டலக் காவல்துறை விஜயபாஸ்கரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா?

ஆகவே வழக்கு - அது இது என்றெல்லாம் எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து “பூச்சாண்டி” காட்ட வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கரை எச்சரிக்க விரும்புகிறேன். குட்கா ஊழல் வழக்கு, புதுக்கோட்டை குவாரி ஊழல் வழக்கு, ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த வழக்கு, மாறுதல்களுக்குத் தனியாக கவர்களில் பணம் வைத்திருந்த வழக்கு - இப்போது கொரோனா நோய்த் தொற்றையொட்டி நிகழ்ந்துள்ள 6 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான “கொரோனா கொள்முதல்” குறித்த ஊழல் அனைத்திற்கும் பதில் சொல்வதற்கே அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வருகின்ற மே மாதத்திற்குப் பிறகு நேரம் போதாது.

ஏன் மறைந்த ஜெயலலிதா அம்மையாரின் மரணத்தில் நிகழ்ந்த மர்மங்களுக்கு அவர் மிக விளக்கமாகப் பதில் சொல்ல மட்டும் அல்ல - விசாரணையையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எங்கள் கழகத் தலைவர் மிசாவைப் பார்த்து – அந்தச் சிறைக் கொடுமைகளை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு – இந்திய அரசியலில் இன்றைக்குத் தவிர்க்க முடியாத சக்தியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தை விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்துள்ளவர்.

அவர் நாளை தமிழகத்தில் நிச்சயம் ஆட்சிக்கு வருவார். வந்ததும் அமைச்சர் துரைக்கண்ணு மரணத்திற்குப் பிறகு நடைபெற்ற – 800 கோடி ரூபாய் மீட்பு குறித்த “போலீஸ் வேட்டை” மட்டும் அல்ல - ஜெயலலிதா அம்மையார் மரணத்தில் நிகழ்ந்துள்ள மர்மங்கள் - சதிகள் - முதல் குற்றவாளி யார் என்று கொடுத்துக் கொண்ட பேட்டிகள் அனைத்தையும் விசாரிப்பார். குற்றவாளிகள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories