தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான துரை.சந்திரசேகரன் நேற்று மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, திமுக சார்பில் நடைபெற்று வரும் ’எல்லோரும் நம்முடன்’ இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் இதுவரை தஞ்சை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட நான்கு தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு ஜெயலலிதாவின் மறைவைப்போல் மர்மமாக உள்ளது என்றும், இதற்கு திமுக தலைவர் மேல் அவதூறு வழக்கு தொடுப்போம் என ஆளும் தரப்பு பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அவர் அதிமுக தலைமை கொடுத்து வைத்திருந்த பணத்தை திரும்ப பெறுவதற்கு துரைக்கண்ணுவின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரும் காவல்துறையால் மிரட்டப்பட்டு துன்புறுத்தப்படுவது அப்பகுதி மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றார் துரை சந்திரசேகரன்.
அவ்வாறு இல்லையெனில் இன்று நடைபெற இருக்கும் துரைக்கண்ணுவின் படத்திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சரோ, அமைச்சர்களோ பங்கேற்காதது ஏன் என் கேள்வி எழுப்பிய துரை சந்திரசேகரன் மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு வாக்காளர்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற அதிமுகவின் பகல்கனவு பலிக்கப்போவது இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார்.