தி.மு.க

திமுகவை விமர்சித்து ஆப்பசைந்த குரங்காக மாட்டிக்கொள்ள வேண்டாம் - பாண்டியராஜனுக்கு தங்கம் தென்னரசு வார்னிங்

ஊரடங்கால் வாடும் மக்களுக்கு நிவாரணமளிக்காமல், கடந்த ஆண்டு அறிவித்த திட்டத்தைச்சொல்லி விளம்பர சுகம் காண விழைகின்றார் என அமைச்சர் பாண்டியராஜனை தி.மு.க எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்த அமைச்சர் பாண்டியராஜனை கண்டித்து, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,

“‘நண்டு கொழுத்தால் வளையில் தங்காது’ என்றொரு கிராமத்துப் பழமொழி உண்டு. தொல்லியல் துறை சார்பாக பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை அறிவிக்கும் விசயத்தில் பத்திரிக்கையாளர்களிடம் உளறிக் கொட்டிவிட்டு, பின்பு கழகத்திடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்ட பின்னர், கொஞ்ச நாட்களாக நவதுவாரங்களையும் அடக்கிக் கொண்டு தனது இந்தி வளர்ப்புத் தொழிலில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த அமைச்சர் பாண்டியராஜன் திடீரெனக் கழகத் தலைவர் அவர்களை விமர்சித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தனது ‘ராஜ விசுவாசத்தை’ எப்படியேனும் காட்டிக்கொள்ள முயன்றிருக்கிறார். சில சமயங்களில் சிலருக்கு இப்படிப்பட்ட அறிகுறிகள் தென்பட்டு தான் படுத்திருக்கும் பாயைத் தானே பிராண்டிக் கொள்ளும் நிலை உருவாவது இயற்கைதான் என்றாலும், ‘வாய்க்கொழுப்பு வேட்டியில் ஒழுகும்போது’ பதில் சொல்ல வேண்டியது நமது கடமையாகிவிடுகின்றது.

கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் தொடங்கிய நாள் முதல் கழகத் தலைவர் தளபதியாரும், அவரது கண்ணசைவில் கழகத்தின் முன்னணி செயல்வீரர்கள் துவங்கி கடைக்கோடித் தொண்டர்கள் வரைக் களத்தில் இறங்கி மக்களின் துயர்துடைக்க அனுதினமும் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்ததோடு மட்டுமல்ல; மனதாரப் பாராட்டியும் கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக “ஒன்றிணைவோம் வா” என்ற மகத்தானத் திட்டத்தை, இந்தக் கொரோனா காலத்தில் கழகத் தலைவர் அறிவித்த பின்னர், தமிழ்நாடு முழுக்க எந்தப் பாகுபாடும் இன்றி இலட்சக்கணக்கான மக்கள் உணவுப் பொருட்களையும், மருத்துவ உதவிகளையும் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

திமுகவை விமர்சித்து ஆப்பசைந்த குரங்காக மாட்டிக்கொள்ள வேண்டாம் - பாண்டியராஜனுக்கு தங்கம் தென்னரசு வார்னிங்

பேரிடர் சூழலில் தங்களைக் காக்கும் கரங்களாக கழகத் தலைவர் அவர்களேயே நம்புவதால்தான் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கான நிவாரணம் வேண்டி கழகத் தலைவர் அறிவித்த ‘ஹெல்ப்லைன்’ தொலைபேசியை நம்பிக்கையுடன் அழைத்துத் தங்கள் தேவைகளைக் கோரியிருக்கின்றனர். கழகத்தினரின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளால் இத்தேவைகள் பெருமளவில் தீர்க்கப்பட்டு தேவையான உதவிகள் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு உள்ள நிலையில், எஞ்சிருக்கும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது என்பது, ‘யாருக்கு வந்த விருந்தோ’ என்ற அலட்சிய மனப்பான்மையில் தூங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசைத் தட்டி எழுப்புவதற்கன்றி வேறல்ல!

கொரோனா நோய்த் தொற்று பரவலாகி அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், ‘புலிக்குப் பயந்தவர்கள் என்மீது படுத்துக் கொள்ளுங்கள்’ என்று பதுங்கு குழிகளுக்குள் அடைக்கலமாகி விட்ட அமைச்சர்தான் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்திற்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வரவேற்பைக் காணச் சகிக்காத வயிற்றெரிச்சலால் இன்றைக்கு அம்மிக்குழவியை எடுத்து அடிவயிற்றில் இடித்துக் கொண்டிருக்கிறார்.

மூன்றே நாட்களில் கொரோனாவை அடியோடு ஒழித்து விடுவோம் என்று முழங்கிய முதலமைச்சர் இன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டிச் செல்வதை தடுக்க வகையில்லாமல் “மக்கள்தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்று கையறு நிலைக்குத் தமிழக மக்களைத் தள்ளிவிட்டிருக்கின்றர்.

திமுகவை விமர்சித்து ஆப்பசைந்த குரங்காக மாட்டிக்கொள்ள வேண்டாம் - பாண்டியராஜனுக்கு தங்கம் தென்னரசு வார்னிங்

அரைத் தூக்கத்தில் இருந்து எழுந்த அமைச்சர் பாண்டியராஜனோ “தன்னைப் பெற்ற தாய் பிச்சை எடுக்கையிலே பிள்ளை வீரவாளிப் பட்டுக்கு அழுத கதையாக” கொரோனா பிடியில் கடந்த இருமாதங்களாக வாழ்வாதாரம் இழந்து ஏழை மக்கள் கண்ணீர் மல்க கைபிசைந்து நிற்கையில் ஓடோடிப்போய் அதைத் தடுத்து நிவாரணம் வழங்காமல் கடந்த வருடம் முதலமைச்சர் அறிவித்த ஏதோ ஒரு திட்டத்தைச் சொல்லி இன்றைக்கு விளம்பர சுகம் காண விழைகின்றார்.

பேரிடர் காலங்களில் கழகம் இன்றைய ஆட்சியாளர்களைப் போல நெடுஞ்சாலைத் துறை டெண்டர்களை முடிவு செய்யும் வேலையில் மும்மரமாக மூழ்கியிருக்கவில்லை. மாறாக மக்களோடு மக்களாகக் களத்தில் அவர்கள் துயுர் துடைக்கும் பணியில் எங்கள் தலைவர் இருக்கின்றார்.

ஊழலில் திளைத்திருக்கும் உங்களைப் பார்த்து பாரத் நெட் டெண்டரை நிறுத்தி வையுங்கள் என்று மத்திய அரசே சொன்னபிறகு, அண்ணாந்து பார்த்து எச்சில் துப்பும் வேலையை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இனியாவது முழுமையான நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

கழகத்திற்கு மக்களிடையே ஏற்பட்டிருக்கும் பெரும் செல்வாக்கையும், ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பையும் கண்டு அமைச்சர் பாண்டியராஜன் தனது ‘காந்தாரி மனம்’ பதறுவதை விடுத்து ஆக்கபூர்வமான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளட்டும். அதைச் செய்ய மனமில்லாவிட்டால் அனவரதமும் எடப்பாடியை புகழ்ந்து பாடி கிடைத்த பதவியில் எப்படியேனும் ஒட்டிக் கொள்ளும் ‘பாணபத்திர ஓணாண்டியாக’ தன் வாழ்வை தொடரட்டும். மாறாக எஃகு கோட்டையான தி.மு.கழகத்தை விமர்சித்து “ஆப்பசைந்த குரங்காக” மாட்டிக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கிறேன்.” என தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories