தமிழ்நாடு

“எடப்பாடி அரசு எனும் ஜாடிக்கு ஏற்ற மூடியாக இருக்கிறார் தலைமை செயலாளர் சண்முகம்” : டி.ஆர்.பாலு ஆவேசம்!

எடப்பாடிக்கு ஏற்ற தலைமை செயலாளராக சண்முகம் அமைந்திருக்கிறார் என தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு சாடியுள்ளார்.

“எடப்பாடி அரசு எனும் ஜாடிக்கு ஏற்ற மூடியாக இருக்கிறார் தலைமை செயலாளர் சண்முகம்” : டி.ஆர்.பாலு ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா ஊரடங்கால் முடங்கியுள்ள ஏழை எளிய மக்களுக்கு தி.மு.க-வின் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் கீழ், நிவாரணப் பொருட்கள், அத்தியாவசிய தேவைகளான மருந்துகள் என அனைத்தும் நேரடியாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, “மக்கள் எங்களிடம் வைத்த 15 லட்சம் கோரிக்கைகளுக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றிவரும் இவ்வேளையில், 1 லட்சம் பிரதான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு அனுப்பி அவர்களை செயல்பட வைக்கப்போகிறோம்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து, தி.மு.க மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் நேரில் சென்று மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஒப்படைத்தனர். அவ்வகையில், நேற்று மாலை 5 மணியளவில் தி.மு.க மக்களவை எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்து மக்களின் கோரிக்கை மனுக்களை ஒப்படைத்தனர்.

அப்போது, தி.மு.க எம்.பி.க்களை தலைமைச் செயலாளர் அவமரியாதை செய்யும் விதமாக நடந்துகொண்டுள்ளார். இதனால் தி.மு.க எம்.பி.க்கள் அதிருப்தியடைந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன் எம்.பி, தலைமைச் செயலாளர் தங்களை மூன்றாம் தரமாக நடத்தியதாக குற்றம்சாட்டினார். தலைமைச் செயலாளரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தலைமை செயலாளர் சண்முகம் தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையென்றால், இப்பிரச்சினையை நாடாளுமன்ற உரிமைக்குழுவுக்கு எடுத்துச் சென்று தலைமைச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“எடப்பாடி அரசு எனும் ஜாடிக்கு ஏற்ற மூடியாக இருக்கிறார் தலைமை செயலாளர் சண்முகம்” : டி.ஆர்.பாலு ஆவேசம்!

இதுகுறித்து தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று மாலை 5 மணியளவில் தி.மு.க மக்களவை எம்.பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் நானும் தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் சந்தித்தோம்.

அதாவது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் “ஒன்றிணைவோம் வா” திட்ட வேண்டுகோளுக்கு ஏற்ப அரசு உதவி கோரி ஒரு லட்சம் மக்கள் கொரோனா நோய் நிவாரண மனுக்களை ஒப்படைத்துள்ளனர். இதனை அரசிடம் ஒப்படைத்து உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி சந்தித்தோம்.

நாங்கள் மூத்த எம்.பிக்கள் மற்றும் மத்திய அரசின் முன்னாள் அமைச்சர்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல் மரியாதைக்குறைவாக தலைமை செயலாளர் சண்முகம் நடந்து கொண்டார். அதாவது குறைந்தபட்ச வரவேற்பு முறைகளைக் கூட பின்பற்றவில்லை. இருப்பினும் நாங்கள் பொறுமையோடு “ஒன்றிணைவோம் வா” செயல் திட்டம் பற்றி விளக்கினோம்.

இதன் கீழ் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான மனுக்களை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் நிர்வாகிகளுக்கு அனுப்பி வைத்த விவரத்தை தெரிவித்தோம். அரசு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரிடம் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.

ஆனால், தலைமை செயலாளர் சண்முகம் உரிய கவனம் செலுத்தாமல் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். மேலும் கலாநிதி வீராசாமி வேண்டுகோளின் படி தொலைக்காட்சியின் இரைச்சல் ஒலியை குறைக்கச் சென்ற ஊழியரையும் தடுத்துவிட்டார்.

இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். இதற்கான காலக்கெடுவின் விவரம் பற்றி கேட்டோம். அதற்கு எப்போது நடவடிக்கை எடுக்கமுடியும் என்று சொல்ல முடியாது என்றார்.

மேலும் எடுத்தெறிந்து பேசும் விதமாக "This is the problem with you people" என்று பொறுப்பற்ற முறையில் உரத்த குரலில் கூறினார். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு தயவு செய்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினோம். அதற்கு “என்ன வெளியில் போய் பிரஸ்ஸை பார்க்க போகிறீர்களா? அவர்களிடம் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்” என்று இறுமாப்புடன் கூறினார்.

“எடப்பாடி அரசு எனும் ஜாடிக்கு ஏற்ற மூடியாக இருக்கிறார் தலைமை செயலாளர் சண்முகம்” : டி.ஆர்.பாலு ஆவேசம்!

எங்களை கண்ணியக் குறைவாக நடத்தியதோடு வேண்டுமென்றே அவமரியாதை செய்த தலைமை செயலாளர் சண்முகம் அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் தனது செயலுக்கு உடனடியாக வருத்தமும் மன்னிப்பும் கேட்க வேண்டும். இல்லையெனில் இந்தப் பிரச்னையை நாடாளுமன்ற உரிமைக்குழுவிற்கு எடுத்துச் சென்று தலைமை செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எடப்பாடிக்கு ஏற்ற தலைமை செயலாளராக, ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதை போன்று அமைந்திருக்கிறார். இவர்களெல்லாம் ஜனநாயக கட்டமைப்பை கண்ணியம் காத்திடும் முறையில் பணியாற்றினார்களா என்று சந்தேகமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories