‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் மூலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று (24-04-2020), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கொரோனா பேரிடர் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கோடு தி.மு.க சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டம் குறித்து காணொளிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள, பொதுமக்களுக்கான உதவி எண்ணான "90730 90730" என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிவித்த குறைகள் மற்றும் பிரச்னைகளுக்கு எட்டப்பட்ட தீர்வுகள் குறித்து, சென்னை மற்றும் ஈரோடு வருவாய் மாவட்டங்களுக்குட்பட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஆகியோரைக் காணொளிக் காட்சி மூலமாகத் தொடர்புகொண்டு விசாரித்தறிந்தார்.
‘ஒருங்கிணைவோம் வா!’ திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்தப் பாடுபடும் கழக முன்னணியினர் மற்றும் நிர்வாகிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த கழகத் தலைவர் அவர்கள் - அப்பணி மேலும் செம்மையாக நடைபெற தமது ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.