ஆந்திராவை சேர்ந்தவர் பிரபல நடிகர் கோட்டா ஸ்ரீனிவாசன் ராவ். 1978-ல் திரையில் அறிமுகமான இவர், தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். அதன் தொடர்ச்சியாக இந்தி படத்தில் நடித்த இவர், தமிழில் ஹரி இயக்கத்தில் கடந்த 2003-ல் விக்ரம் நடிப்பில் வெளியான 'சாமி' படத்தில் நடித்தார். அதில் பிச்சை பெருமாள் கதாபாத்திரத்தில் நடித்த இவர், வெகுவாக பாராட்டப்பட்டார்.
தெலுங்கு ரசிகர்களை தொடர்ந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார். அதன்பிறகு தமிழில் குத்து, ஏய், உள்ளிட்ட படங்களில் நடித்தார். பின்னர் விஜயின் திருப்பாச்சி படத்தில் 'சனியன் சகடன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமானார். பின்னர் தொடர்ச்சியாக தாண்டவம், சகுனி, கோ என படங்களில் சீரியஸாக நடித்து, 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படத்தில் காமெடி ரோலில் நடித்தார். அதில் கார்த்தி, சந்தானத்துக்கு விளம்பரம் கொடுக்கும் நபராக காமெடியில் அசத்தியிருப்பார்.
இப்படி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த இவர், 2015-ல் இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான 'பத்ம ஸ்ரீ' விருதை பெற்றார். இதனிடையே 1999 - 2004 ம் ஆண்டு வரை விஜயவாடா தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளார். இந்த சூழலில் உடல்நலக்குறைவு காரணமாக நடிப்பில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த இவர், இறுதியாக 2023-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'சுவர்ண சுந்தரி' படத்தில் நடித்தார்.
அதன் பிறகு, உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே இருந்து வந்த இவர், அண்மையில் பிரபல தயாரிப்பாளர் பந்த்லா கணேஷை சந்தித்தார். கோட்டா ஸ்ரீனிவாச ராவுடன், தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பந்த்லா கணேஷ் பகிர்ந்தார். அப்போது கோட்டா சீனிவாசனின் நிலையை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானர்.
மேலும் அவர் பலவீனமடைந்து காலில் கட்டு கட்டுடன் காணப்பட்டதால், அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இதனிடையே 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், சமூக வலைதளங்கள் தன்னை கொன்றுவிட்டதாகவும், தான் இறந்துவிட்டதாக வந்த செய்தி மிகவும் வருத்தமளிப்பதாவும் வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது 83 வயதாகும் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நிலை பிரச்சினை காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜூலை 13) காலை காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு ஆந்திர திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.