சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த மாதம் தனியார் மதுபான விடுதி ஒன்றில் தகராறில் ஈடுபட்டதாக அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத், அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது அதிமுக ஐடி விங் நிர்வாகி பிரசாத் குறித்து விசாரித்தபோது அவர் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி வழக்கு உள்ளது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரது மொபைல் போன் உள்ளிட்டவையை சோதனை செய்தபோது அவர் பிரதீப் என்ற நபருடனும், அவரது ஆப்பிரிக்காவின் கானா என்ற பகுதியைச் சேர்ந்த நண்பர் ஜான் என்ற நபருடனும் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கடந்த ஜூன் 19-ம் தேதி போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் விசாரிக்கையில், பிரசாத் போதைப் பொருள் வாங்கி சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து பிரசாத் யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என்று விசாரிக்கையில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கினார். அவரிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று (ஜூன் 23) நடிகர் ஸ்ரீகாந்தும் கைது செய்யப்பட்டார். பிரசாத்திடம் நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருளை கிராம் ஒன்றுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கியுள்ளது. அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்த் 40 முறை போதை பொருள் வாங்கி உள்ளதாகவும் அதற்கான பணத்தை பிரசாத்துக்கு GPay மூலம் அனுப்பியுள்ளதாகவும் ஆதாரங்கள் இருப்பதாகவும், அதன்படி சுமார் ரூ.4 லட்சத்து 72 ஆயிரம் பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது நடிகர் ஸ்ரீகாந்த் கைது வழக்கு தொடர்பாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு :
சென்னை பெருநகரக் காவல் கிழக்கு மண்டலம் திருவல்லிக்கேணி மாவட்டம் - நுங்கம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரவு விடுதியில் கடந்த 22.05.2025ம் தேதி அன்று மது அருந்தச் சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்களின் காரணமாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 1 வழக்கில் ஒருவரும், மற்றொரு வழக்கில் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட பிரசாத் என்பவரை முழுமையாகவும், அறிவியல் பூர்வமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும், சம்மந்தப்பட்ட எதிரியின் வீட்டினை சோதனை செய்து, வங்கி பணப்பரிவர்த்தனை மற்றும் சில ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், இந்த கொலை முயற்சி வழக்கு மட்டுமல்லாமல் பல இடங்களில், பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி சுமார் ரூபாய் 2-கோடி அளவில் மோசடி செய்துள்ளார் என்பது தெரியவருகிறது.
பிரசாத் TNPSC, Chennai Corporation, Water Board, Income Tax, Railways போன்ற துறைகளில் வேலை வாங்கி தருவதாக ஒவ்வொரு நபரிடமிருந்தும் ரூபாய் 2 லட்சம் முதல் 20 லட்சம் வரை சுமார் 200 நபர்களிடம் பணம் பெற்றிருப்பது புலன ‘விசாரணையில் தெரியவருகிறது. இது சம்மந்தமாக பிரசாத்துடன் தொடர்பில் இருந்த மதுரை மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கண்ட வேலை வாய்ப்பு மோசடி சம்மந்தமாக எதிரி பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
பிரசாத் என்பவர் இதுமட்டுமல்லாமல் அவருக்கு தெரிந்த சந்தோஷ் என்பவர் மூலம் காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் உதவியுடன் தனிப்பட்ட நபர்களின் Call Details மற்றும் Location பெற்று, அவர்களை மிரட்டி பணம் பெற்றிருப்பது தெரியவருகிறது. இது சம்மந்தமாக 1 வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 உதவி ஆய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர் விசாரணையில் பிரசாத் என்பவருக்கு பெங்களுருவைச் சேர்ந்த பிரதீப் மற்றும் பிரதீப்பின் வெளிநாட்டு நண்பன் கானா நாட்டைச் சேர்ந்த ஜான் என்பவர் உட்பட சில நபர்களிடமிருந்து கடந்த 3 வருடங்களாக கொக்கைன் என்ற போதைப்பொருளை பெற்று, தனக்கு தெரிந்த நண்பர்களிடம் விற்பனை செய்துள்ளதாக தெரியவருகிறது.
இதற்காக சில இடங்களில் அவரது நண்பர்களுக்கு போதை விருந்தும் தந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது கொக்கைன் போதை மருந்து 11-கிராம் அளவிலும், இது சம்மந்தப்பட்ட பணப்பரிவர்த்தனை மற்றும் மின்னணு தொழில்நுட்ப சம்மந்தப்பட்ட ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கில் கொக்கைன் பொருளை பெற்று பயன்படுத்திய நடிகர் ஸ்ரீகாந்த் என்பவரை உரிய மருத்துவ பரிசோதனை செய்து, அவருடைய பணப்பரிவர்த்தனை, அவருடைய வீடுகள் முழுமையாகவும் சோதனை செய்யப்பட்டு உரிய ஆதாரங்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களையும், புலன் விசாரணை செய்து விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பிரசாத்தின் நண்பர் அஜய் வாண்டையார் என்பவர் சென்னையிலும் மற்றும் சில இடங்களிலும் நில உரிமையாளர்களை மிரட்டியும், வெளிநாடுகளில் வசிப்பவர்களின் நிலத்தையும் அபகரிக்கும் நோக்கத்தோடு, போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்நிலங்களை அபகரிக்கும் குற்றங்களை செய்துள்ளார்.
அந்த குற்றங்களை செய்ய உதவியாக இருந்த நாகேந்திர சேதுபதி மற்றும் சந்திரசேகர் (எ) செந்தில், சிவசங்கரன் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறாக வன்முறையின் மூலம் மற்றவர்களிடமிருந்து மோசடியாக நிலங்களை கைப்பற்றியது குறித்து IG Registration, Sub – Registrar Office, Bank Details ஆகியவை மூலம் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
அஜய் வாண்டையார் என்பவர் AJ Trust & Enterprises என்ற அமைப்பின் மூலம் இந்த பணப்பரிவர்த்தனை பற்றி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்கண்ட குற்ற செயலுக்காக அஜய் வாண்டையார் மற்றும் அவரது கூட்டாளிகளின் மீது இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதியப்பட்ட வழக்குகளில் 22 நபர்கள் கைது செய்யப்பட்டும், 5 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்திலும், கைது செய்யபட்டுள்ளனர்.
இந்த தொடர்விசாரணையில் பிரசாந்த், அஜய் வாண்டையார் மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து அரசு சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு மோசடி, நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவை சட்டவிரோதமாக பயன்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கொக்கைன், ஓஜி கஞ்சா மற்றும் பிற போதைப்பொருளை கடத்துவது, தன் வசம் வைத்திருப்பதும், உட்கொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். போதைப்பொருளை வைத்திருப்பவர்களை பற்றியும், விருந்து நிகழ்ச்சிகளில் பயன்படுத்துபவர்கள் பற்றியும் தகவல் தெரிந்தும், காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது குற்றமாக கருதப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.