சினிமா

ஜூலையில் வெளியாகும் நடிகர் தனுஷின் 2 படங்கள்.. KGF 2 படக்குழுவை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குநர்!

ஜூலையில் தனுஷ் நடித்த இரண்டு படங்கள் வெளியாகிறது.

ஜூலையில் வெளியாகும் நடிகர் தனுஷின் 2 படங்கள்.. KGF 2 படக்குழுவை பாராட்டிய பிரம்மாண்ட இயக்குநர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. ஜூலையில் தனுஷ் நடித்த இரண்டு படங்கள் ரிலீஸ்!

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு இந்தி ஆங்கிலம் என பல மொழிகளில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இதில் ஒன்று ரூஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் ஹாலிவுட் படமான `க்ரேமேன்'. பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான கிறிஸ் ஈவ்ஸ், ரேயன் கோஸ்லிங், ஆனா டி ஆடம்ஸ் ஆகியோருடன் தனுஷ் இப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஜூலை 15ம் தேதி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. இன்னொரு படம், மித்ரன் ஜவகர் இயக்கத்தில் நடித்திருக்கும் திருச்சிற்றம்பலம். தனுஷுடன், ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் - தனுஷ் கூட்டணி ஐந்து வருடத்திற்குப் பிறகு இப்படத்தில் இணைந்திருக்கிறது. ஜூலை 1ம் தேதி அல்லது தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. எனவே ஜூலை மாதம் தனுஷ் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக இருக்கிறது.

2.கே.ஜி.எஃப் 2 குழுவினரைப் பாராட்டியுள்ள இயக்குநர் ஷங்கர்!

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து 2018ல் வெளியான கன்னடப்படம் `கே.ஜி.எஃப்'. இதனுடைய இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்றது. மேலும் இதனுடைய மூன்றாவது பாகத்துக்கு இப்பொழுதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் கேஜிஎஃப் 2 படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், படம் பார்த்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். "இறுதியாக கேஜிஎஃப் 2 படத்தை பார்த்துவிட்டேன். படத்தின் கதைசொல்லும் விதம், திரைக்கதை மற்றும் எடிட்டிங் ஆகியவை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்கு கச்சிதமாக உள்ளது". வசனம் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளைப் புகழ்ந்து படத்தின் நாயகன் யஷ் நடிப்பையும் புகழ்ந்திருக்கிறார். மேலும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்ததற்கு இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

3. `வள்ளிமயில்' படப்பிடிப்பு துவக்கம்!

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் `வள்ளிமயில்'. இதில் நாயகியாக ஃபரியா அப்துல்லா நடிக்கிறார். மேலும் சத்யராஜ், பாரதிராஜா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, தம்பி ராமையா, மனிஷா யாதவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழில் எடுக்கப்பட்டாலும் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது இப்படம். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங் துவங்கியிருக்கிறது.

4.'பட்டாம்பூச்சி' படத்தின் புதிய பாடல்!

பத்ரி நாராயணன் இயக்கத்தில் சுந்தர் சி - ஜெய் நடித்திருக்கும் படம் `பட்டாம் பூச்சி'. சுந்தர் சி போலீஸாகவும், ஜெய் ஒரு சைக்கோ கொலைகாரனாகவும் நடித்துள்ளனர். மேலும் ஹனி ரோஸ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது இப்படம். ஏற்கெனவே இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. நவ்னீத் இசையமைத்திருக்கும் இப்படத்திலிருந்து தற்போது புதிய பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

5 .ஓடிடி தளத்தில் வெளியாகும் `போத்தனூர் தபால் நிலையம்'

அறிமுக இயக்குனர் பிரவீன் இயக்கி அவரே முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'போத்தனூர் தபால் நிலையம்'. இது ஒரு கொள்ளை சம்பவத்தை மையமாகக் கொண்ட பீரியட் படமாக உருவாகியுள்ளது. குறிப்பாக 90களில் ஒரு தபால் அலுவலகத்தில் நடக்கும் கொள்ளையைப் பற்றிய படமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் பிரவீன். சிறிய பட்ஜெட்டில் புதுமுகங்கள் வைத்து எடுக்கப்பட்டாலும், தரமான சினிமாவாக உருவாகியுள்ளது இப்படம். தற்போது இந்தப் படம் நேரடியாக ஆஹா ஓடிடி தளத்தில் மே 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories