சினிமா

‘8 தோட்டாக்கள்’ சினிமா பட இயக்குநருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் - பேஸ்புக்கில் வைரலாகும் பதிவு!

‘8 தோட்டாக்கள்’ பட இயக்குநர் ஸ்ரீகணேஷ் ஃபேஸ்புக்கில் பகிர்ந்த உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது.

‘8 தோட்டாக்கள்’ சினிமா பட இயக்குநருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் - பேஸ்புக்கில் வைரலாகும் பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களின் ஆதிக்கம் தற்போது வலுவாக இருந்து வருகிறது. அதே சமயத்தில், அவ்வாறு தடம் பதிக்கும் இளம் இயக்குநர்களில் பெரும்பாலானோர் வெகு சில படங்களே எடுத்துவிட்டு காணாமல் போய்விடுகிறார்கள். இருப்பினும் இதுபோன்ற இளம் இயக்குநர்களால் சினிமா மீதான ஈடுபாடு மேன்மேலும் வளர்ந்து வருகிறது.

அட்லி, லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், கார்த்திக் நரேன், விஜய் குமார் போன்ற பல இயக்குநர்கள் வரிசையில் முதல் படத்தின் மூலம் வெற்றியை கண்டவர் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.

க்ரைம், த்ரில்லர் கதை அமைப்பில் எடுக்கப்பட்ட படம்தான் 8 தோட்டாக்கள். இயக்குநர் ஸ்ரீகணேஷின் எழுத்தால் விறுவிறுப்பான கதைக்களத்தை கொண்டிருந்தது இந்த படம். இவர் பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

‘8 தோட்டாக்கள்’ சினிமா பட இயக்குநருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் - பேஸ்புக்கில் வைரலாகும் பதிவு!

மேற்குறிப்பிட்டது போல, முதல் படத்தில் வெற்றியை கண்டுவிட்டு அடுத்தடுத்த படங்களில் காணாமல் போவதும், முதல் படங்களில் தோல்வியை தழுவியிருந்தாலும் அடுத்த படைப்புகளில் வெற்றியை காண்பதும் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் திரைத் துறைக்கென எழுதப்படாத விதியாகவே உள்ளது.

அந்த எழுதப்படாத விதிக்கு 8 தோட்டாக்கள் பட இயக்குநர் ஸ்ரீகணேஷும் விதிவிலக்கல்ல. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது அடுத்த படத்தை அறிவித்திருந்தார் ஸ்ரீகணேஷ். மதுரை மாநகர் பின்னணியில் கமர்சியல் பாணியில் ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தை எழுதி இயக்குவதாக அறிவித்திருந்தார்.

அதர்வா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் படம் உருவாக இருந்தது. 2017ம் ஆண்டே படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும் இதுகாறும் படம் தொடர்ந்த தகவல் இல்லாமலே உள்ளது. முதல் படத்தில் வெற்றி கண்டுவிட்டால் கார், பங்களா என சொகுசாகதான் திரைத் துறையினர் இருப்பார்கள் என்று பொதுபுத்தி போடும் கணக்குக்கு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் உருக்கமாக பதிவிட்டுள்ளார் ஸ்ரீகணேஷ்.

‘8 தோட்டாக்கள்’ சினிமா பட இயக்குநருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் - பேஸ்புக்கில் வைரலாகும் பதிவு!

அதில், பணம் விஷயத்தில் கவனமாக, பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை இந்த 2 ஆண்டுகளில் நிறைய கற்றுக்கொண்டேன். 8 தோட்டாக்களுக்கு பின் இழந்த பணமும் நேரமும் மிக அதிகம். நிறைய மனிதர்கள் மேல் வைக்கும் நம்பிக்கையும், அன்பும் பணம் என்ற புள்ளியில் தான் பெரும்பாலும் உடைகிறது. முதல் படம் எடுக்கும் வரை இருந்த வறுமை, சூழல் வேறு.

‘பையன் தலையெடுத்துட்டான்’ என அம்மா முகத்தில் அவ்வளவு நிம்மதி. நிறைவு. இருந்த கடனை எல்லாம் அடைச்சாச்சு என நானும் பெருமூச்சு விட்ட போது, ‘குருதி ஆட்டம்’ படத்தில் சில சிக்கல்கள். எல்லா படத்திலும் நடப்பதுதான். இது அம்மாவுக்கு தெரிய வேணாம் என நினைத்தேன். இந்த வருடம் முழுவதும் நிறைய கடன் வாங்கினேன் – அம்மாவுக்கு தெரியாமல் முதல்முறையாக. நெருங்கிய நண்பர்கள் சில பேர், மீதியை வட்டிக்கு வாங்கி சமாளித்து அனுப்பிக்கொண்டிருந்தேன்.

ஏதாச்சு பண்ணனுமே என நான் தவித்துக்கொண்டிருந்த நேரத்தில், ‘குருதி ஆட்டம்’ தயாரிப்பாளரிடமிருந்து போன். சம்பள பாக்கியிலிருந்து கொஞ்சம் கொடுத்தார்கள். ‘அப்பாடா’ என இருந்தது. உடனே உதவி இயக்குனர்களை கூப்பிட்டு அவர்களுக்கும் பணம் கொடுத்து ஊருக்கு அனுப்பிவிட்டு, இப்போதைய பிரச்சனையை சமாளித்துவிடலாம் என ஊருக்கு சென்றேன் என ஸ்ரீகணேஷின் பதிவு நீள்கிறது.

இறுதியில், ஊருக்கு சென்றதும் வீட்டில் ஒரு குழந்தை விளையாடிக்கொண்டிருக்கிறான். என்னைப் பார்த்து அழகாக சிரிக்கிறான். மேலே ஏறி விளையாடுகிறான். ‘யாரும்மா’ என கேட்டால், அம்மா, ‘இந்த சாய் பாபா வண்டி ஒண்ணு வரும்பா. அவங்க குழந்தை. எல்லா வாரமும் நம்ம ஏரியாவுக்கு வரும்போதெல்லாம், இங்க விட்டுட்டு போவாங்க. அது பாட்டு விளையாடிட்டிருக்கும் என்கிறார்.

சிறிது நேரத்தில் குழந்தையின் அம்மா வர, அம்மா கொஞ்சம் பணத்தை என்னிடம் கொடுத்து, ‘அவங்களிடம் கொடுப்பா’ என்கிறார்.

‘8 தோட்டாக்கள்’ சினிமா பட இயக்குநருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம் - பேஸ்புக்கில் வைரலாகும் பதிவு!

நான் ‘என்னம்மா...’ என, ‘கொழந்தைக்கு அடுத்த வாரம் பிறந்த நாள் வருதுப்பா. இடுப்புல எதுவும் இல்லாம இருக்கான். அவனுக்கு ஒரு வெள்ளி அரைஞாண்கயிறு வாங்கணும். கைல பணமில்லையேன்னு நெனச்சிட்டே இருந்தேன்’ என்கிறார்.

சட்டென வந்த கண்ணீரை அடக்கிக்கொண்டேன். இந்த வருடத்தின் சிறந்த தருணங்களில் ஒன்றாக அந்த நிமிடம் இருந்தது. இவ்வாறு ஸ்ரீகணேஷின் பதிவு நிறைவடைகிறது.

banner

Related Stories

Related Stories