உலகம்

ஈரானின் உச்ச தலைவர் கொலை… ஈரானை குறிவைத்து தொடர் தாக்குதல் : இஸ்ரேல், அமெரிக்காவின் அட்டூழியம்!

உலகின் வல்லரசு நாடாக தன்னைக் கருதிக்கொள்ளும் அமெரிக்கா, உலக நாடுகளை எப்போதும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே விரும்பும். ஒரு நாடு தனக்கு இணங்கவில்லை எனில், வரிவிதிப்பு, தாக்குதல் என மிகவும் மோசாமான செயல்களில் ஈடுபட்டு அந்த நாடுகளை தனக்கு கீழ் கொண்டு வரும் முறையைத்தான் காலம்காலமாக செய்து கொண்டிருக்கிறது.

அதனை சற்றும் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார் அமெரிக்காவில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அதிபர் ட்ரம்ப். இதற்கு ஒத்து ஊதும் விதமாக அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது இஸ்ரேல்.

ஈரான் மீது தாக்குதல் நடத்த முக்கிய காரணமாக, ஈரான் அதிக அளவில் அணு ஆயுத உற்பத்தியை மேற்கொள்கிறது எனவும், அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் செரிவூட்டப்பட்ட யுரேனியம் அதிக அளவில் ஈரானில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இதனால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய பாதிப்பு என்கிறது. ஆனால், முக்கிய காரணமாக ஈரானில் உள்ள எண்ணெய் வளங்களே அமெரிக்காவுக்கு தேவை என்பதால் இதுபோன்று தவறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக கூறப்படுகிறது.

ஈரானில் அணு ஆயுதம் தயாரிப்பதாகவோ, அங்கு செரிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தி செய்வதாகவோ எந்த ஒரு உறுதி செய்யப்பட்ட தகவலும் இல்லை என சர்வதேச அணு சக்தி முகமை தெரிவித்துள்ளது.

ஈரானுடன் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்த 2 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப்பலனும் இல்லை என கூறி வந்த அமெரிக்கா. பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒத்துழைக்கவில்லை எனவும், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதாகவும் கூறி கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது தாக்குதலை தொடுத்துள்ளது. முதலில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்க, பின்னர் அமெரிக்காவும் சேர்ந்து கொண்டு ஈவு, இரக்கம் இல்லாமல் தாக்குதலை நடத்தி வருகின்றன.

ஈரான் மீதான தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ என்று அமெரிக்கா பெயர் சூட்டி இருக்கிறது. ‘ரோரிங் லயன்' என்று பெயர் சூட்டி இருக்கிறது இஸ்ரேல். ஈரான் தலைநகர் டெஹ்ரான் முழுவதும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. புகை மண்டலமாக ஈரானின் நகரங்கள் காட்சி தருகிறது. ஒரே நாளில் 200க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய சில மணி நேரங்களில் அமெரிக்காவும் இணைந்த நிலையில், இந்த தொடர் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உட்பட பலர் கொல்லப்பட்டனர். ஈரான் நாட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டதால் மத்திய கிழக்கு பகுதியில் பெரும் போர் பதற்றம் உருவானது.

இதற்கு பதில் தாக்குதலாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதில் மத்திய இஸ்ரேலை குறிவைத்து ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலில் பல கட்டடங்கள் இஸ்ரேலில் உருக்குலைந்தது.

இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தை குறிவைத்த ஈரான் ஏவுகணைகளை, இஸ்ரேல் இடைமறித்து அழித்தது. குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரானின் ஆளில்லா டிரோன் தாக்கியது. துபாய், கத்தார் தலைநகர் தோஹாவில் பலத்த தாக்குதல் நடந்தது. மேலும், துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகத்தில் ஏவுகணையின் பாகங்கள் விழுந்ததில் கப்பல் தளம் கரும் புகையுடன் காட்சி அளித்தது.

ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் ஈரானும் அமெரிக்காவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன. “கடந்த சில மாதங்களில் ஈரான் மீது அமெரிக்கா இரண்டாவது முறையாகத் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இது ஆக்கிரமிப்பு நடவடிக்கை, மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றம்" என்று ஈரான் குற்றம் சாட்டி இருக்கிறது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களில் ஈரான் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டதாகவும், ஒரு இந்தியர் உட்பட 58 பேர் காயம் அடைந்ததாகவும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது. குறிப்பாக பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நடந்த தாக்குதலில் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க நிலையை தாக்கி அழித்ததில் 560 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

3 நாட்களில் பல்வேறு தாக்குதலுக்கு உள்ளான ஈரான் தற்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று (மார்ச் 03) தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில் ஈரான் மிகவும் தாமதமாக பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது. இதற்கு மேல் ஈரானுக்கு இரக்கம் காட்ட மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

இந்தப்போர் இன்னும் ஒரு மாதம் வரை நீடிக்கும் எனவும், இதனால் ஈரானுக்கு தான் முழுபாதிப்பு ஏற்படும் என்பதால், ஈரான் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையக் கோருகிறது அமெரிக்கா.

இதற்கு பதிலளித்துள்ள ஈரான், “இந்தப்போரினால், ஈரானின் உச்ச தலைவர் முதல் அப்பாவி பொதுமக்கள் உயிர் வரை பறிபோகியுள்ளது. நாங்கள் ஒருபோதும் பேச்சுவார்த்தைக்கு செல்லப்போவதில்லை. அமெரிக்க இதற்கு உரிய விலை கொடுத்தே ஆக வேண்டும்” என கூறுகிறது.

இதனால் போர் எப்போது முடியும் என்ற நிச்சயமற்ற நிலை தொடருகிறது. குறிப்பாக இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த ஈரானுக்கு ஆதரவாக இல்லாமல், இந்தியா அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் சாதகமாக நடந்து வருகிறது.

இது போன்ற ஒரு சூழலில், போரில்லா பூமியை அடுத்த தலைமுறை காணுமா, இல்லை அடுத்த தலைமுறையே இருக்குமா என்ற நிலைதான் ஈரானில் நிலவுகிறது.

Also Read: “இன்னொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் எப்போது நிறுத்தும்?”: முரசொலி காட்டம்!