உலகம்

இஸ்ரேல் - பலஸ்தீன போர் : மேலும் 11 பிணைக்கைதிகள் விடுவிப்பதாக ஹாமாஸ் அறிவிப்பு !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் ராணுவத்தை அனுப்பியது. அதோடு இஸ்ரேல் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்,பல லட்சம் பாலஸ்தீனியர்கள் வெளியேறியுள்ளனர்.

இதனிடையே 15 மாதம் தொடர்ந்த இந்த போரில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேலும், பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 7 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்த நிலையில், அதற்கு பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் இருக்கும் 290 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது விடுவிக்கப்பட உள்ள பிணைக்கைதிகள் 11 பேரின் பெயர் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. இதில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 5 பேர் மற்றும் இஸ்ரேலை சேர்ந்த 3 பேர் இன்று விடுவிக்கப்படவுள்ளனர்.

Also Read: மோடியின் ஆட்சி மீது நம்பிக்கை இழக்கும் இந்தியர்கள் - C Voter நிறுவனம் நடத்திய ஆய்வில் வெளியான தகவல் !