உலகம்

'X' கணக்கு தொடங்க கட்டணம் : புதிய அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க் - இந்தியாவுக்கு திட்டம் வருவது எப்போது?

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இதனிடையே ட்விட்டரை கைப்பற்றிய கையோடு இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' பெற மாதம் இந்திய மதிப்பில் ரூ.719 சந்தா கட்ட வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்தார். இதுதவிர ப்ளூடிக் முறையிலும் எலான் மஸ்க் மாற்றத்தை கொண்டுவந்தார். அதன்படி தனிநபர், தனியார் அமைப்புகளுக்கு ப்ளூ டிக், அரசியல் பிரமுகர்கள், அரசு சார்ந்த அமைப்புகளுக்கு சாம்பல் நிற டிக், தொழில் சார்ந்த நிறுவனங்களின் கணக்குகளுக்கு மஞ்சள் டிக் என அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர் தற்போது மற்றொரு மாற்றமாக ட்விட்டரில் இனி வெரிபைட் பயனர்கள் ஒரு நாளைக்கு 10,000 ட்விட்களை மட்டுமே பார்க்க முடியும் என்று எலான் மஸ்க் அறிவித்தார். இதற்கு மேலாக ட்விட்டர் நிறுவனத்தின் பெயரையே 'X' என மாற்றி அதிரடி காட்டினார்.

இந்த நிலையில், 'X' சமூக வலைத்தளத்தில் புதிய கணக்கு துவங்குவோர் மற்றும் சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருப்போர், ஆண்டுக்கு இந்திய மதிப்பில், 83 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 'X' சமூக வலைத்தளத்தில் ஏராளமான போலி கணக்கு வைத்துள்ளவர்கள் இருக்கிறார்கள் என எலான் மஸ்க் ஆரம்பத்தில் இருந்தே விமர்சித்து வந்தார்.

அதனை குறைக்கும் வகையில் தற்போது 'X' சமூக வலைத்தளத்தில் புதிய கணக்கு துவங்குவோர் மற்றும் சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருப்போர் கட்டணம் செலுத்த வேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு இந்திய மதிப்பில், 83 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், இப்படி கட்டணம் செலுத்துவோர் மட்டுமே லைக், ரீபோஸ்ட், புக்மார்க் செய்வது ஆகிய வசதிகளை பெறமுடியும் என கூறப்பட்டுள்ளது.இந்த திட்டம் நியூசிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், விரைவில் உலகம் முழுவதும் இது விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: நீட் தேர்வு : 40 தற்கொலைகளுக்கு பின்பும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இரக்கம் வரவில்லை - முரசொலி விமர்சனம் !