உலகம்

மனிதகுலம் அழிந்து போகும்.. COP27 மாநாட்டில் உலக நாடுகளை எச்சரித்த ஐ.நா.பொதுச் செயலாளர் Antonio Guterres!

சுற்றுச்சூழல் சீர்கேட்டின் காரணமாக உலகம் முழுவதும் அசாதாரணமான வகையில் காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதோவொரு மூலையில் 23 ஹெக்டேர் நிலம் வளத்தை இழந்தும் மரங்களை இழந்தும் பாலையாகிக் கொண்டிருக்கிறது .

அதுமட்டுமின்றி, பனிப்பாறைகள் உருகி உலகில் உள்ள பெரும்பாலான நகரங்கள் நீரில் முழ்கும் என்றும் ஐ.நா. எச்சரித்திருந்தது. இந்நிலையில் அதிகரிக்கும் புவி வெப்ப மயமாதலால் அண்டார்டிக்கா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

அதேபோல், இந்தியாவின் மேற்பரப்பில் பரந்துவிரிந்துகிடக்கும் பனிப்பாறைகள் நிறைந்த இமயமலையில் பருவநிலை மாற்றத்தால் பனிப்பாறைகள் உருகுகின்றன. சமீபத்தில் கூட சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள், அதன் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது.

அதில், காலநிலை மாற்றமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் பருவநிலை மாற்றங்களால் அதிக உயிரிழப்பு இந்தியாவில் நடந்திருப்பதாகவும், அதேபோல பருவநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் உலக அளவில் இந்தியா 5வது இடத்தில் இருப்பதாகவும் அதிர்ச்சி புள்ளிவிவரமும் இதில் வெளியாகியுள்ளது.

உலக அளவில் காலநிலை மாற்றங்களால் அதிக இழப்பைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், 1999ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 17வது இடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதேபோல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் காலநிலை மாற்றத்தால் பேரழிவை சந்தித்து உள்ளது.

இந்த கால நிலை மாற்றத்தை தடுக்க வேண்டும் என்றால் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்தால் மட்டுமே முடியும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா சார்பில் காலநிலை மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கால நிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் இந்த ஆண்டு கால நிலை மாநாடு எகிப்தில் உள்ள ஷர்ம் அல் ஷேக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் உலகின் 198 நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் பேசிய ஐ.நாவின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கால நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் அழிந்துபோக வேண்டும் என ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறிய அன்டோனியோ குட்டரர்ஸ், "நாம் கால நிலை மாற்றம் என்ற நகரத்திற்குள் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. விரைந்து நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பாதிப்புகளை யாராலும் தடுக்க முடியாது.

இனியும் கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டுகொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. எனவே கால நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த பணக்கார நாடுகளும், ஏழை நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மனிதகுலத்தின் கண் முன்னே ஒரே தேர்வுதான் உள்ளது. ஒன்று கால நிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அதிலேயே சிக்கி அழிந்துவிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்.. பேரிடர்களை இனி தடுக்க முடியாது” : GLASGOW மாநாடு ஏன் முக்கியமாகிறது?