Viral
தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் புது ரத்தம் பாய்ச்சிய நான் முதல்வன் திட்டம்: வைரலாகும் கல்வியாளர் பதிவு!
தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன், ஒன்றிய அரசின் UPSC தேர்வில் மாநில தரவரிசையில் முதலிடத்தையும், மோனிகா என்பவர் 39-வது இடத்தையும் பிடித்து சாதனை புரிந்துள்ளனர். மேலும் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 57 மாணவர்கள் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, எழை,எளிய மாணவர்களின் கனவை நிறைவற்றிய திராவிட மாடல் அரசின் நான் முதல்வன் திட்டத்தினை கல்வியாளர்களும், பெற்றோர்களும் வாழ்த்தி வருகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இணை இயக்குநரும், IAS தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பவருமான சங்கர் சரவணன் தனது, நான் முதல்வன் திட்டத்தின் அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு இந்தியக் குடிமைப் பணித் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 57 தம்பி தங்கைகள் தேர்வாகியுள்ளனர். CM fellow ஆக இருக்கும் காமராஜ் வெற்றி பெற்றுவிட்டார்; CM fellow ஆக இருக்கும் கௌசிகா வெற்றி பெற்றிருக்கிறார். என்னிடம் தமிழ் படித்த தங்கை ஜி ஜி அகில இந்திய அளவில் 25வது இடம் பெற்றிருக்கிறார். பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் சங்கர பாண்டியன் முழுத்தேர்வையும் தமிழிலேயே எழுதி வெற்றி பெற்றிருக்கிறார். இப்படி பல தகவல்கள் அலைபேசியில் வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது சிஎம் ஃபெல்லோவாக இருக்கும் தம்பி அருண்குமாரும் தங்கை மைவிழியும் மாறி மாறி தகவல்களைப் பகிர்ந்தார்கள். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெற்றியாளர்கள் எண்ணிக்கை பெருகியதற்கு நான் முதல்வன் திட்டம், CM பெல்லோஷிப் ஆகிய இரண்டும் மிக முக்கிய காரணங்கள்.
"நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தி அதில் அதிக மதிப்பெண் பெறும் மொத்தம் 1000 மாணவர்கள் தலா ₹7,500 உதவித்தொகையாக 10 மாதங்கள் உதவித்தொகையை பெற்றுள்ளனர்.
559 மாணவர்கள், முதன்மைத் தேர்வுக்கான தயாரிப்பிற்காக ₹25,000 உதவித்தொகை பெற்றுள்ளனர். இவர்களில் 134 மாணவர்கள் UPSC சிவில் சர்வீஸ் தேர்வின் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர்.
இறுதியாக, 50 மாணவர்கள் — இவர்கள் அனைவரும் நான் முதல்வன் திட்டம் மூலம் பயனடைந்தவர்கள் — UPSC இறுதித் தேர்வில் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதில், 18 மாணவர்கள் அரசு அரசு பயிற்சி மையத்திலேயே தங்கி பயிற்சி பெற்றவர்களாகவும் உதவித்தொகையும் பெற்றவர்களாகவும் உள்ளனர் என்று நான் முதல்வன் திட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார் என் மாண்புமிகு மாணவர்களில் ஒருவரும் தற்போது அண்ணா மேலாண்மை பயிற்சி கல்லூரி மற்றும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் கூடுதல் இயக்குனராகவும் இருக்கும் தம்பி சுதாகரன்.
தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 57 மாணவர்கள் UPSC இறுதித் தேர்வில் தேர்வாகியுள்ளனர். இவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தின் பயனாளிகள். தகுதி வாய்ந்த தம்பி தங்கைகளின் UPSC தொடர் முயற்சிக்கு பொருளாதார ரீதியாக முட்டுக் கொடுக்க முடியாமல் தினறும் குடும்பங்களுக்கு நான் முதல்வன் திட்டம் ஒரு நல் வாய்ப்பாக அமைந்துள்ளது.
2025–26 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான அறிவிப்பின் படி, நேர்முகத் தேர்வுக்குத் தேர்வாகும் மாணவர்களுக்கு ₹50,000 உதவித்தொகை வழங்க அரசு அறிவித்துள்ளது. அரசு வழங்கும் இந்த உதவித்தொகைகள் யுபிஎஸ்சி மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்குப் பயிலும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக இந்தத் தேர்வுப் பயிற்சி வல்லுனர்களாக பல காலம் இயங்கி வரும் என் நண்பர்கள் ஆன அறம் அகாடமி செந்தில், சங்கர் அகாடமி சந்தோஷ், அப்பல்லோ சாம் ராஜேஷ்வரன், வெற்றி சண்முகம், கிங் மேக்கர்ஸ் சத்யஸ்ரீ பூமிநாதன் எனப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பலமுறை எழுதிய மாணவர்கள் எளிதில் வெற்றி பெறும் வகையில் கிட்டத்தட்ட அதே மாதிரி முதல் கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு, ஆளுமைத் தேர்வு ஆகியவற்றை நடத்தி ஆண்டுதோறும் 25 மாணவர்களுக்கு CM Fellowship வழங்கப்படுகிறது. இவர்கள் பெறும் மாத உதவித்தொகை ரூபாய் 75,000. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளோடு தொடர்பில் இருக்கும் இந்த பெலோஷிப் மாணவர்கள் அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வார்கள். இரண்டு ஆண்டு பயிற்சி முடித்த பின்னர் அரசுத் துறையிலேயே பணியாற்றுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கின்றன. அல்லது அண்ணா பல்கலைக்கழகம் வாயிலாகய் பொது நிர்வாக மேலாண்மையில் முனைவர் பட்டம் பெறுவதற்கும் அரசு வழிவகை செய்துள்ளது. இந்த அரிய திட்டம் இந்திய குடிமைப் பணிக்கு தயாராகும் தமிழ்நாட்டு மாணவர்கள் மத்தியில் புது ரத்தம் பாய்ச்சி உள்ளது. நான் கடந்த 25 ஆண்டுகளாக ஐஏஎஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ் கற்பித்து வருகிறேன். இப்பொழுதுதான் முதல்முறையாக என்னிடம் பயின்ற மாணவி ஒருவர் அகில இந்திய அளவில் 25வது இடத்தில் தேர்வாகி இருக்கிறார்.
இதனால் நான் எல்லையற்ற உற்சாகம் அடைந்திருக்கிறேன் என்று என் மனைவி உஷாவிடம் சொன்னேன். அதற்கு என் மனைவி உங்களை விடவும் எனக்கு அதிக உற்சாகம் என்றார். என் மாணவியின் வெற்றி குறித்தா? என்றேன். இல்லை... தமிழ்நாடு அரசு திட்டங்களில் வெற்றி குறித்து என்றார் . தலைமைச் செயலக ஊழியர் என்ற பெருமிதம் அவருக்கு.
தம்பி தங்கைகள் எல்லோருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள். கவிஞர் நெல்லை ஜெயந்தா சொல்வது போல், "புத்தகங்களை மேலிருந்து கீழாக வாசியுங்கள்; அவை உங்களை கீழிருந்து மேலே தூக்கி விடும்".
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!