தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டமான, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவச்சந்திரன், ஒன்றிய அரசின் UPSC தேர்வில் மாநில தரவரிசையில் முதலிடத்தையும், மோனிகா என்பவர் 39-வது இடத்தையும் பிடித்து சாதனை புரிந்துள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் நாள், “‘நான் முதல்வன், நான் முதல்வன், நான் முதல்வன்’ என்று சொல்லிப் பாருங்கள். உங்களுக்குள் ஒரு சக்தி பிறக்கும்.
உங்களுக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கும். உங்களுக்கு ஒரு தைரியம் பிறக்கும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் நன்மை, தற்போது, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 50 பேர் UPSC தேர்வில் வெற்றிபெற்றுள்ளனர் என்ற செய்தி வழி வெளிப்பட்டுள்ளது.
இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளத்தில், “நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் இலட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது!” என பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, UPSC தேர்வில் வெற்றி பெற்ற மாணர் சிவச்சந்திரன் அளித்த பேட்டியில், “நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றதால் நான் இன்று தேச்சி பெற்று இருக்கிறேன். எந்த தனியார் பயிற்சி மையத்திற்கும் செல்லாமல் சுயமாக பயற்சி எடுத்துவந்தபோது தான், நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்தேன். இந்தப் பயிற்சி எனக்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது. இத்திட்டத்தை கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.