Viral
‘காசு ரொம்ப செலவாச்சாப்பா’: அழகாய் அன்பாய் அம்மாவின் முதல் விமானப் பயணம் - கனவை நிறைவேற்றிய தமிழக இளைஞர்!
பேருந்து, ரயில் பயணங்கள் எல்லோருக்கும் பயன்படுத்தக் கூடிய ஒரு போக்குவரத்தாகவே இருந்து வருகிறது. ஆனால் விமானப் பயணம் இன்றும் பலருக்கும் கனவாகவே இருக்கிறது. இதற்குக் காரணம் விமானத்தின் கட்டணம்தான். இருந்தாலும் ஒருமுறையாவது விமானத்தில் பயணம் செய்திட வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. இது சிலருக்கு நிறைவேறும். பலருக்கு நிறைவேறாமலே போய்விடும்.
இந்நிலையில் இணையவாசி ஒருவர் தனது அம்மாவின் முதல் விமான பயண அனுபவத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்தது வைரலாகி வருகிறது. ச.அழகு சுப்பையா என்ற இணையவாசி தனது அம்மாவை முதல்முறையாக மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.
இந்த அனுபவத்தைத் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "அம்மாவினுடைய முதல் விமானப் பயணம். அம்மாவுக்கு இப்படியொரு ஆசையெல்லாம் நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பேயில்லை. ஆனால், இது என்னுடைய நீண்ட நாள் கனவு… ஆசை… அம்மாவுக்கு இந்தப் பயணம் முழுவதும் ஏன் இந்த வீண் செலவு என்பது மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.
என்னப்பா நகராம ஒரே இடத்திலேயே வண்டி நிக்குது என்பது மட்டுமே கேள்வியாக இருந்தது. “மேகத்தப்பாரு த்தா… வீடெல்லாம் எவ்ளோ சின்னதா இருக்கு பாரு த்தா… நம்ம ஊர்ல இருந்து திருப்புவனம் போற நேரத்துல வந்துட்டோம் பாரு த்தா” என எனக்கோ, எல்லாவற்றையும் தாண்டி அம்மாவை மேகத்தின் ஊடே அழைத்துப் போகிறோம் என்ற பெருமிதம் மட்டுமே தொற்றிக்கொண்டிருந்தது. என்னைப் போன்றவர்களுக்கு இது பெருமிதம்தான்.
அம்மாவுடனான மேகக் கூட்டங்களுக்கிடையேயான பயணம்… அழகாய்… அன்பாய்… இருந்தது" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த எல்லோரும் ச.அழகு சுப்பையாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படத்தின் இறுதி காட்சியில் விமானத்தில் பயணித்து வெளியே வரும் மூதாட்டிகளின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை போல்தான் எல்லோருடைய கனவாக இருக்கிறது. அழகு சுப்பையா போன்றவர்களால்தான் இந்த மகிழ்ச்சியை நாம் நிஜத்திலும் காண்கிறோம்.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !