Tamilnadu

கன்னத்தில் பலார்: அரசு பேருந்து நடத்துநரைத் தாக்கிய கல்லூரி மாணவர்கள் - பாதுகாப்பற்ற த.வெ.க அரசு!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த கன்னியம்மன் நகரில் இருந்து நேற்று மாலை தடம் எண் ‘61 k’ கொண்ட மாநகர பேருந்து, 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆவடி நோக்கிப் புறப்பட்டது. இந்த பேருந்து ‘வேல்டெக்’ பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, அங்குள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 6 மாணவர்கள் பேருந்தில் ஏறினர்.

அவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர். மேலும், பேருந்தின் பின்பக்க தானியங்கி கதவு மூடாதவாறு அங்கிருந்த கல்லை எடுத்து கதவின் இடுக்கில் வைத்து அடைத்துள்ளனர்.

இதனைப் பார்த்த பேருந்தின் நடத்துநர் சர்வேசன் (50), கதவில் வைக்கப்பட்டிருந்த கல்லை அகற்றிவிட்டு, மாணவர்களைப் படிக்கட்டில் பயணிக்க வேண்டாம் என்றும், பேருந்தின் உள்ளே வருமாறும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் நடத்துநர் சர்வேசனுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பேருந்து கன்னடபாளையம் நிறுத்தத்திற்கு வந்தபோது, கீழே இறங்கிய அந்த 6 மாணவர்களும் நடத்துநரை மீண்டும் தகராறில் இழுத்து, அவரை சரமாரியாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டனர். நடத்துநருக்கு ஆதரவாகப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 5 பேருந்துகள் வரை வழியிலேயே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர், நடத்துநரைத் தாக்கிய கல்லூரி மாணவர்கள் மீது உரியச் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் சுமார் அரை மணி நேரம் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன.

த.வெ.க ஆட்சியில், அரசு பேருந்து ஊழியர்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சத்திற்குற்குக் கொண்டு வந்துள்ளதாகப் பேருந்து ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “மீனவ மக்களின் வாழ்க்கையைக் கபளீகரம் செய்யும் மாஃபியா அரசு” : விஜய்யை Left Right வாங்கிய முரசொலி!