Tamilnadu
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ”தமிழ்த்தாய் வாழ்த்து” கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற அரசினர் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிந்தார்.
இந்த தீர்மானத்தை ஆதரித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கோவி.செழியன் பேசியது வருமாறு:-
முதலமைச்சரால் கொண்டுவரப்பட்ட தனித்தீர்மானத்தை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் முழுமனதோடு வழிமொழிகிறேன். மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய வரலாற்றுப் பாடல், 1891-இல் எழுதப்பட்ட போதிலும், இன்றும் இளமை குறையாத நிலையில் இருக்கிறது.அரசு நிகழ்ச்சிகள், பொது இடங்கள், கல்லூரிகள் ஆகிய அனைத்திலும் இப்பாடல்தான் முதல் பாடலாகப் பாடப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
தமிழ் மொழிக்கு என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. தமிழ் மொழிக்காக வீர வரலாறு பேசும் நாம், இன்று தமிழுக்கு மூன்றாம் இடம் என்று கூறும்போது சற்றுச் சங்கடத்திற்கும், அவமானத்திற்கும் ஆளாகித்தான் இருக்கிறோம்.தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை யார் அலட்சியப்படுத்தினார்கள் என்று நான் இங்கு கூற விரும்பவில்லை.
எங்களுடைய முன்னாள் முதலமைச்சர் அவர்கள், 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக அறிவித்து அரசாணை வெளியிட்டார். அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என அறிவித்த பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்தையே சாரும்.
நீசமொழி என்று (பிறரால்) பேசப்பட்ட தமிழ் மொழியை, தேச மொழியாக்கிச் செம்மொழியாக்கிய பெருமை முத்தமிழறிஞர் கலைஞரையே சாரும்.உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்தி, தமிழின் பெருமையை உலகிற்குச் சொன்னது முத்தமிழறிஞர் கலைஞரும், திராவிட முன்னேற்றக் கழகமும்தான்.
சென்னையில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைக் கொண்டு வந்து, தமிழ் மொழி சிறக்க அரிய பணிகளைச் செய்தது திராவிட முன்னேற்றக் கழகம்! ஆனால், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல, நம் தாய்மொழியின் அடையாளமாக இருக்கின்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், மூன்றாம் வாழ்த்துப் பாடலாகப் பாடப்பட்டுள்ளது.
இதனை அனைத்துக் கட்சிகளும் கண்டித்தன; என்னுடைய தலைவரும் கடுமையாக எதிர்த்துக் கண்டித்தார்.'தமிழ்நாடு' என்று இந்த மாநிலத்திற்கு வரலாற்றுப் பெயர் மாற்றம் தந்தது பேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைக் கொண்டு வந்தது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம். இதனை அரசாணையின் மூலம் முறைப்படுத்தி நிலைநிறுத்தியவர் நமது கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதனைத் தொடர் ஓட்டமாகக் கொண்டு சென்று நிலைநாட்டவிருக்கும் ஆற்றல்மிக்க எங்களின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் திராவிட முன்னேற்றக் கழகமும்தான்!
எனவே, ஆட்சி மாற்றங்களால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அடிக்கடி ஏற்படும் இந்த அவலச் சூழ்நிலையை மாற்றி, இதனைச் சட்டபூர்வமாக நிரந்தரமாக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
Also Read
-
“41 பேர் உயிரி*ந்தபோது ‘மனசாட்சி’ இல்லாமல் ஓடிச்சென்ற நாள் இன்று!” : மதுராந்தகத்தில் உதயநிதி பேச்சு!
-
அரசாணை வெளியிடுவது.. திரும்பப் பெறுவது.. repeat! : த.வெ.க அரசுக்கு எழும் கண்டனங்கள்!
-
16 ஆண்டுகளாக வழங்கிவந்த ‘முட்டைகள்’ தவெக ஆட்சியில் நிறுத்தம்! - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
சட்டம், ஒழுங்கு தகவல்கள் RTI கீழ் விலக்கு.. கடும் எதிர்ப்பு கிளம்பியதும் U-Turn அடித்த தவெக அரசு!
-
“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!