
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, தி.மு.க சார்பில் போட்டியிடும் இ.பரந்தாமனை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் எதிர்க்கட்சித் தலைவரும், கழக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்.
அப்போது அவர் பேசியதாவது,
“நேற்று (செப்.26) நான் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நம் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெறப்போவது, 100 விழுக்காடு உறுதியாகிவிட்டது.
அதைவிட கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் மதுராந்தகத்தில் வெற்றுபெறுவோம் என்ற நம்பிக்கையை மக்கள் அளித்திருக்கிறீர்கள்.
இன்றைக்கு செப்.27-ஆம் நாள். கடந்த ஆண்டு இதே நாளில் தற்போதைய முதலமைச்சர் பிரச்சாரம் என்ற பெயரில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தராமல் 10 மணிநேரம் தாமதமாக சென்றதால் 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்த நாள் இன்று.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பவர்களுக்கு அன்றைக்கு ஆறுதல் கூட சொல்லாமல், மக்களை சந்திக்காமல், பத்திரிகையாளர்களின் கேள்விகளை புறக்கணித்து ஓடிச்சென்று, இன்றோடு ஒரு ஆண்டு ஆகிவிட்டது. அப்படி மனசாட்சி இல்லாமல் ஓடிச்சென்ற முதலமைச்சர்தான், இன்றைய முதலமைச்சர் விஜய்.

கரூர் துயரம் ஏற்பட்டதும் பொறுப்பேற்றிருக்க வேண்டிய இன்றைய முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் 40 நாட்கள் தலைமறைவாகிவிட்டனர். மருத்துவமனைக்கு நேரில் சென்று களத்தில் இருந்தது நம் தலைவர், அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கழக அமைச்சர்கள்தான்.
த.வெ.க.வினர் தலைமறைவானபோதுகூட, அன்றைய முதலமைச்சரான நம் தலைவர் மு.க.ஸ்டாலின், “தொண்டர் இற*பதை எந்த தலைவனும் விரும்பமாட்டான். அதனை அரசியலாக்க வேண்டாம்” என பெருந்தன்மையாக பேசினார்.
கரூர் இழப்பை அரசியலாக்க வேண்டாம் என்பதற்காக சிறப்பு விசாரணைக்குழுவை நியமித்தார் அன்றைய முதலமைச்சரான, நம் தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், த.வெ.க.வினர்தான் சி.பி.ஐ விசாரணைதான் வேண்டும் என்று கேட்டு வாங்கி, தற்போது பா.ஜ.க.வின் நம்பர் 1 அடிமையாக இயங்கி வருகின்றனர்.
த.வெ.க கட்சி தொடங்கியது முதல், முதலமைச்சர் விஜய்க்கு ஒரே வசனம்தான். உடைந்துபோன டேப்ரிக்கார்டர் போல, எப்போது ஸ்விட்சைப் போட்டாலும், திமுக.. திமுக.. திமுக-தான்.
ஓம் சக்தி பராசக்தி என 2 ஆண்டுகளாக பேசிய அவருக்கு பதிலடியாக, ஓம் காளி ஜெய் காளி... *** ஒரு ஓடுகாளி! என ஒவ்வொரு பிரச்சார இடத்திலும் பேசுவோம்.

அவரது பெயரை சொல்லாதீர்கள், அழுதுவிடுவார். அவரது கட்சிப் பெயரை பயன்படுத்துங்கள். “ஓம் காளி ஜெய் காளி... த.வெ.க ஒரு ஓடுகாளி” என்றால் போதும்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளே, அவர்களை எதிர்த்து போட்டியிடுகிறார்கள். த.வெ.க வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக்கூடாது என கம்யூனிஸ்ட் கட்சியே பிரச்சாரம் செய்கிறது.
“மக்களுக்கு பணம் கொடுக்கிறார்கள்” என்று தி.மு.க மீது அவதூறு பரப்பிவிட்டு, ‘மாற்றம்’ என்று சொல்லி மொத்த வியாபாரமாக அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களையே தூக்கியிருக்கிறார் த.வெ.க தலைவர் விஜய்.
மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் த.வெ.க வேட்பாளர்களை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள். விரட்டத் தொடங்கிவிட்டார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு மதுராந்தகத்திற்கு வந்து, முதலமைச்சர் கத்தியதை பார்த்தீர்களா? பார்க்கவில்லை என்றாலும் கவலைப்படாதீர்கள். இரண்டு நாட்கள் கழித்தும் அதையேதான் பேசுவார். அதாவது, கத்துவார்.
த.வெ.க அமைச்சர்களின் பெயர்களை சொன்னால் பலருக்கு தெரியாது, பட்டப்பெயர்களை சொன்னால்தான் தெரியும். ட்ரோன் கேமரா அமைச்சர், முருக்கு அமைச்சர், ரீல்ஸ் அமைச்சர், சங்கி அமைச்சர், உருட்டுக்கட்டை அமைச்சர், பவுடர் அமைச்சர், பிளாக் டிக்கெட் அமைச்சர், திருட்டு லாட்டரி அமைச்சர் என்ற லட்சணத்தில்தான் இன்றைய அமைச்சரவை அமைந்திருக்கிறது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் பேசிக் கிழிப்பதை கேட்டு சகிக்க முடிவில்லை. ஆனால், முதலமைச்சரின் முகம் தெரிவதில்லை என த.வெ.க சட்டமன்ற உறுப்பினர், திரைவைத்து முகத்தை காண்பிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். இது என்ன சட்டப்பேரவைதானா?
சட்டப்பேரவையில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இராணிப்பேட்டையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் ரப்பர் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
அதற்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நான் முதலமைச்சரை கூட்டிச் சென்று ஆய்வு செய்வேன் என்கிறார்.
உடனே, தொழில்துறை அமைச்சர் எழுந்து சுற்றுச்சூழலை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளலாம், தொழிற்சாலை தொடர்ந்து இயங்க வேண்டும் என்றார்.
கடைசியாக விசாரித்துப் பார்த்ததில் அப்படி ஒரு தொழிற்சாலையே இல்லை. அங்கு வெறும் பஞ்சர் ஒட்டுகிற கடைதான் இருக்கிறது.
ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடம் மகளிருக்கு ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என இன்றைய முதலமைச்சர் வாக்குறுதி அளித்தாரே... இதுவரை தந்தாரா?
ஆட்சிக்கு வந்ததும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் தருவேன் என இன்றைய முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்தார். இப்போது, மூன்றுதான் தருவேன், அதுவும் நான் எப்போது நினைக்கிறேனோ அப்போதுதான் தருவேன் என்று பேசுகிறார்.

தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் 500 படுகொலைகள் நடந்திருக்கிறது. அதுவும் மேற்கு மண்டலத்தில் ஒரே மாதத்தில் 10 படுகொலைகள்.
நேற்று முன்தினம் கூட வண்டலூரில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். மதுராந்தகம் அருகே மாற்றுத்திறனாளி சிறுமி வ*கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதுதான் முதலமைச்சர் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அளிக்கிற பாதுகாப்பா?
பெண்களின் பாதுகாப்பிற்காக முதலமைச்சர் விஜய் அறிவித்த ‘சிங்கப்பெண்’ படையைச் சேர்ந்த ஒருவரையாவது யாராவது பார்த்தீர்களா? 4 மாதங்களாக அறிவிப்பு மட்டுமே வருகிறது. நடைமுறை இல்லை.
தமிழ்நாட்டில் எங்குமே சரியான மின்சார விநியோகம் இல்லை. முதலமைச்சர் தொகுதியான பெரம்பூரிலேயே மின்சாரம் இல்லை. ஒவ்வொருநாளும் மக்கள் குடும்பம் குடும்பமாக போராடி வருகிறார்கள். இவர்களை இந்த தேர்தலில் வீழத்த வேண்டும்.
தி.மு.க தலைவர் தேர்ந்தெடுத்திருக்கிற இ.பரந்தாமன் என்பவர் படித்த வேட்பாளர், பண்பாளர், கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர். தேர்தலுக்கு தேர்தல் கொள்கையை மாற்றும் பச்சோந்தி இல்லை. அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, தி.மு.க.வை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.”






