Tamilnadu

தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!

மேகதாது , விவசாயிகள் பிரச்சனையை திசை திருப்பவே த.வெ.க அரசு எம்பிக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது என தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி விமர்சித்துள்ளார்.

இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறிய கனிமொழி எம்.பி ”தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இக்கூட்டத்தைப் புறக்கணித்ததால், பெரும்பான்மையான எம்பிக்கள் (சுமார் 37 எம்பிக்கள்) இல்லாமல் இந்த கூட்டம் நடந்துள்ளது.

இதேபோல், தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.03.2025 அன்று நடத்தினார். இதில் த.வெ.க. சார்பில் பொதுச்செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டு, தீர்மானத்தை ஆதரித்து கையெழுத்திட்டுள்ளார். அப்படி இருக்கும்போது, பெரும்பான்மை எம்.பி.க்கள் இல்லாத நிலையில், இந்தக் கூட்டத்தை த.வெ.க. அரசு ஏன் கூட்டுகிறது என்பதை விளக்க வேண்டும்.

அதைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறை பிரச்சனை வந்தவுடனேயே திமுக மிகவும் தெளிவாகச் செயல்பட்டது. அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துச் சென்னையில் பெரிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுவரையறை செய்யக் கூடாது, தமிழ்நாட்டின் தற்போதைய எம்பிக்களின் எண்ணிக்கை குறையாமல் நியாயமான முறையில் அது அமைய வேண்டும் என்பதுதான் அந்த கூட்டத்தின் தீர்மானமாக இருந்தது. பாஜக நீங்கலாக மற்ற அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த இந்தத் தீர்மானத்தைத் தமிழக சட்டமன்றத்திலும் திமுக அரசு நிறைவேற்றியது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட, தமிழ்நாட்டின் நலன் தான் முக்கியம், தொகுதி மறுவரையறையால் மாநிலத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருந்து, இந்த பிரச்சனைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து பிரச்சாரங்களை மேற்கொண்டது.

ஒன்றிய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை (Delimitation Bill) அடுத்த முறை கொண்டு வரவுள்ளதாகத் தகவல் வருகிறதே தவிர, இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் கொண்டு வரவில்லை. இந்த மசோதாவை மாற்றி அமைத்துத்தான் கொண்டு வருகிறோம் என்பதற்கும் எந்த ஒரு ஆதாரப்பூர்வமான தகவலும் இல்லை.

தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவைக் கொண்டு வருவதற்கான வாய்ப்பில்லை என்பதுதான் எங்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய செய்தி. இந்த மசோதாவும் தாக்கல் செய்யப்படவில்லை, அதன் வரைவு நகலும் (Draft Bill) வழங்கப்படவில்லை. வரவிருக்கும் புதிய மசோதாவில் என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த எந்த விவரமும் இதில் இல்லை.

மசோதாவின் நகல் கூடக் கொடுக்கப்படாத நிலையில், பழைய மசோதாவுக்கும் புதிதாக வரப்போகும் மசோதாவுக்கும் இடையே என்ன மாற்றம் இருக்கப் போகிறது? நிலைமை இப்படி இருக்க, எதற்காக இந்த எம்பிக்கள் கூட்டம் கூட்டப்பட்டது? எதற்காக இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க மறுக்கிறது? இந்த எம்பிக்கள் கூட்டத்தை நடத்தியது தற்போதைய அரசாங்கமா அல்லது தங்களின் கட்சித் தலைமைக்குத்தான் அவர்கள் கட்டுப்பட்டு நடக்கிறார்களா?

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஒவ்வொரு எம்பி-க்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருப்பது என்பது முறையற்ற நிர்வாகச் செயல்பாடாகும். அவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளராகச் செயல்படுகிறாரா அல்லது ஆளுங்கட்சியான தவெக-வின் தலைமை நிலையச் செயலாளராகச் செயல்படுகிறாரா?

மேகதாது அணை விவகாரம் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளைத் திசை திருப்புவதற்காகவே தற்போதைய ஆளுங்கட்சி இந்த எம்பிக்கள் கூட்டத்தை நடத்தியுள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் தொடர்ச்சியான கோரிக்கை ஆகும். அதை விடுத்து, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கொண்டு வரப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்கள் பெரிய அளவில் அரசியல் பிரதிநிதித்துவப் பாதிப்பைச் சந்திக்கும்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் யார் யார் எப்படிப்பட்டவர்கள், யார் முதுகில் குத்தினார்கள், யார் சுயநலத்திற்காகச் செயல்பட்ட எட்டப்பர்கள் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.தொகுதி மறுவரையறை மற்றும் மாநில உரிமைகள் விவகாரத்தில் திமுகவும் அதிமுகவும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டைக் கொண்டுதான் கையாண்டு வருகிறோம்.

இதில் புதிதாக மாறுபடுவதற்கு எதுவும் இல்லை. இவர்கள் இப்போதுதான் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பதால், காலம் காலமாகத் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக நடந்து கொண்டிருக்கக்கூடிய போராட்டங்கள் இவர்களுக்குத் தெரியவில்லை. இவர்கள் வந்துதான் இதைச் செய்ய வேண்டும் என்பதில்லை; இதற்கு முன்பும் இது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது.

இப்போதும் கூட, தற்போதைய ஆளுங்கட்சியான தவெக, அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் அழைத்துக்கொண்டு, ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரையோ அல்லது மற்ற அமைச்சர்களையோ நேரில் சந்தித்து மேகதாது விவகாரம் குறித்துத் தமிழ்நாட்டின் குரலாக எடுத்துச் சொல்வதென்றால், நிச்சயமாக திமுகவும் அவர்களோடு இணைந்து செல்லத் தயாராகவே இருக்கிறது.

இந்த கூட்டம் நடந்து முடிந்த பிறகும் கூட, அது தொடர்பான அதிகாரப்பூர்வமான செய்திகளோ அல்லது அறிக்கைகளோ எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே, இன்றைய கூட்டம் என்பது முறைப்படி நடக்காத ஒரு கூட்டமாகும். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் புதிய மசோதா என்னவென்றே தெரியாத நிலையில், இன்றைய கூட்டத்தில் அதைப்பற்றி விவாதித்து எந்தப் பலனும் இல்லை.

மசோதாவில் என்ன விவரங்கள் இருக்கின்றன என்று யாருக்குமே தெரியாதபோது, அதைப்பற்றி விவாதித்து நாம் என்ன செய்யப் போகிறோம்?கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், பல அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஒரு வலுவான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்தப் பழைய தீர்மானம் அப்படியே நடைமுறையில் இருக்கிறது.

அப்படி இருக்கையில், இப்போது புதிதாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தால், ஏற்கனவே போடப்பட்ட பழைய தீர்மானத்தை இவர்கள் எதிர்க்கிறார்களா? இவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? சுருக்கமாகச் சொன்னால், விவசாயிகள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளைத் திசைதிருப்பவே இந்த நாடகம் நடந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Also Read: “ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாநிலங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது!” : தங்கம் தென்னரசு!