Tamilnadu

வெற்று பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது வேளாண் நிதிநிலை அறிக்கை : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு, நேற்று தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. திக்கித் திணறி 2:30 மணி நேரம் பெருமூச்சு விட்டு வாசித்து முடித்தார் நிதியமைச்சர் மரிய வில்சன். அவர் பெருமூச்சு விட்டு வாசித்தாலும், மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500, 6 சிலிண்டர்கள் மற்றும் இலவசப் பேருந்து குறித்த அறிவிப்புகள் ஒரு வார்த்தைகூட இடம் பெறவில்லை.

வாக்களித்த மக்களுக்குச் சினிமாவில் ஒரு வசனம் வருவது போல "பிம்பிளிக்கா பிலாப்பி" என ஏமாற்றியுள்ளது த.வெ.க அரசு. அதோடு, கடந்த தி.மு.க ஆட்சியில் மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட பல முக்கிய திட்டங்களின் பெயர்களை மாற்றிப் புதிய திட்டம் போல் அறிவித்துள்ளது.

இந்நிலையில்தான் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதிலாவது விவசாயிகளுக்குப் பயன் கிடைக்கும் என்று பார்த்தால், காவிரியில் எப்படி நமக்குத் தண்ணீர் கிடைக்கவில்லையோ, அதுபோல் விவசாயிகளுக்கும் இவர்கள் அறிவித்துள்ள திட்டத்தால் எந்தப் பயனும் கிடைக்காத நிலையே ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது என த.வெ.க அரசின் வேளாண் பட்ஜெட்டை தி.மு.க தலைவைர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் ”வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் -2026.

மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.

திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?

குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்” என விமர்சித்துள்ளார்.

Also Read: வேளாண் பட்ஜெட்டிலும் ஸ்டிக்கர் ஒட்டிய த.வெ.க அரசு : பல திட்டங்களுக்கு நிதியும் குறைப்பு!