Tamilnadu

குதிரை பேரம் ; அத்தனை அசிங்கத்துக்கும் வைகோ ஒப்புதல் வாக்குமூலம் : ஆதாரங்களுடன் உண்மை சொன்ன முரசொலி!

முரசொலி தலையங்கம் (01-07-2026)

குதிரை பேரத்துக்கான ஒப்புதல்!

த.வெ.க. ஆட்சி அமைக்கவும், ஆட்சியில் தொடரவும் குதிரை பேரம் நடத்தியது, நடந்துக் கொண்டு இருக்கிறது என்பதை அக்கட்சியை ஆதரிக்கும் வைகோ ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். இதைவிட ஆதாரம் தேவையில்லை.

வைகோ அளித்துள்ள குதிரை பேர வாக்குமூலம் இதுதான்:

நிருபர்: நீங்கள் முதலமைச்சரைச் சந்தித்தீர்களா?

வைகோ: ஆமா. சந்திச்சேன்.

நிருபர்: ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், நான் பிரச்சாரம் பண்றேன்னு முதலமைச்சர் விஜய் சொன்னதாக செய்தி வந்ததே...?

வைகோ: ஆமாம். ரெண்டு எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வரும். அப்படி ஒரு இடைத்தேர்தல் வந்தால் நானே வந்து உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்று முதலமைச்சர் என்னிடம் சொன்னார்...

- இதுதான் வைகோ அளித்த ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். இவை அனைத்தும் அனைத்து ஊடகங்களுக்கு முன்னால் வைகோ சொன்னவை. அவரை யாரும் கட்டாயப்படுத்தி சொல்ல வைக்கவில்லை. அவராக முன் வந்து உண்மையைக் கக்கி இருக்கிறார். இப்படிச் சொல்லவில்லை என்று அவரே மறுக்க முடியாது. அது நான் இல்லை என்றும் அவரால் சொல்ல முடியாது.

*விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு தந்த காங்கிரஸ் கட்சிக்கு வெளிப்படையாகவே இரண்டு அமைச்சர் பதவிகள் தரப்பட்டுள்ளன.

*விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.

*விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க ஆதரவு தந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.

* அமைச்சர் பதவி தருகிறேன், வாரியம் தருகிறேன், இன்னும் பல தருகிறேன்என்று சொல்லப்பட்டு அ.தி.மு.க. உறுப்பினர்களில் 25 பேரின் ஆதரவை வாங்கினார் விஜய். அமைச்சர் பதவியும் தராமல் ஏமாற்றினார். வாரியமும் தர வில்லை. எனவே வந்தவர்களில் 21 பேர் மீண்டும் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டு போய்விட்டார்கள். இவர்கள் வந்ததும் போனதும் பேரங்களை உறுதிப்படுத்தும் காட்சிகள் ஆகும்.

*டி.டி.வி. தினகரன் தனது அ.ம.மு.க. கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. வைக் கானோம் என்றும், எனது கையெழுத்தை அவர் போட்டுள்ளார் என்றும் ஆளுநரிடம் மனு தருகிறார். கிண்டி காவல் நிலையத்திலும் புகார் தருகிறார். ‘நான் போகவில்லை' என்று அந்த எம். எல்.ஏ.வே பேட்டி தருகிறார். அது என் கையெழுத்தே அல்ல என்றும் அவர் சொன்னார். பின்னர் அவரே விஜய் ஆதரவாளராக மாறுகிறார். அந்த எம்.எல்.ஏ.வை கட்சியை விட்டு நீக்கிவிட்டார் டி.டி.வி. தினகரன். இதுவும் குதிரை பேரத்துக்கான சாட்சியம் ஆகும்.

*‘முதலமைச்சரைச் சந்திக்க முகத்தை மூடிக் கொண்டு சென்றது யார்?” என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்க்கு நேராகக் கேள்வி கேட்டார் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். சபையில் உட்கார்ந்து இருந்த முதலமைச்சர் விஜய்யால் பதில் சொல்ல முடியவில்லை. முகத்தை மூடிக் கொண்டு ஒருவர் விஜய்யின் வீட்டுக்குச் சென்ற காட்சியும் ஊடகங்களில் வெளியானது. இதுவும் பேரத்தின் சாட்சியம் ஆகும்.

* அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல்,பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பா சமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய நால்வரும் சபாநாயகரைச் சந்தித்து தங்கள் பதவியை ராஜினாமா செய்கிறார்கள். இது கோட்டையின் தரைத் தளத்தில் நடக்கிறது. அடுத்த நிமிடமே கோட்டையின் மேல் தளத்துக்குச் சென்று அமைச்சர்கள் முன்னிலையில் த.வெ.க.வில் சேர்கிறார்கள். இவர்களுக்குத் தரப்பட்ட உறுதிமொழி என்ன? என்ன பேரத்தின் அடிப்படையில் இவர்கள் பதவி விலகினார்கள்?

*பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி இருக்கும் அ.தி.மு.க. முன்னாள்அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையில் அவர் மீது வழக்கு இருக்கிறது. ‘தூய சக்தி’ படத்தில் நடித்து வரும் விஜய்யைப் பார்க்க அவர் காத்திருக்கிறார். இந்த எம்.எல்.ஏ. ஆவதற்காக எத்தனை கோடி செலவு செய்தார் விஜயபாஸ்கர் என்பதை விஜயபாஸ்கரே அறிவார். அந்த எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் என்றால் அவருக்கு தரப்பட்ட உறுதிமொழி என்ன? என்ன பேரத்தின் அடிப்படையில் விராலிமலை விஜயபாஸ்கர் பதவி விலகினார்?

*நிலமோசடி, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்குகளில் சிக்கி இருப்பவர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். ‘தூய சக்தி' படத்தில் நடித்து வரும் விஜய்யைப் பார்க்க அவரும் காத்திருக்கிறார். இந்த எம்.எல்.ஏ ஆவதற்காக எத்தனை கோடி செலவு செய்தார் விஜயபாஸ்கர் என்பதை விஜயபாஸ்கரே அறிவார். அந்த எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் என்றால் அவருக்கு தரப்பட்ட உறுதிமொழி என்ன? என்ன பேரத்தின் அடிப்படையில் கரூர் விஜயபாஸ்கர் பதவி விலகினார்?

இவை அனைத்தும் ‘தூய சக்தி' விஜய் நடத்தி வரும் துர்நாற்ற ஆட்சியின் சாட்சியங்கள். இதற்குத் தான் தானாக முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் வைகோ. 'ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் ராஜினாமா செய்யச் சொன்னார் முதலமைச்சர் விஜய். அதை அவர்கள் இருவரிடமும் நான் சொன்னேன். அவர்கள் ஒருவரும் ஒப்புக் கொள்ளவில்லை' என்று வைகோ ஊடங்கள் முன்னாலும் சொன்னார். தனது கட்சி பொதுக்குழுவிலும் சொன்னார். இந்த இரண்டு பேச்சுகளும் வீடியோ காட்சிகளாக இருக்கிறது.

‘முதலமைச்சர் விஜய்யே ஜெயிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டாரே! அப்புறம்என்ன ராஜினாமா செய்ய வேண்டியது தானே' என்று சொல்லி, விஜய்க்கே ஆப்பு வைத்துவிட்டார் வைகோ. த.வெ.க. அமைச்சர்கள் வைகோ வீட்டுக்கு வந்ததும், முதலமைச்சர் விஜய்யை வைகோ போய் பார்த்ததும் ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.

இதையும் அவர் மறைக்க முடியாது.

மே 4 ஆம் தேதி முதல் நடந்த அத்தனை அசிங்கத்துக்கும் வைகோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார். நீதிமன்றத்தின் முன்னால் இவர்களது முகத்திரை கிழிக்கப்படும்.

குதிரை பேரம் நடத்தி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வாக்குகளைப் பெற்ற வழக்கில் நரசிம்மராவுக்கும் பூட்டாசிங்குக்கும் மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டதை நாடு மறக்கவில்லை.

Also Read: “ஏ.டி.எம் கார்டு மூலம் மாத்திரைப் பொடி.. கில்லி சரத்-ஐ என்ன செய்யப்போகிறார் யோக்கியர் விஜய்” - முரசொலி!