Tamilnadu
மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள முக்கிய தகவல் இதோ!
தமிழ்நாட்டில் ஏப்.23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்நிலையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வாக்கு எண்ணிக்கை நாளான மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி துவங்கும் என்று கூறியுள்ளார்.
முதலில் காலை 8 மணிக்குத் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும் காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் சுற்றுகளில், கடைசி சுற்று வாக்குகள் எண்ணும் பணி, தபால் வாக்குகள் எண்ணும் பணி முடிக்கப்பட்டவுடன்தான் துவங்கப்படும். ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் ஒரு பகுதியில் தபால் வாக்குகளும், மற்றொரு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளும் அதற்குரிய மேசைகளில் எண்ணப்படும்.
இரண்டிற்கும் தனித்தனியாக மேற்பார்வைக்காக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அளவில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற விகிதத்தில் தபால் வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரம் அலுவலர்களில், வாக்காளர்களாக பதிவு செய்து, வாக்களிக்க விண்ணப்பித்த 2 லட்சத்து 88 ஆயிரம் அலுவலர்கள் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இத்துடன் தேர்தல் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட காவல்துறை சார்ந்த அலுவலர்களும், மற்ற அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 36 ஆயிரம் தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்குகளாகவும், ஒரு லட்சத்து பத்தாயிரம் அலுவலர்கள் தேர்தல் பணி சான்றிதழ் பெற்று நேரடியாக வாக்குச்சாவடியிலும், வாக்களித்துள்ளனர். 85 வயதிற்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அளித்த படிவம் 12D விண்ணப்பத்தின் பெயரில், மொத்தம் ஒரு லட்சத்து 73 ஆயிரம் வாக்காளர்கள் தபால் வாக்கு பெற்று வாக்களித்துள்ளனர். இதுவரை சேவை வாக்காளர்கள் 18 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்.
இவர்களின் தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 8 மணி வரை பெறப்படும். மொத்தம் 6 லட்சத்து 37 ஆயிரம் பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மேகதாது அணை - ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? : மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி!
-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டு... : த.வெ.க அரசை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வாயில் புண் வந்துவிட்டதா? : காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய DMK IT Wing!
-
‘RCB பெயர் இல்லை Brand.. 19 வருட வரலாற்றிலேயே முதல் முறையாக 30 கோடி அமெரிக்க டாலர்!’ - முழு விவரம் உள்ளே!
-
6 இலட்சம் நூல்கள் - வாசிப்பு பெருகினால்தான் தமிழ்நாடு... : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!