தமிழ்நாடு

மணல் பதுக்கல் வழக்கு: காவல் நிலையத்தில் 7 நாட்கள் கையெழுத்திட எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் உத்தரவு!

7 நாள் கரூர் நகர காவல் நிலையத்தில் கையெழுத்திட எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணல் பதுக்கல் வழக்கு: காவல் நிலையத்தில் 7 நாட்கள் கையெழுத்திட எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காவிரி ஆற்று மணலைச் சட்டவிரோதமாக, உரிய ஆவணங்களின்றிப் பதுக்கி வைத்திருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் அண்மையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, அவர் சரணடைய மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்திருந்தது. இந்நிலையில், இந்தக் காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், தான் அதிமுக சார்பில் கரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் பணிகளால் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராக இயலாது என்றும், கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், மார்ச் 31-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் என்பதாலும், அன்றைய தினம் மகாவீர் ஜெயந்தி விடுமுறை என்பதாலும் நீதிமன்றத்தில் சரணடைய இயலவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, அவர் சரணடைவதற்கான காலக்கெடுவை ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நீட்டித்து அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராக நாளை வரை கால அவகாசம் இருந்தும், ஒரு நாள் முன்பாகவே (ஏப்ரல் 27) முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண்-1-இல் நீதிபதி பரத்குமார் முன்னிலையில் ஆஜரானார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை வரும் 29-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

அதேபோன்று, கரூர் நகர காவல் நிலையத்தில் தொடர்ந்து 7 நாட்கள் நேரில் ஆஜராகிக் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories