Tamilnadu
தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : DravidianModel 2.0 Starts Now - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நடைபெறவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அப்போது முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:-
நடைபெற இருக்கும் தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலை உங்கள் முன்னால் வெளியிடுவதில் நான் பெருமைப்படுகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, நான் பலமுறை சொன்னது போன்று, அரசியல் கூட்டணி மட்டுமல்ல; கொள்கைக் கூட்டணி. கூட்டணி எண்ணிக்கையில் தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவையின் 234 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் 164 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். 70 தொகுதிகளைத் தோழமைக் கட்சிகளோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் கட்சிகளின் வாரியாக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டும் முதலில் நான் அறிவிக்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் - 164 தொகுதிகள்
காங்கிரஸ் கட்சி - 28 தொகுதிகள்
தேசிய முற்போக்கு திராவிட கழகம் - 10 தொகுதிகள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - 8 தொகுதிகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 5 தொகுதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 5 தொகுதிகள்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - 4 தொகுதிகள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2 தொகுதிகள்
மனிதநேய மக்கள் கட்சி - 2 தொகுதிகள்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2 தொகுதிகள்
மனிதநேய ஜனநாயக கட்சி - 1 தொகுதி
முக்குலத்தோர் புலிப்படை - 1 தொகுதி
எஸ்.டி.பி.ஐ. - 1 தொகுதி
தமிழர் தேசம் கட்சி - 1 தொகுதி என எங்களுக்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
தோழமைக்கு ஒதுக்கிய தொகுதிகளுள் 11 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். ஆக மொத்தம் 175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னமும், 59 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளின் சின்னத்திலும் போட்டியிடுகிறோம்.
தற்போது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு இந்தியாவின் முதன்முதலாக ஆட்சி அமைத்த மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களைப் பேரறிஞர் அண்ணாவின் சார்பிலும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சார்பிலும் நான் அறிவிக்கிறேன்.
இவர்கள் வேட்பாளர்கள் மட்டுமல்ல; வெற்றி வேட்பாளர்கள். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும். இது உறுதி... உறுதி... உறுதி...
இதில் 164 வேட்பாளர்களை நான் அறிவித்திருக்கிறேன். இதுபோக 11 வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னம் இருக்கிறது. அது தனித்தனி கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. Official-ஆக தி.மு.க. வேட்பாளர்கள் 164 பேரைச் சொன்னேன். அதில், பட்டம் பெற்றவர்கள் 125. பெண்கள் 18 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள். முனைவர்கள் 7 பேர். மருத்துவர்கள் 15 பேர். பொறியியல் பட்டதாரிகள் 17 பேர். சட்டம் படித்தவர்கள் 29 பேர். அதுமட்டுமல்ல, புதுமுகம் என்று கணக்கெடுத்துக் கொண்டால், 60-க்கு மேல் வருகிறது. அதுதான் முக்கியமானது. அனைவரும் அ.தி.மு.க. முன்பே அறிவித்துவிட்டது. தி.மு.க. இன்னும் அறிவிக்கவில்லையே என்று கேட்டார்கள். நாங்கள் கொஞ்சம் லேட்டாக வந்தோம்; ஆனால், லேட்டஸ்ட்-ஆக வந்திருக்கிறோம். ஏனென்றால் பல கூட்டணிக் கட்சிகள் இருக்கிறது. அனைத்துக் கட்சிகளுடனும் அமர்ந்து பொறுமையாக, அவர்கள் கேட்பது; நாங்கள் சொல்வது; மற்ற கட்சிகள் கேட்பது என்றெல்லாம் இருந்தது. அவை அனைத்தையும் சரிசெய்து, அனைவரையும் திருப்தி செய்து, அனைவரும் திருப்தியாக ஒப்புக்கொண்டு, அதன்பிறகு கையொப்பமிட்டு, அந்த அடிப்படையில்தான் செய்திருக்கிறோமே தவிர, வேறு ஒன்றும் இல்லை. காலம் தாழ்த்தப்படவில்லை.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, ”கழக வெற்றி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டேன்... களம் காண்போம்! வரலாறு படைப்போம்! The countdown to DravidianModel 2.0 starts now" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதவிட்டுள்ளார்.
Also Read
-
தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : யார் யார் எந்த தொகுதியில் போட்டி?
-
தி.மு.க கூட்டணி : ம.தி.மு.க, IUML, MMK கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் இதோ!
-
CPM, CPI கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் என்ன? : முழு விவரம் இதோ!
-
2026 சட்டமன்ற தேர்தல் : தி.மு.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
10 தொகுதிகளில் போட்டியிடும் தே.மு.தி.க : வெளியானது தொகுதிகளில் பட்டியல்!