Tamilnadu
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
தமிழ்நாட்டு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திராவிட மாடல் ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக நடத்தி வருவதால், மீண்டும் தி.மு.க ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த சூழலில், அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி கட்சிகள் தி.மு.க அரசுக்கு எதிராக பரப்பும் அவதூறு மற்றும் பொய்யான பிரச்சாரம் மக்கள் மத்தியில் பலனளிக்காத நிலையே நீடித்து வருகிறது. இந்நிலையில், தி.மு.க அரசையும் முதலமைச்சரையும் சாடி மட்டுமே தன் இருப்பை காட்டிக்கொள்ள த.வெ.க தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
குறிப்பாக அரசியலுக்கு புதிதாக வந்த நடிகர் விஜய், நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டங்களில் முழுக்க முழுக்க தி.மு.க-வையே விமர்சித்து பேசி வருகிறார். அதேபோல் அவரது கட்சி நிர்வாகிகளும் தி.மு.க-வுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜூனா, தி.மு.க-வுக்கும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோருக்கும் எதிராக தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு எம்.ஜி.ஆர். போன்று வர முடியாமல் போனதற்கு தி.மு.க தரப்பிலிருந்து வந்த மிரட்டல்களே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
ஆனால் இதற்கு ரஜினிகாந்த் ரசிகர்களே ஆதவ் அர்ஜூனாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். குறிப்பாக 1995–96 காலகட்டத்தில் ரஜினிகாந்த் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஆட்சியை கடுமையாக விமர்சித்த பழைய காணொளிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து எதிர்வினை தெரிவித்து வருகின்றனர்.
அப்போது ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு பாதிக்கப்படும் என ரஜினிகாந்த் எச்சரித்திருந்தார். அந்த நிலைப்பாடு 1996 தேர்தலில் தி.மு.க வெற்றிக்கு உதவியதாக பலர் குறிப்பிடுகின்றனர்.
பின்னர், 2021ஆம் ஆண்டு தனது அரசியல் கட்சியை தொடங்கும் திட்டத்தை ரஜினிகாந்த் அறிவித்திருந்தாலும், உடல்நலக் காரணங்களும் கொரோனா தொற்றுநோய் சூழ்நிலையும் காரணமாக அதை ரத்து செய்தார். ஆனால் இந்த உண்மையை தமிழ்நாடு முழுவதும் அறிந்திருந்த போதும், ஆதவ் அர்ஜூனா இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். மேலும் அவரது கருத்துகளுக்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் மன்ற நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து விமர்சித்த த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவுக்கு, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகி சோளிங்கர் என்.இரவி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கவே ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகினார்; மற்றவர்கள் மிரட்டல்களுக்கு அஞ்சி அல்ல. தனது பலத்தை நிரூபிக்க தன்னை நம்பி வரும் உயிர்களை பலியிடும் அற்ப அரசியலை அவர் செய்யவில்லை. கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவராகி விட முடியாது.
தனது அரசியல் விலகல் எத்தனை விமர்சனங்களையும் பழிகளையும் உருவாக்கும் என்பதை அறிந்தும், அவற்றை தாங்கிக் கொண்டு மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்தார். அதுவே அவரது மனவலிமை. அதனால் தான் அவர் நிரந்தர தலைவர்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி பிரான்சிஸ் பாஸ்டின் வெளியிட்டுள்ள காணொளியில், “ரஜினிகாந்த் யாருக்கும் அஞ்சுபவர் அல்ல. ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இனி இவ்வாறு பேசினால் தமிழ்நாட்டு மக்களிடம் வாக்குகளைப் பெற்று ஒரு இடம் கூட பெற முடியாது. ஆதவ் அர்ஜூனா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்,” என எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில், “நடிகர் ரஜினிகாந்த் அவர்களை யாராலும் மிரட்ட முடியாது; எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் என்பது நாடறிந்த உண்மை. தி.மு.க ரஜினிகாந்தை மிரட்டியதாக ஆதவ் அர்ஜூனா கூறுவது அப்பட்டமான பொய். அரசியல் ஆதாயம் தேடி த.வெ.க-வினர் இதைப் பரப்பி வருகின்றனர். எங்களைப் பொறுத்தவரை அவர் எங்களது நண்பர். 1996ஆம் ஆண்டு திராவிட மாடல் ஆட்சி வர வேண்டும் என்பதற்காக குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த். அவரைப் பற்றி எந்த குறையும் தி.மு.க கூறாது,” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தேர்தல் ஆணையமா ஆளுநர் ஆர்.என்.ரவி.. அமைதியாக நடக்கிறதா மேற்கு வங்க தேர்தல்?” : முரசொலி கேள்வி!
-
கோடை வெப்பத்தைத் தணிக்கச் சட்டைப் பையில் வெங்காயம் : ஒன்றிய அமைச்சரின் மூடநம்பிக்கை!
-
முதல் முறை... : தடம் புரண்டது வந்தே பாரத் ரயில்!
-
“வேலூரில் 41.5° செல்சியஸ் வெப்பத்துடன் உச்சம் தொட்ட வெயில்!” : வானிலை ஆய்வு மையம் தகவல்!
-
பா.ஜ.க அமைச்சருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை : காரணம் என்ன?