Tamilnadu

“சென்னையின் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள்..” புத்தகமும், விருதுகளும்.. முதலமைச்சர் அசத்தல்!

காலத்தின் காவலர்கள் – “சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” நூலினை வெளியிட்டு, 2025-26ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட வன அலுவலர்கள்  மற்றும் வனச்சரக அலுவலர்களுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.3.2026) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், “சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” என்ற சிறப்பு நூலை வெளியிட்டார். மேலும், 2025-26-ஆம் ஆண்டிற்கான நான்கு சிறந்த மாவட்ட வன அலுவலர்கள்  மற்றும் 4 சிறந்த வனச்சரக அலுவலர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். 

=> “சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் - ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” நூலின் சிறப்பு :

சென்னையில் உள்ள தொன்மையான மற்றும் வரலாற்றுப் பெருமை வாய்ந்த மரங்களை பதிவு செய்து பாதுகாப்பதற்காக வெளியிடப்பட்ட “சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் - ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” என்ற சிறப்பு நூலை முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் வெளியிட்டார். 

இது பசுமை தமிழ்நாடு மிஷன் (Green Tamil Nadu Mission - GTM) திட்டத்தின் கீழ், நகரங்களின் இயற்கைச் சூழல் தாங்குதிறனை வலுப்படுத்துவதோடு, நகரங்களில் இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கடலோர நகரங்களில் ஒன்றான சென்னை, பல நூற்றாண்டுகளாக நகர வளர்ச்சியின் மாற்றங்களை சாட்சியாகக் கொண்டுள்ள பெரிய மற்றும் பழமையான மரங்களை இன்னும் தக்கவைத்துள்ளது. இம்மரங்கள் நகரத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு அடையாளத்தின் முக்கிய அங்கமாக விளங்குகின்றன. தலைமுறைகள் கடந்தும் நிலைத்து நிற்கும் இம்மரங்கள் நகரத்தின் மாற்றங்களை மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் சமநிலையை பேணுவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. நகர வெப்பநிலையை கட்டுப்படுத்துதல், பறவைகள் மற்றும் மகரந்த பரப்பிகளுக்கு வாழிடம் வழங்குதல், கார்பனை சேமித்தல் மற்றும் நகர வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் போன்ற பல முக்கிய சுற்றுச்சூழல் சேவைகளை இம்மரங்கள் வழங்குகின்றன.

=> “பசுமை தமிழ்நாடு மிஷன்” திட்டம் :

இந்த மரங்களின் சுற்றுச்சூழல் மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு “பசுமை தமிழ்நாடு மிஷன்” திட்டத்தின் கீழ் சென்னையில் பாரம்பரிய மரங்களை அடையாளம் காணும் மற்றும் பதிவுசெய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த முயற்சியின் நோக்கம், இம்மரங்களை நகரத்தின் சுற்றுச்சூழல் வரலாற்றின் உயிர்த்தெழும் சின்னங்களாக அங்கீகரித்து, அவற்றைப் பாதுகாக்க பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிப்பதுடன், நகரப் பகுதிகளில் பெரிய மற்றும் பழமையான மரங்களை பாதுகாப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

இந்த முயற்சி பசுமை தமிழ்நாடு மிஷன் மூலம் நிழல் அறக்கட்டளை (Nizhal Trust), இந்திய மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Institute of Wood Science and Technology – IWST) மற்றும் கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனம் (Institute of Forest Genetics and Tree Breeding – IFGTB) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இந்த இணைந்த முயற்சியின் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாரம்பரிய மரங்களை  ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த முயற்சியின் மூலம் சென்னையின் பல பகுதிகளில் உள்ள 27 இனங்களைச் சேர்ந்த 57 பாரம்பரிய மரங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இம்மரங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் வளாகங்களில் அமைந்துள்ளன. இது நகரத்தின் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதில் நிறுவனங்களும் பொதுமக்களும் இணைந்து செயல்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறது.

பதிவுசெய்யப்பட்ட மரங்களில் 24 மரங்கள் 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடையவை என்றும் 33 மரங்கள் 100 முதல் 200 ஆண்டுகளுக்குள் உள்ளவை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மரங்கள் சென்னையின் சுற்றுச்சூழல் வரலாற்றின் முக்கிய சாட்சிகளாக திகழ்கின்றன. ஆய்வில் அடையாளம் காணப்பட்ட மிகப் பழமையான மரம் பவோபாப் (Baobab – Adansonia digitata) மரமாகும். இதன் வயது சுமார் 239 முதல் 292 ஆண்டுகளுக்கு இடையில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச சுற்றளவு 1070 செ.மீ. அளவாகவும் பதிவாகியுள்ளது. 

பதிவுசெய்யப்பட்ட மரங்களில் மிக உயரமான மரம் Terminalia arjuna இனத்தைச் சேர்ந்ததாகும்; அதன் உயரம் சுமார் 41.6 மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 45 மரங்கள் 200 செ.மீ.க்கு மேற்பட்ட சுற்றளவை கொண்டுள்ளன; இது அவற்றின் முதிர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாரம்பரிய மரங்கள் தொடர்பான ஆவணப்படுத்தலும் அவற்றின் அமைப்பின் பதிவுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவற்றின் பராமரிப்பு மற்றும் நீண்டகால பாதுகாப்பிற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வனத்துறை வழங்க முடியும். மேலும், இம்மரங்களை பல ஆண்டுகளாக பாதுகாத்து பராமரித்து வந்த நிறுவனங்களையும் தனிநபர்களையும் பாராட்டுவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

“சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” என்ற இந்த நூல், பதிவுசெய்யப்பட்ட 57 பாரம்பரிய மரங்களின் விவரங்களை வழங்குவதோடு, அவற்றின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம், வரலாற்று தொடர்புகள் மற்றும் சென்னையின் நகர உயிரியல் பல்வகைமையில் அவை வழங்கும் பங்களிப்பு ஆகியவற்றையும் விளக்குகிறது. மேலும், பதிவுசெய்யப்பட்ட மர இனங்கள் சங்க இலக்கியம் உள்ளிட்ட பாரம்பரிய தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன என்பதும் இந்த வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழர் சமூகத்திற்கும் மரங்களுக்கும் இடையேயான ஆழமான பண்பாட்டு தொடர்பை வலியுறுத்துகிறது.

இந்த முயற்சி பசுமை தமிழ்நாடு மிஷன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விரிவான திட்டத்தின் முதல் கட்டமாகும். எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் பாரம்பரிய மரங்களை அடையாளம் காணவும் பதிவுசெய்யவும் பணிகள் விரிவுபடுத்தப்படும். இந்த முயற்சியின் மூலம் தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் பாரம்பரியத்தை பாதுகாக்கும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதோடு, மக்களையும் நகரங்களையும் இயற்கையுடன் மேலும் இணைக்கும் முயற்சியையும் முன்னெடுத்து வருகிறது. 

=> 2025-26-ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட வன அலுவலர்கள் /வனச்சரக அலுவலர்கள் விருதுகள் :

வனம் மற்றும் வனஉயிரினங்களை பாதுகாப்பதிலும் நிலைத்தன்மையுடன் மேலாண்மை செய்வதிலும் சிறப்பான பங்களிப்பு செய்த மாவட்ட வன அலுவலர்கள்/ வனச்சரக அலுவலர்கள் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசால் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த விருதுகள் வனத்துறையில் வழங்கப்படும் சிறந்த சேவையை பாராட்டுவதையும், அதிகாரிகளிடையே புதுமை மற்றும் அர்ப்பணிப்பை ஊக்குவிப்பதையும், ஆரோக்கியமான தொழில்முறை போட்டியை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டவை ஆகும்.

முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) தலைமையில் அமைக்கப்பட்ட தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 2025–26 ஆண்டிற்கான சிறந்த மாவட்ட வன அலுவலர்கள் / வனச்சரக அலுவலர்கள் விருதுகளுக்காக அரசு கீழ்க்கண்ட அலுவலர்களை தேர்வு செய்துள்ளது:

=> சிறந்த மாவட்ட வன அலுவலர் விருது :

நீலகிரி வனப் பிரிவின் மாவட்ட வன அலுவலராக பணியாற்றிய காலத்தில், பழங்குடியினர் தேவைகள், வனவிலங்குகள் பாதுகாப்பு மற்றும் வன மீளுருவாக்கம் ஆகியவற்றுக்கு இடையில் சமநிலையை பேணிய அவரது சிறப்பான பணிக்காக நிலைத்த வன மேலாண்மை (Sustainable Forest Management) தலைப்பின் கீழ் நீலகிரி வனப்பிரிவு மாவட்ட வன அலுவலர் எஸ்.கௌதம், இ.வ.ப.., அவர்களுக்கு சிறந்த மாவட்ட வன அலுவலர் விருதினை முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.  

கூடலூர் வனப் பிரிவின் மாவட்ட வன அலுவலராக பணியாற்றிய காலத்தில், மனித–வனவிலங்கு மோதல்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைத்ததுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களின் எதிர்மறை மனப்பாங்கை நட்பான மற்றும் ஆதரவு மனப்பாங்காக மாற்றிய சிறப்பான பணிக்காக மனித–வனவிலங்கு மோதல் மேலாண்மை (Human–Wildlife Conflict Management) தலைப்பின் கீழ் கூடலூர் வனப்பிரிவு மாவட்ட வன அலுவலர் என்.வெங்கடேஷ் பிரபு, இ.வ.ப., அவர்களுக்கு சிறந்த மாவட்ட வன அலுவலர் விருதினை முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.  

புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலராக பணியாற்றிய காலத்தில், பொதுமக்கள் பங்களிப்பை திரட்டுவதன் மூலம் மாநிலத்தின் முதன்மை பசுமை வளர்ச்சி திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த அவரது சிறப்பான பணிக்காக பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission) தலைப்பின் கீழ் புதுக்கோட்டை வனப்பிரிவு மாவட்ட வன அலுவலர் எஸ். கணேசலிங்கம் அவர்களுக்கு சிறந்த மாவட்ட வன அலுவலர் விருதினை  முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.  

தமிழ்நாடு வன அனுபவங்கள் கழகம் லிமிடெட் (Tamil Nadu Wilderness Experiences Corporation Ltd.) நிறுவனத்தின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய காலத்தில், பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் காடுகளின் நிலையான மற்றும் அழிவில்லாத பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் மலையேற்ற ஆர்வலர்களுக்கு வன வாழ்விடத்தின் நன்மைகளை வழங்கிய சிறப்பான பணிக்காக வன உரிமைகள் (Forest Rights) தலைப்பின் கீழ் முதன்மை வனப் பாதுகாவலர் (வனத் துறைத் தலைவர்) சிறப்பு அலுவலர் விஸ்மிஜு விஸ்வநாதன், இ.வ.ப., அவர்களுக்கு சிறந்த மாவட்ட வன அலுவலர் விருதினை  முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.  

=> சிறந்த வனச்சரக அலுவலர் விருது :

வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்குப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தியதற்காக நிலைத்த வன மேலாண்மை (Sustainable Forest Management) தலைப்பின் கீழ் ஜவளகிரி சரகம், ஓசூர் வனப் பிரிவு வனச்சரக அலுவலர் திரு. எம். சரண் விவேக் அவர்களுக்கு சிறந்த வனச்சரக அலுவலர் விருதினை முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.  

வனவிலங்குகள் மற்றும் வனவிலங்குப் பொருட்களை வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தை கட்டுப்படுத்த நுண்ணறிவு அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டதற்காக மனித–வனவிலங்கு மோதல் மேலாண்மை (Human–Wildlife Conflict Management) தலைப்பின் கீழ் சென்னை வன நிலையம், தமிழ்நாடு வனம் மற்றும் வனஉயிரின குற்றக் கட்டுப்பாட்டு பிரிவு வனச்சரக அலுவலர் திரு. டி. பாண்டுரங்கன் அவர்களுக்கு சிறந்த வனச்சரக அலுவலர் விருதினை முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.  

சாலையோர மரக்கன்றுகள் வளர்ப்பை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் கடலோர பகுதிகளையும்  பசுமையாக்கிய சிறப்பான பணிக்காக பசுமை தமிழ்நாடு இயக்கம் (Green Tamil Nadu Mission) தலைப்பின் கீழ் புதுக்கோட்டை சரகம், புதுக்கோட்டை வனப் பிரிவு வனச்சரக அலுவலர் திரு. எம். சதாசிவம் அவர்களுக்கு சிறந்த வனச்சரக அலுவலர் விருதினை முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.  

பழங்குடி மக்களின் தேவைகளை அறிந்து, வன உரிமைகள் உரிய காலத்திற்குள் உண்மையான மனுதாரர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்த சிறப்பான பணிக்காக வன உரிமைகள் (Forest Rights) தலைப்பின் கீழ் இன்நாடு சரகம், கள்ளக்குறிச்சி வனப் பிரிவு வனச்சரக அலுவலர் சதீஷ்குமார் அவர்களுக்கு சிறந்த வனச்சரக அலுவலர் விருதினை முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.  

Also Read: தீவிரமாகும் சர்வதேச போர்... பாதிக்கப்படும் தமிழ்நாடு.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!