Tamilnadu
தமிழ்நாட்டு மீனவர்கள் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களில், 9 மீனவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் மூன்று மீனவர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 11.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, விடுவிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (14.02.2026) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் மற்றும் 28.12.2025 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் தொடர்பாக இலங்கையின் யாழ்ப்பாணம் நீதிமன்றம் 03.02.2026 அன்று வழங்கிய தீர்ப்பு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ள முதலமைச்சர் அவர்கள், சிறை பிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களில், 9 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும், மூன்று மீனவ படகு ஓட்டுநர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 11.60 லட்சம் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக மூன்று மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 9 மீனவர்களும் 05.02.2026 அன்று மிரிஹானா தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதாகவும், தாயகம் திரும்புவதில் உள்ள நடைமுறை தாமதம் காரணமாக அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நம் நாட்டு மீனவர்கள் அங்கு சந்திக்கும் கடினமான சூழ்நிலையையும், மீனவர்களின் குடும்பங்கள் இங்கு எதிர்கொள்ளும் துயரங்களையும் கருத்தில் கொண்டு, விடுவிக்கப்பட்ட மீனவர்களை விரைவில் தாயகம் திரும்ப தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read
-
எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி: இலங்கை சென்றடைந்த இந்திய அணி! - முழு விவரம்
-
ஒரே தவணையில் ரூ.5 ஆயிரம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை… முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்க திரண்ட பெண்கள்!
-
குழந்தைகளின் கல்விக்கு உதவும் உரிமைத் தொகை : முதலமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் சொன்ன மேகலா என்ற பெண் !
-
எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தியா?: பாஜக அமைச்சர் அட்ராசிட்டியால் விழிப்பிதுங்கிய பெண் காவலர்-பின்னணி?
-
ஓமன் நாட்டில் பணிபுரிய அறிய வாய்ப்பு... சம்பளம் எவ்வளவு? என்ன பணி? விண்ணப்பிப்பது எப்படி? - விவரம் உள்ளே!