தமிழ்நாடு

குழந்தைகளின் கல்விக்கு உதவும் உரிமைத் தொகை : முதலமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் சொன்ன மேகலா என்ற பெண் !

ரூ.5000 வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெண்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

குழந்தைகளின் கல்விக்கு உதவும் உரிமைத் தொகை : முதலமைச்சரிடம் மகிழ்ச்சியுடன் சொன்ன மேகலா என்ற பெண் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.02.2026) திருப்பத்தூரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை, சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வருகை தந்த போது, பெருந்திரளான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் நேற்று 5 ஆயிரம் ரூபாய் வழங்கியதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர், முதலமைச்சர் அவர்கள் ஜோலார்பேட்டையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், தாமலேரிமுத்தூரைச் சேர்ந்த மேகலா அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருடன் பேசினார்.

அப்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வருவது குறித்தும், தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் அவர்கள் மேகலா அவர்களிடம் கேட்டபோது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்தே தான் உரிமைத் தொகை பெற்றுவருவதாகவும், இத்தொகையை குழந்தைகளின் பள்ளிச் செலவுகளுக்கு உபயோகப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கல்லூரியில் படித்து வரும் தனது இரண்டு மகன்கள் “தமிழ்ப் புதல்வன்” திட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்காக வழங்கிவரும் மடிக்கணினி திட்டத்தில் பயன்பெற்று உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேகலா அவர்களின் மகளிடம் என்ன படிக்கிறார் என்று கேட்டு, நன்றாக படித்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

மேகலா அவர்கள், தமிழ்நாடு அரசு மக்களின் நல்வாழ்விற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதற்கும், நேற்று கலைஞர்மகளிர் உரிமைத் தொகையில் 5 ஆயிரம் ரூபாய் வழங்கியதற்காகவும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை முதலமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டையிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, பெருந்திரளான பெண்கள் சந்தித்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்காகவும், திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காகவும் இனிப்புகளை வழங்கி நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருப்பத்தூரில் 10 ஏக்கர் பரப்பளவில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம், கையுந்துபந்து மைதானம், கபாடி மைதானம், கூடைப்பந்து மைதானம், நீச்சல் குளம், இறகுபந்து மைதானம், விளையாட்டு வீரர்கள் தங்குமிடம், பார்வையாளர் மாடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் திறந்தவெளி மற்றும் உள்விளையாட்டரங்கம் உள்ளடக்கிய மாவட்ட விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories