Tamilnadu

பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையினால் அறுவடை பருவத்திலுள்ள குறுவை நெற்பயிர் பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட குறுவை நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகையை முன்னதாக வழங்க காப்பீட்டு நிறுவனங்களை வலியுறுத்தியும், விவசாயிகள் இயற்கை பேரிடரினால் ஏற்படும் பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாக்கவும் நடப்பு சம்பா பருவ நெற்பயிரை விவசாயிகள் நவம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்வது குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், குறுவை நெற்பயிரில், மகசூல் இழப்பு கணக்கிட 18,520 பயிர் அறுவடை பரிசோதனைகள் திட்டமிடப்பட்டு, இதுவரை 13,140 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும், மீதமுள்ள 5,380 பரிசோதனைகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும், பயிர் அறுவடை பரிசோதனைகள் முழுவதுமாக முடித்து, அறிவிக்கை செய்யப்பட்ட தகுதி வாய்ந்த கிரமங்களுக்கு, வழக்கமாக 2026 ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை 2025 டிசம்பர் மாதம் முதல் விவசாயிகளின் வங்கிக்கணக்குகளில் நேரடியாக வரவு வைக்க வேண்டும் என்றும், பயிர்க்காப்பீட்டு நிறுவனங்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

தற்போது, அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சம்பா நெற்பயிரை முழு வீச்சில் சாகுபடி செய்து வருகின்றனர். இதுவரை 16.16 இலட்சம் ஏக்கர் பரப்பில் சம்பா நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை குறைவான விவசாயிகளே பயிர் காப்பீடு செய்துள்ளதால் விரைவாக காப்பீடு செய்வதற்கு துரித நடவடிக்கை துறையால் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நிலவிவரும் வானிலை மாற்றங்களினால் பூச்சி நோய் தாக்குதல், வெள்ளச் சேதம் போன்ற இடர்பாடுகளால் ஏற்படக்கூடிய வருவாய் இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதிவரை காத்திராமல், விவசாயிகள் உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் 2025, அக்டோபர் 31 ஆம் தேதிக்குள்ளும், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய27 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் 2025 நவம்பர் 15ஆம் தேதிக்குள்ளும், கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள் 2025 டிசம்பர் 15 ஆம் தேதிக்குள்ளும் சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்ய கேட்டுக்கொண்டார்.

மேலும், துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் மூலம் விவசாயிகளுக்கு சம்பா நெற்பயிரைக் காப்பீடு செய்வது குறித்து ஊடகங்கள் வாயிலாக அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடன் பெறும் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய பயிர்க்காப்பீட்டு இணையதளத்தில் உள்ள “விவசாயிகள் கார்னரில்" நேரிடையாகவோ காப்பீடு செய்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

Also Read: 2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!