தமிழ்நாடு

“இந்தியாவே உங்களுடைய சொத்து” : தோழர் ஜீவா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்சிய வரலாறு!

காரைக்குடி-கழனிவாசலில் ரூ.50 இலட்சம் செலவில் நிறுவப்பட்டுள்ள வீறுகவியரசர் முடியரசன் திருவுருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

“இந்தியாவே உங்களுடைய சொத்து” : தோழர் ஜீவா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்சிய வரலாறு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (30.1.2026) தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சுதந்திரப் போராட்ட காலத்தில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் – தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக 3.27 கோடி ரூபாய் செலவில் அவர்களது திருவுருவச் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள அரங்கம் மற்றும் காரைக்குடி-கழனிவாசலில் 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள வீறுகவியரசர் முடியரசன் அவர்களின் திருவுருவச் சிலை ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சுதந்திரப் போராட்ட காலத்தில் உத்தமர் காந்தியடிகள் – தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக அவர்களது திருவுருவச் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள அரங்கம் திறப்பு

திருப்பூரில் 6.8.2023 அன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-வது மாநில மாநாட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணெலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு பேசியபோது, சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியடிகள், ஜீவாவுடன் சந்தித்து பேசிய சிவகங்கை மாவட்டம், சிராவயல் கிராமத்தில் அச்சந்திப்பின் நினைவாக மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பின்படி, சுதந்திரப் போராட்ட காலத்தில் உத்தமர் காந்தியடிகள் – தோழர் ஜீவா ஆகியோர் சந்தித்து பேசிய சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிராவயல் கிராமத்தில் அந்தச் சந்திப்பின் நினைவாக 0.20.0 ஹெக்டேர் நிலத்தில், 3.27 கோடி ரூபாய் செலவில் அவர்களது திருவுருவச் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

இவ்விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:-

இங்கு நம்முடைய ஜீவா அவர்களும், மகாத்மா காந்தி அவர்களும் சந்தித்த நினைவை போற்றத்தக்கக்கூடிய வகையிலே, அவர்களின் பெயரிலேயே ஒரு மணிமண்டபம் அரசின் சார்பிலே அமைக்கப்பட்டு, அந்த திறப்பு விழா நிகழ்ச்சி இனிதே நடைபெற்றுள்ளது.

மணிமண்டபத்தை கட்டினோம், திறந்து வைத்தோம் என்பதோடு நின்றுவிடாமல், அந்த மணிமண்டபம் இந்த சுற்று வட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு பயன்பட வேண்டும் என்ற வகையிலே திருமண மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டு, அது இன்றைக்கு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

மகாத்மா காந்தி அவர்கள் இந்த பகுதிக்கு வந்தபோது, நம்முடைய தோழர் ஜீவா அவர்கள், மகாத்மா காந்தி அவர்களுக்காக கட்டிய காந்தி ஆசிரமத்தை பார்வையிட்ட நேரத்தில், மகாத்மா காந்தி அவர்கள் தோழர் ஜீவா அவர்களைப் பார்த்து கேட்டாராம், உங்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்று. அதற்கு இதுதான் என்னுடைய சொத்து என்று அவர் சொன்னாராம். உடனே மகாத்மா காந்தி அவர்கள் சொன்னார்களாம், இல்லை, இல்லை இந்தியாவே உங்களுடைய சொத்து என்று சொல்லி, அது வரலாற்றிலே பதிவாகி இருக்கிறது.

அப்படி பதிவாகி இருக்கிற அந்த நிகழ்ச்சியை மக்களுக்கு நினைவுப்படுத்தக்கூடிய வகையிலே, மண்டபமும் திருவுருவச் சிலைகளும் இங்கே அமைக்கப்பட்டு இருக்கிறது.

அதுமட்டுமல்ல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சார்பிலே என்னிடத்திலே சில மாதங்களுக்கு முன்பு, நம்முடைய தோழர் மாநில செயலாளர் திரு. சண்முகம் அவர்கள், காரல் மார்க்ஸ் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும், தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மாநகரத்தில் வைக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தார்கள். அதுவும் கார்ல் மார்க்ஸ் அவர்கள் நூலகத்தை அதிக அளவு பயன்படுத்தி இருக்கிறார். நூலகத்தில் தான் அவருடைய வாழ்வே அமைந்திருந்தது. அதனால் சென்னை கன்னிமாரா நூலகத்தில் இருக்கக்கூடிய மியூசியத்தில் அவருக்கு ஒரு சிலை அரசின் சார்பிலே அமைக்கப்பட்டு, வருகிற ஆறாம் தேதி திறந்து வைக்கப்பட இருக்கிறது.

அந்த நிகழ்ச்சிக்கும் இங்கு வந்திருக்கக்கூடிய அனைவரும் வர வேண்டும் என்று, முக்கியமாக இங்கு இருக்கக்கூடிய தலைவர்கள் அனைவரும் அந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று அரசின் சார்பில் உங்கள் அத்தனை பேருக்கும் அழைப்பு விடுப்பதோடு, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டமைக்காக நான் உங்கள் அத்தனை பேருக்கும் நன்றி, நன்றி, நன்றி என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். வணக்கம்.

“இந்தியாவே உங்களுடைய சொத்து” : தோழர் ஜீவா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன சுவாரஸ்சிய வரலாறு!

வீறுகவியரசர் முடியரசன் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு

தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவரான முடியரசன் அவர்கள் (07.10.1920 - 03.12.1998) தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பிறந்தார். துரைராசு என்ற தனது பெயரை முடியரசன் என்று மாற்றிக் கொண்டார். பாவேந்தர் பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப் பாடியவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பாராட்டுதலைப் பெற்ற திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் திகழ்ந்தவர். சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியிலும், காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் 28 ஆண்டுகளும் தமிழாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தம் கவிதையின்படியே வாழ்ந்து காட்டிய கவிஞர்க்கு எடுத்துக்காட்டு இவர். சாதி-சமய, சாத்திரச் சடங்குகளை வெறுத்தவர். இவரது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டாம் என்று வலியுறுத்தி அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.

பேரறிஞர் அண்ணா அவர்களால் “தமிழ்நாட்டு வானம்பாடி” என்றும் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்றும், பாவேந்தர் பாரதிதாசனாரால் “எனக்குப் பின் கவிஞன்“ என்றும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் “திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர் என்றும் பாராட்டப்பெற்றவர்.

கவிஞர்களிடையே முடிசூடா மன்னராகவும் தமிழ்த்தென்றல் திரு.வி.க., பேராசிரியர் மயிலை சிவமுத்து, கவிஞர் வாணிதாசன் ஆகிய புலமைச் சான்றோர்களுடன் நட்பு பாராட்டியவர் கவிஞர் முடியரசனார். இவர் 26 நூல்களை இயற்றியுள்ளார். இதில் முடியரசன் கவிதைகள், வீரகாவியம், பூங்கொடி என்னும் காவியம் உள்ளிட்டவை தமிழ்நாடு அரசின் பரிசை பெற்றுள்ளன. இவரின் இலக்கியப் பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது, பாவேந்தர் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கிச் சிறப்பித்துள்ளது. மேலும், தமிழ் வளர்ச்சித் துறையால் இவரின் அனைத்துப் படைப்புகளும் 2005-ஆம் ஆண்டில் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.

இவரது தமிழ்த் தொண்டினை போற்றிடும் வகையில், 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில், பாவேந்தரால் எனக்குப் பிறகு கவிஞன் முடியரசன் என்று பாராட்டப்பட்டவரும் ‘வளையா முடியரசர்’, ‘வணங்கா முடியரசர்’ எனப் போற்றப்பட்டவருமான வீறுகவியரசர் முடியரசன் அவர்களின் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி-கழனிவாசலில் 50 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள வீறுகவியரசர் முடியரசன் அவர்களின் திருவுருவச் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, அச்சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

banner

Related Stories

Related Stories