Tamilnadu
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் இன்று வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகர், மேட்டுக்குப்பம் சாலை, பாரதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வுக்காணும் வகையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "நலம் காக்கும் ஸ்டாலின் எனும் மகத்தான திட்டம் 02.08.2025 அன்று சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் இந்த முகாம் நடைபெறுகிறது. மேலும் இந்த முகாம் கடந்த வாரம் வரை 11 முகாம் என்கின்ற வகையில் இதுவரை 407 முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 6,37,089 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.
இந்த திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் 1256 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், சென்னைக்கு அடுத்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் தலா 4 வீதம் 20 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. 10 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 வீதம் 57 முகாம்கள் என்கின்ற அளவிலும், தமிழ்நாட்டில் உள்ள 388 வட்டாரங்களில் தலா 3 என்கின்ற வகையிலும் ஆக ஒட்டு மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு இதுவரை 407 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டம் மக்களை பெரிய அளவில் கவர்ந்திருக்கின்றது.
இன்று இந்த முகாம் 12வது வாரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இம்முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறியியல் மற்றும் மகளிர் நல மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சித்தா மற்றும் இந்திய முறை மருத்துவம் போன்ற 17 வகையான மருத்துவ முறைகள் இந்த முகாம்களில் நடத்தப்படவிருக்கிறது.
மேலும் தனியார் மருத்துவமனைகளில் முழு உடற்பரிசோதனைகளுக்கு ரூ.20,000/- வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் கூட ரூ.4,000/- வரை செலவாகும். ஆனால் கட்டணமின்றி இந்த முகாமில் முழு உடற்பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இன்னொன்று மிக முக்கியமான சேவையாக அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ஒவ்வொரு முகாமிற்கும் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு முழு உடற் பரிசோதனை செய்யப்படுகிறது.
அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய சேவை செய்யப்படுவது என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறை. மேலும் இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் தரப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு மருத்துவர்களின் ஆலோசனை, மருத்துவர்களிடத்தில் அவர்களுக்கு எத்தனை சதவிகிதம் அளவிற்கு பாதிப்பு இருக்கின்றது என்று அறிந்து சான்றிதழ் வழங்குதல், தொடர்ந்து வருவாய் அளவில் சான்றிதழ் பிறகுதான் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற முடியும் என்கின்ற நிலை இருந்தது.
எனவே மாற்றுத்திறனாளிகள் பல்வேறு அலுவலகங்களுக்கு சென்றுதான் இச்சான்றிதழ் பெறும் நிலை இருந்தது. அந்தவகையில் முதலமைச்சர் அவர்கள் அந்தந்த பகுதிகளிலேயே நடைபெறுகின்ற முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் நேரிடையாக வருகை புரிந்து அவர்களுடைய மாற்றுத்திறன் அளவினை மருத்துவர்களிடம் காண்பித்து அன்றைய நாளிலேயே சான்றிதழ்கள் பெறும் நிலையினை தந்திருக்கிறார்கள். இதுவரை நடைபெற்றுள்ள 407 முகாம்கள் மூலம் 26,819 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 1.47 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். இருந்தாலும் புதியதாக குடும்பங்கள் இத்திட்டத்தில் பதிவு செய்தவுடன் அவர்களுக்கும் காப்பீடு அட்டைகள் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை நடைபெற்றுள்ள 407 முகாம்களில் 21,191 குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 15 முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த வாரம் வரை 6வது முகாமாக நடைபெற்றுள்ளது. இதுவரை 14,604 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!