Tamilnadu
‘மணலி-எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்ப்பு மன்றம்’ & ‘தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளை’ தொடக்கம்!
தமிழ்நாடு அரசு வனத்துறையில் புதியதாக தேர்வுசெய்யப்பட்ட வனப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதன் மூலமும், மணலி எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்ப்பு மன்றம் (MERRC) மற்றும் கடல்சார் வள அறக்கட்டளை ஆகியவற்றை தொடங்குவதன் மூலமும் மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்தப்படுகிறது.
நேற்று (09.09.2025) கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் தொடர் முன்னெடுப்புகளை தொடங்கி வைக்கப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மீள்தன்மை மற்றும் சமூக அதிகாரமளித்தல் ஆகியவற்றில் மாநிலத்தின் தலைமைத் தொடக்கத்தை உறுதிப்படுத்துகிறது. நிதி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் மணலி-எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்ப்பு மன்றம் (MERRC) மற்றும் தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளை (TN-MRF) ஆகியவற்றை தொடங்கி வைத்தார்கள்.
மேலும் 2025 ஆம் ஆண்டின் மஞ்சப்பை விருதுகளையும் வழங்கினார். வனத்துறையினை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 333 வனப் பணியாளர்களுக்கு பணிநியமன ஆணையினை வனம் மற்றும் காதி துறை அமைச்சர் ஆர். எஸ். ராஜ கண்ணப்பன் வழங்கினார்கள்.
இது தமிழ்நாடு வனத்துறை மேலும் சிறப்பாக செயல்பட வழிவகுக்கும். இந்த ஆண்டு ஜூன் மாதம் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 1413 வனப் பணியாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023-ம் ஆண்டு, மணலி-எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட மாபெரும் எண்ணெய் கசிவினை முன்னிறுத்தி, முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் மிகுந்த இப்பகுதியினை மறுசீரமைக்கவும் புத்துயிரூட்டவும் மணலி-எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்ப்பு மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பானது, பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து பசுமைத் திட்டங்கள், நீர்நிலைகள் மீட்டெடுப்பு, திடக்கழிவு மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு ஆகிய பணிகளை மேற்கொள்ளும். இதற்கென, தண்டையார்பேட்டையில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம், இரண்டு பறக்கும் படை அலுவலகங்கள் மற்றும் வெள்ளம், புயல் மற்றும் தொழிற்சாலை விபத்துகளை எதிர்கொள்ள நவீன வசதிகளுடன் கூடிய அவசரநிலை நடவடிக்கை மையம் ஆகியவையும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஆர். எஸ். ராஜகண்ணப்பன் ஆகியோர் இணைந்து இந்த மணலி-எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர்ப்பு மன்ற (MERRC) கட்டடத்திற்கான அடிக்கல்லினை நாட்டினர்கள்.
கடந்த 2025-26-ம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு கூட்டத்தொடரின் போது ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்ட, ஆய்வு சார்ந்த மற்றும் சமூகங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு கடல்சார் வள அறக்கட்டளை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் காலநிலை மீள்திறனை வலுப்படுத்தவும் மற்றும் கடலோர சமூகங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தவும் செய்யும் அதேவேளையில், தமிழ்நாட்டின் கடல்சார் மற்றும் கடலோர சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும் மற்றும் நிலையான முறையில் நிர்வகிப்பதையும் இந்த அறக்கட்டளை நோக்கமாகக் கொண்டு செயல்படும்.
மேலும் அழிவின் விளிம்பில் இருக்கும் இனங்களான கடல்பசுக்கள், அலையாத்திக் காடுகள், பவளப்பாறைகள், கடற்கரைகள் போன்றவற்றை பாதுகாப்பதையும், நிலையான மீன்பிடி முறைகள், சூழல் சுற்றுலாக்கள் மற்றும் இயற்கை குறித்த கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்கள், பொது சமூகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன் இணைந்து பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படும்.
முதலமைச்சர் அவர்களால் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட “மீண்டும் மஞ்சப்பை – அடிப்படைகளுக்கு மீண்டும் செல்வோம், நல் எதிர்காலத்திற்காக”பரப்புரையின் வெற்றியைத் தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டிற்கான மஞ்சப்பை விருதுகள் தங்களது வளாகங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பயன்பாட்டினை வெற்றிகரமாக ஒழித்து, சூழலுக்குகந்த பொருட்களின் பயன்பாட்டை முன்னிறுத்திய தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, பெலரஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி;
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவாளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள், சிறந்த பள்ளிகள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு முறையே முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகளுடன் மஞ்சப்பை விருதுகளும் வழங்கப்பட்டன.
அதேபோல், கல்லூரிகள் பிரிவில், திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த ஜமால் முகமது கல்லூரி, ஈரோடு மாவட்டம் டி.என். பாளையத்தைச் சேர்ந்த ஜேகேகே முனிராஜா தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த ஹோலி க்ராஸ் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு முறையே முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுகளுடன் மஞ்சப்பை விருதுகள் வழங்கப்பட்டன.
இதற்காக, ரூபாய் 54.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூபாய் 10.00 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூபாய் 5.00 இலட்சம், மூன்றாம் பரிசாக ரூபாய் 3.00 இலட்சம் வழங்கப்பட்டது.
Also Read
-
ராகுல் காந்தியின் வாகனங்களைத் தடுத்த பாஜக குண்டர்கள் - செல்வப்பெருந்தகை கண்டனம் !
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : எந்தெந்த இடங்கள்... விவரம் உள்ளே !
-
காவலர் நாள் விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்ற காவலர்கள்!
-
”கண்ணாடி பாலம் பாதுகாப்பாகவும் உறுதியுடனும் உள்ளது" : அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!
-
நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆய்வு : தனியார் பேருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!