Tamilnadu

ரூ.11 கோடி செலவில் வணிக வளாகம் : திருவாரூர் மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது திருவாரூர் மாவட்டத்திற்கு ஆறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

முதலாவது அறிவிப்பு: -

திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பழமை வாய்ந்த ஜுபிளி மார்க்கெட் பகுதியில், 11 கோடி ரூபாய் செலவில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு: -

திருவாரூர் மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் நன்னிலம் வட்டம், வண்டாம்பாளை ஊராட்சியில் 56 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன், “திருவாரூர் மாவட்ட மாதிரிப் பள்ளி” புதிதாக அமைக்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு: -

மன்னார்குடி பகுதியில் இருக்கும் மாணவிகள் பயன்பெறும் வகையில், மன்னார்குடி நகராட்சியில் 18 கோடி ரூபாய் செலவில், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படும்.

நான்காவது அறிவிப்பு :-

திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களின் மதகுகள் மற்றும் நீர் ரெகுலேட்டர்கள் ஆகியவை 43 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு :-

நன்னிலம் வட்டத்தில் இருக்கும் பூந்தோட்டம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

ஆறாவது அறிவிப்பு :-

பாரம்பரிய நெல் இரகங்களைத் தம் வாழ்நாள் முழுவதும் பேணிப் பாதுகாத்த “நெல் ஜெயராமன்” அவர்களின் அரும்பணியைப் போற்றக்கூடிய வகையில் திருத்துறைப்பூண்டியில், அவருக்கு நினைவுச் சிலை அமைக்கப்படும்.

Also Read: “கொடுத்த காசுக்கு மேல என்னாமா கூவுறான்!” எனும் அளவிற்கு பேசுகிறார் பழனிசாமி! : முதலமைச்சர் உரை!