மு.க.ஸ்டாலின்

“கொடுத்த காசுக்கு மேல என்னாமா கூவுறான்!” எனும் அளவிற்கு பேசுகிறார் பழனிசாமி! : முதலமைச்சர் உரை!

“திருவாரூர் என்றாலே எல்லோருடைய மனதிலும் தேரும் தலைவர் கலைஞரும்தான் நினைவிற்கு வருவார்கள்! தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை இன்றைக்கு நாகை மாவட்டத்தில் இருந்தாலும், ஒருகாலத்தில் தஞ்சை மாவட்டம்தான்!”

“கொடுத்த காசுக்கு மேல என்னாமா கூவுறான்!” எனும் அளவிற்கு பேசுகிறார் பழனிசாமி! : முதலமைச்சர் உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (10.7.2025) திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி ஆற்றிய உரை.

ஆழித்தேர் ஓடும் ஆரூர் மண்ணின் வாசமும் – தலைவர் கலைஞர் வாழ்ந்த மண்ணின் பாசமும் வரவேற்கக்கூடிய வகையில், வேளாண்மையும் - கலையும் செழித்து வளரும் திருவாரூர் மண்ணில், “ஆரூர் அமர்ந்த அரசே போற்றி” என்கின்ற பதிகத்திற்கேற்ப தமிழ்நாட்டை ஐந்து முறை ஆண்ட ஆரூர் காரர் முத்தமிழறிஞர் கலைஞரின் மகனாக மட்டுமின்றி, அவருடைய கொள்கை வாரிசான தமிழ்நாட்டின் முதலமைச்சராக இந்த விழாவில் நான் பங்கேற்கிறேன்.

846 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஆயிரத்து 234 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2 ஆயிரத்து 423 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 67 ஆயிரத்து 181 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற இந்த மாபெரும் அரசு விழாவில் கலந்துகொண்டு, உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்! பெருமைப்படுகிறேன்!

திருவாரூர் என்றாலே எல்லோருடைய மனதிலும் திருவாரூர் தேரும் தலைவர் கலைஞரும்தான் நினைவிற்கு வருவார்கள்! தோன்றுவார்கள்! தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை இன்றைக்கு நாகை மாவட்டத்தில் இருந்தாலும், ஒருகாலத்தில் எல்லாம் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்தான்!

இந்த மண்ணில் பிறந்த கலைஞர்தான், தன்னுடைய அறிவால் – ஆற்றலால் - தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று தொலைநோக்குப் பார்வையால் நவீன தமிழ்நாட்டை தன்னுடைய நிர்வாகத் திறனால் உருவாக்கியிருக்கிறார்.

பூமிப்பந்தில் வாழும் தமிழர்கள் எல்லாம் ‘தமிழினத் தலைவர்’ என்று போற்றக்கூடிய அளவுக்கு உயர்ந்து, இன்றைக்கு எங்கும் நிறைந்து, நமக்கெல்லாம் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்!

நான் பிற மாவட்டங்களில் பேசும்போது, மக்களிடம் “உங்களில் ஒருவன்” என்று சொல்வதுண்டு; திருவாரூர் மாவட்ட மக்கள் மட்டும்தான் “எங்களில் ஒருவன்” என்று என்னை அன்போடு அரவணைக்கிறீர்கள். அதற்குக் காரணம், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்!

பெருமையோடு நான் சொல்கிறேன் - கலைஞர் ஆட்சியின் நீட்சிதான், இந்த திராவிட மாடல் ஆட்சி! பேரறிஞர் அண்ணா சொல்வார்: என்னுடைய தம்பிமார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில்

திறமைசாலிகள்! என்று சொல்வார்! அப்படி, இன்றைய அமைச்சரவையில் இருக்கக்கூடிய தம்பிமார் படையில், தலைநிமர்ந்து சொல்லுகின்ற திறமைசாலியாக, தம்பி டி.ஆர்.பி.ராஜா இருக்கிறார்! உயரத்தில் மட்டும் நான் சொல்லவில்லை.

அவரது சிறப்பான பணிகளால் தமிழ்நாட்டின் தொழில் துறை தலைநிமிர்ந்து நிற்கிறது! அவரைப் போலவே - டி.ஆர்.பி.ராஜாவின் உழைப்பாலும், சாதனையாலும் ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது! முதலீடுகளும் பெருகுகிறது;

வேலைவாய்ப்புகளும் பெருகுகிறது! அனைத்து மாவட்டங்களும் தொழில் வளர்ச்சி நிறைந்த மாவட்டங்களாக வளர்ந்து வருகிறது! நிறைவாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், செய்தி, சேனல்களின் வளர்ச்சியை டி.ஆர்.பி ரேட்டை வைத்துக் குறிப்பிட்டுச் சொல்வார்கள்.

“கொடுத்த காசுக்கு மேல என்னாமா கூவுறான்!” எனும் அளவிற்கு பேசுகிறார் பழனிசாமி! : முதலமைச்சர் உரை!

அதுபோல, நம்முடைய திராவிட மாடல் அரசின் தொழில்துறை வளர்ச்சியை நம்முடைய டி.ஆர்.பி. ராஜா-வின் செயல்பாட்டை வைத்துக் கணிக்கலாம். தன்னை வெற்றிகரமாக நிரூபித்துக் கொண்டிருக்கக்கூடிய தம்பி டி.ஆர்.பி.ராஜாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!

அவர் மட்டுமல்ல, இந்த மாவட்டத்தின் செயல்வீரராக நம்முடைய பூண்டி கலைவாணன் அவர்கள் நேற்றும், இன்றும் திருவாரூரை திருவிழாவாக்கி என்னுடைய மனதை இனிக்க வைத்திருக்கிறார். தலைவர் கலைஞருக்கு செல்லப்பிள்ளையாக அவர் மறைந்த பின்பு திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக செயல்பட்டு, எந்தப் பொறுப்பை வழங்கினாலும், பொறுப்பாக, சிறப்பாக பணியை முடிப்பவர் சகோதரர் கலைவாணன் அவர்கள். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!

இந்த விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அவர்களுக்கும், அவருக்கு துணை நின்ற அரசு அலுவலர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!

திருவாரூரை பொறுத்தவரைக்கும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் 22 ஆண்டுகள் ஓடாத ஆழித்தேரை நவீன தொழில்நுட்பத்தில் பக்தர்கள் பரவசம் அடையக்கூடிய வகையில், ஓட்டிக்காட்டியவர். திருவாரூர் மாவட்டத்தை தலைநகரமாக ஆக்கியவர்!

ஆட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், திருவாரூர் நகராட்சிக்குப் புதிய கட்டடம், மாவட்ட காவல் அலுவலகம், புதிய பேருந்து நிலையத்திற்கு 2010-இல் அடிக்கல் நாட்டு விழா என அனைத்தும் கலைஞர் அவர்களால் உருவானது.

1970-இல் திருவாரூரில் திரு.வி.க. அரசுக் கல்லூரி கொண்டு வந்த தலைவர் கலைஞர் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். 2009-இல் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தையும் கொண்டு வந்தார். அதுமட்டுமல்ல, 2010-இல் மருத்துவக் கல்லூரி, மன்னார்குடியில் அரசு கலைக் கல்லூரி, பாமணி உரத் தொழிற்சாலை, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த அண்ணன் கோ.சி.மணி அவர்கள் மாவட்டம் முழுவதும் குடிநீர் வசதிகளை உருவாக்கித் தந்தார்.

டி.ஆர்.பாலு அவர்களுடைய முயற்சியால் ஐந்து புதிய இரயில்கள் விடப்பட்டது. அதில் முக்கியமானது செம்மொழி எக்ஸ்பிரஸ்! மன்னையிலிருந்து திருப்பதிக்கு எக்ஸ்பிரஸ் விடப்பட்டதும் கழகத்தின் முயற்சியினால்தான்!

மாற்றுக் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் வறண்ட ஆறு போல திருவாரூர் காய்ந்துவிடும். திமுக ஆட்சிக்கு வந்தால் ஆடிப் பெருக்கு போல, வளர்ச்சியும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடும். கடந்த நான்காண்டு காலத்தில், திராவிட மாடல் ஆட்சியில் நம்முடைய திருவாரூர் மாவட்டத்தில் நிறைவேற்றித் தரப்பட்டிருக்கக்கூடிய முத்திரைத் திட்டங்களை நேரத்தின் அருமையை கருதி, நான் தலைப்புச் செய்திகளாக அவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.

 கூத்தாநல்லூர் வட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டிருக்கிறது.

 நன்னிலம் வட்டம் வண்டாம்பாளை கிராமத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டிருக்கிறது.

 241 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

 கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், இந்த மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், 2 இலட்சத்து 37 ஆயிரத்து 287 குடும்ப தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

 புதுமைப்பெண் திட்டத்தில், 12 ஆயிரத்து 918 மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

“கொடுத்த காசுக்கு மேல என்னாமா கூவுறான்!” எனும் அளவிற்கு பேசுகிறார் பழனிசாமி! : முதலமைச்சர் உரை!

 சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் திட்டத்தில், 52 ஆயிரத்து 529 மகளிருக்கு 2 ஆயிரத்து 976 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

 அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உட்பட பல்வேறு தொழில் முனைவோருக்கான மானியத்துடன் வங்கி கடனுதவி வழங்கும் திட்டங்களின்கீழ், இதுவரை 513 தொழில்முனைவோருக்கு சுமார் 155 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.

 பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் சுமார் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 264 பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 நான் முதல்வன் திட்டத்தில், 53 ஆயிரத்து 168 மாணவர்கள் திறன் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்!

 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில், 37 ஆயிரத்து 848 மாணவர்கள் சூடாகவும், சுவையாகவும் சத்தான உணவை சாப்பிடுகிறார்கள்!

 அதுமட்டுமல்ல, நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கோட்டூர், திருவாரூர், கொரடாச்சேரி ஆகிய 6 ஒன்றியங்களில் உள்ள 665 குடியிருப்புகளுக்கு 880 கோடி ரூபாய் மதிப்பில் கொள்ளிடம் ஆற்றின் நீரை ஆதாரமாக கொண்டு தொடங்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

90 விழுக்காடு கட்டுமானப் பணிகள் முடிவுற்றுள்ளது. அமைச்சர் நேரு அவர்கள் உறுதி கொடுத்து இருக்கிறார். இந்த திட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்போகிறோம் என்று அறிவித்திருக்கிறார்.

 அதுமட்டுமல்ல, திருவாரூர், கூத்தாநல்லூர் நகராட்சிகளில், 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

 49 பாலங்கள் கட்டும் பணிக்கு திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

 முத்துப்பேட்டையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

 முக்கியமாக மன்னார்குடி, கூத்தாநல்லூர் வட்டங்களில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிப்காட் தொழில் வளாகம் அமைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

 நெடுவாக்கோட்டை பகுதியில், ஜவுளி ஆடை தயாரிக்கும் சிப்காட் டெக்ஸ் பார்க் அமைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

 கண்டமங்கலத்தில் மனநலம், அறிவுசார் இல்லம் கட்டப்பட்டு வருகிறது.

 கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், நான்காயிரத்து 720 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கி, அதில் ஆயிரத்து 249 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இப்படி நாள் முழுவதும் நான் சொல்லிக்கொண்டே போகலாம்.

இங்கே விவசாயிகள் வந்திருக்கிறீர்கள். நம்முடைய எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்களும் வந்திருக்கிறார்கள். திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பயனடையக்கூடிய பட்டியலை கேட்டேன். பெரியதாக வழங்கினார். அதிலிருந்து சில முக்கியமானவற்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். இந்த மாவட்டத்தில் மட்டும், கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், 83 ஆயிரத்து 721 விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள்.

 அதில் ஆழ்துளை கிணறுகள், பண்ணை குட்டைகள், வேளாண் இடுபொருள்கள் மற்றும் விவசாயக் கருவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

 அதுமட்டுமல்ல, நுண்ணீர் பாசன திட்டத்தில், இதுவரை 2 ஆயிரத்து 887 விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள்.

 பயிர் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துகொண்டால், ஏழு இலட்சத்து 77 ஆயிரத்து 605 விவசாயிகள் பயனடையும் வகையில் இதுவரை 143 கோடியே 78 இலட்சம் ரூபாய் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

 பயிர் கடன் மட்டும் 2 இலட்சத்து 43 ஆயிரத்து 100 விவசாயிகளுக்கு ஆயிரத்து 556 கோடியே 26 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

 2 ஆயிரத்து 426 சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

 31 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 14 கோடியே 2 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 20 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நவீன மேற்கூரையுடன் கூடிய சேமிப்புத் தளங்கள் 39 கோடியே 22 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகள் நிறைவு பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

“கொடுத்த காசுக்கு மேல என்னாமா கூவுறான்!” எனும் அளவிற்கு பேசுகிறார் பழனிசாமி! : முதலமைச்சர் உரை!

 2025-2026-ஆம் நிதியாண்டில் 8 இடங்களில், 80 கோடியே 66 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 56 ஆயிரம் மெட்ரிக் டன்கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைக்கவும், 10 இடங்களில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 சில நாட்களுக்கு முன்னால், நான் சேலத்தில் நடந்த அரசு விழாவில் குறிப்பிட்டேன் - சாதாரண ரக நெல், குவிண்டாலுக்கு 2500 ரூபாய்க்கும் சன்ன ரக நெல், குவிண்டாலுக்கு 2,548 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்தேன்.

இப்படி வேளாண் மக்களுக்காக பல நலத்திட்டங்களை செய்து கொண்டு வருகிறோம்.

திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகுதான், ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுகிறது. உங்களில் ஒருவனான நானே அதனை திறந்து வைத்திருக்கிறேன். குறுவை பாசனப் பரப்பு பெருகி இருக்கிறது. விவசாயிகளுக்கு உற்பத்திப் பொருள் விலையும் அதிகமாக கிடைத்திருக்கிறது. எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், அவர்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் புதிய அறிவிப்புகளை நான் வெளியிடாமல் வரமாட்டேன்.

அப்படி இருக்கும்போது, என்னுடைய சொந்த டெல்டா மாவட்டத்திற்கு வந்துவிட்டு, அறிவிப்பு இல்லாமல் சென்றால் நீங்கள் விட்டுவிடுவீர்களா? நான் போய்விட முடியுமா? முடியாது.

முதலாவது அறிவிப்பு - திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பழமை வாய்ந்த ஜுபிளி மார்க்கெட் பகுதியில், 11 கோடி ரூபாய் செலவில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு - திருவாரூர் மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் நன்னிலம் வட்டம், வண்டாம்பாளை ஊராட்சியில் 56 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன், “திருவாரூர் மாவட்ட மாதிரிப் பள்ளி” புதிதாக அமைக்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு - மன்னார்குடி பகுதியில் இருக்கும் மாணவிகள் பயன்பெறும் வகையில், மன்னார்குடி நகராட்சியில் 18 கோடி ரூபாய் செலவில், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக அமைக்கப்படும்.

நான்காவது அறிவிப்பு - திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களின் மதகுகள் மற்றும் நீர் ரெகுலேட்டர்கள் ஆகியவை 43 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு - நன்னிலம் வட்டத்தில் இருக்கும் பூந்தோட்டம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான புறவழிச்சாலை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

ஆறாவது அறிவிப்பு - பாரம்பரிய நெல் இரகங்களைத் தம் வாழ்நாள் முழுவதும் பேணிப் பாதுகாத்த “நெல் ஜெயராமன்” அவர்களின் அரும்பணியைப் போற்றக்கூடிய வகையில் திருத்துறைப்பூண்டியில், அவருக்கு நினைவுச் சிலை அமைக்கப்படும்.

இந்த அறிவிப்புகள் எல்லாம் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். தலைமைச் செயலகத்தில் துறைவாரியாக ஆய்வை நான் தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறேன்! நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன் - தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இவ்வளவு திட்டங்களை எந்த அரசும் செய்திருக்காது. எப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில், இந்த திட்டங்களை எல்லாம் நாம் எப்படி செயல்படுத்துகிறோம் என்று உங்களுக்கெல்லாம் தெரியும்!

பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியில், ஆமாம் மத்தியில், நமக்கு இடையூறாக இருக்கும் ஒன்றிய அரசையும் சமாளித்து, இவ்வளவு சாதனைகளைச் செய்திருக்கிறோம். தொடர்ந்து செய்யதான் போகிறோம். இதையெல்லாம் பார்த்து, தாங்கிக்கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் இப்போது என்ன செய்கிறார்?

தமிழ்நாட்டை மீட்போம் - சாரி, தமிழகத்தை மீட்போம் என்று ஒரு பயணத்தை தொடங்கி இருக்கிறார்! ஏனென்றால், தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று சொல்லுகின்ற கூட்டத்துடன், இப்போது அ.தி.மு.க.வை சேர்த்துவிட்டார். அ.தி.மு.க-வை மீட்க முடியாத இவர் தமிழகத்தை மீட்கப் போகிறாராம்!

திருவாளர் பழனிசாமி அவர்களே, உங்களிடம் இருந்து தமிழ்நாடு ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டது. கூவத்தூரில் ஏலம் எடுத்து, கரப்ஷன் - கலெக்‌ஷன் – கமிஷன் என்று தமிழ்நாடே பார்க்காத அவலமான ஆட்சியை நடத்தினீர்கள்! கொஞ்ச நஞ்சமல்ல - செய்த குற்றங்களிலிருந்து காப்பாற்றிக்கொள்ள, பா.ஜ.க.விடம் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டையும், தமிழர்களையும், அவர்களின் உரிமைகளையும் அடகு வைத்தீர்கள்.

நீங்கள் செய்த கேடுகள் ஒன்றா - இரண்டா? அதையெல்லாம் சரிசெய்து, இன்று இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நம்பர் ஒன், 9.69 விழுக்காடு!

இதை நான் சொல்லவில்லை. இதை ஒன்றிய அரசே சொல்லியிருக்கிறது. இதை ஒன்றிய அரசால் இதை மறைக்க முடியவில்லை! மறுக்க முடியவில்லை! தலைநிமிர்ந்த தமிழ்நாடாக இன்றைக்கு வளர்த்தெடுத்திருக்கிறோம்! வெளிமாநில மக்கள் எல்லாம் தமிழ்நாட்டைப்பற்றி பெருமையோடு பேசுகிறார்கள்! இதையெல்லாம், உங்களுக்கு எப்படி தெரிய போகிறது

பழனிசாமி அவர்களே? உங்களுக்கு தெரிந்தது எல்லாம், துரோகம் செய்வது மட்டும் தான். உங்களை கொண்டு வந்தவருக்கு துரோகம் செய்து, வெளியில் அனுப்பினீர்கள்! உங்களை நம்பி வழங்கப்பட்ட கட்சிக்கும், அந்த தொண்டர்களுக்கும் துரோகம் செய்து, கூட்டணி வைத்தீர்கள்! ஆட்சியில் இருந்தபோது, தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து, தமிழ்நாட்டு மக்கள் மொத்த பேருக்கும் துரோகம் செய்தீர்கள்!

நாங்கள் கேட்பது - ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி கொடுப்பது இல்லை. நாம் கொடுக்கும் ஜி.எஸ்.டி - அந்த நிதியையும் நமக்கு ஒழுங்காக திருப்பி தருவதில்லை. சிறப்புத் திட்டங்களும் எதுவும் கிடையாது. ஏன்... ஒன்றிய அரசின் திட்டங்களுக்கே நாம்தான் நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறோம்!

நம்முடைய மாணவர்கள் படிக்க தேவையான பள்ளிக்கல்வி நிதியை அனைத்து மாநிலங்களுக்கும் தரக்கூடிய நிதியை நமக்கு மட்டும் வழங்கவில்லை. தமிழ் வளர்ச்சிக்கு நிதி இல்லை! தமிழர்களின் பெருமை வெளியே வரக்கூடாது என்று கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கிறார்கள்!

கீழடி என்றால் அவருக்கு என்ன தெரியும் என்றால், கீழே படுத்துக் கொண்டு போகிறார் பாருங்கள் அதுதான் அவருக்குத் தெரியும். கீழடி ஆய்வறிக்கையை வெளியிடாமல் இருக்கிறார்கள். அதுமட்டுமா! தொகுதி மறுவரையறை பிரச்சினை! இப்போது, வாக்காளர் பட்டியல் குளறுபடி ஆகியிருக்கின்ற பிரச்சினை! இப்படி, தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் பறித்தவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, எப்படி உங்களால் கூச்சமே இல்லாமல் பயணம் செய்ய முடிகிறது?

“கொடுத்த காசுக்கு மேல என்னாமா கூவுறான்!” எனும் அளவிற்கு பேசுகிறார் பழனிசாமி! : முதலமைச்சர் உரை!

அதுமட்டுமல்ல, வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார் –எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. சமீபத்தில் கூட என்ன பேசியிருக்கிறார்? இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பள்ளி, கல்லூரி கட்டக்கூடாதாம்… இதற்கு முன்னால், பா.ஜ.க.வுக்கு வெறும் ‘டப்பிங் வாய்ஸ்’தான் பேசிக்கொண்டு இருந்தார்… இப்போது, பா.ஜ.க.வின் ஒரிஜினல் வாய்ஸ்-ஆகவே பேச ஆரம்பித்துவிட்டார்!

அறநிலையத்துறை சட்டத்திலேயே கல்லூரி தொடங்குவதற்கு சட்டம் இருக்கிறது! இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படி தான் முதலமைச்சராக இருந்தீர்களோ என்று எனக்கு புரியவில்லை. மறைந்த பக்தவத்சலம் காலம் தொடங்கி, ஏன்! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களே முதலமைச்சராக இருந்தபோது, பழனி ஆண்டவர் தொழில்நுட்ப கல்லூரியை திறந்திருக்கிறார்.

அந்தக் கல்லூரிக்கு கூடுதல் கட்டடத்தை சென்ற முறை நீங்களே திறந்து வைத்திருக்கிறீர்கள். அப்போது ஏதாவது மயக்கத்தில் போய் திறந்து வைத்துவிட்டு வந்தீர்களா? இப்போது நாங்கள் கல்லூரி தொடங்கினால் தவறா?

பா.ஜ.க. தலைவர்களே இது போன்று, “கல்லூரி தொடங்கக் கூடாது” என்று பேசுவது இல்லை. ஆனால், பழனிசாமி மட்டும் பேசுகிறார். இதை பார்த்தால் ஒன்று தான் எனக்கு நினைவிற்கு வருகிறது

– ஒரு திரைப்படத்தில் வடிவேலு காமெடி ஒன்று வரும், அது என்னவென்றால், “கொடுத்த காசுக்கு மேல் என்னமா கூவுறான்” அந்த மாதிரி பா.ஜ.க.காரங்களே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரைக்கம், தமிழ்நாடு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு திராவிட மாடல் அரசு செய்திருக்கக்கூடிய சாதனைகளின் பட்டியல் பெரியதாக இருக்கும் – நான் பழனிசாமியை நேரடியாகவே கேட்கிறேன். ஏன் படிப்பு என்றால், உங்களுக்கு அவ்வளவு கசக்கிறது?

கல்விக்காக உண்மையிலேயே குரல் எழுப்புவது போன்று இருந்தால் - கும்பகோணத்தில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயரால் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் சட்டமியற்றி அனுப்பி வைத்தோம். இரண்டு மாதம் ஆகியிருக்கிறது.

அதற்கு ஆளுநர் இதுவரையில் அனுமதி தராமல் இருக்கிறார். நான் கேட்டேன். இதைவிட ஆளுநருக்கு என்ன வேலை? இதற்காக குரல் எழுப்ப எதிர்க்கட்சித் தலைவருக்கு நெஞ்சுரம் இருக்கிறதா? நீங்கள் ஒன்றிய அரசிடம் கேட்டாலும் - கேட்காவிட்டாலும், நாங்கள், உறுதியோடு சொல்கிறேன் - சட்டரீதியாக எதிர்கொண்டு, கலைஞர் பல்கலைக்கழகத்தை நிச்சயமாக, உறுதியாக அமைப்போம்!

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே, மக்களுக்கு எதிரான கருத்துகளைப் பேசிக்கொண்டு, தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகங்களை செய்துகொண்டு, மக்களை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என்ற நப்பாசையோடு நீங்கள் என்ன பயணம் செய்தாலும், மக்கள் ஒருபோதும் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்! ஏனென்றால், அதுதான் உங்கள் டிராக் ரெக்கார்ட்! துரோகங்கள்தான் உங்கள் ஹிஸ்ட்டரி!

தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற எதிரிகள் எப்படி வேண்டுமானாலும் வரட்டும்… மக்களான நீங்கள், எங்களோடு ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று ஒற்றுமையாக நிற்க வேண்டும்! நம்முடைய மண் - மொழி - மானம் காக்க, என்றைக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும் – மண்ணின் மைந்தனான கலைஞரின் கொள்கை வாரிசான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் துணை நிற்போம்! துணை நிற்போம்!

banner

Related Stories

Related Stories