Tamilnadu

”மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்படும் மசோதாக்களுக்கு, ஆளுநர்களை வைத்து முட்டுக்கட்டையிடுவதும்; பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு உரிய நிதி வழங்காமல் வஞ்சிப்பதும் ஒன்றிய பா.ஜ.க அரசின் தொடர் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

இதனால், இந்தியாவை ஒற்றை நாடாக, ஒற்றுமையாக காக்க முழுமையான பங்களிக்கும் மாநிலங்கள் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இன்றியமையாத துறைகள் சார்ந்து கடுமையாக வஞ்சிக்கப்படுகின்றன.

இத்தொடர் வஞ்சிப்பை போக்கும் பொருட்டு, மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படுகிறது.

இந்நிலையில், முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து துணை முதலமைச்சர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

வரலாறு இன்று மீண்டும் திரும்பி இருக்கிறது!

சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் மாநில சுயாட்சியை வென்றெடுப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். மாநில உரிமைகளை காக்கவும் -அதனை உறுதி செய்யவும் ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழுவினை அமைத்து அறிவித்துள்ளார்கள்.

ஒன்றியத்தில் ஆள்வோர் அதிகாரக் குவியலில் ஈடுபடும் போதெல்லாம் தமிழ்நாடு தனது அழுத்தமான உரிமைக் குரலை எழுப்பி வருகிறது. மாநில உரிமைக்கான ஜனநாயக போர்க்களத்தில் கழகமும் – கழக அரசும் இன்றும் உறுதியாக நிற்கிறது.

இந்த முக்கிய அறிவிப்பை நம் முதலமைச்சர் அவர்கள் வெளியிடும் முன்னரே அதிமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்து அழிக்க முடியாத களங்கத்துக்கு ஆளாகி உள்ளனர். பாஜக உறுப்பினர்களையும் முந்திக் கொண்டு அவையை விட்டு வெளியேறி எஜமானர்களுக்கு தங்களின் அடிமை விசுவாசத்தை காட்டி உள்ளனர்.

ஒட்டுமொத்த இந்திய ஒன்றிய மாநிலங்களின் குரலாக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம். முழுமையான மாநில சுயாட்சியை வென்றெடுப்போம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “மாநில அதிகாரங்களை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு - தாய்மை பொங்கி எழத்தானே செய்யும்?” : முதலமைச்சர் பேருரை!