மு.க.ஸ்டாலின்

“மாநில அதிகாரங்களை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு - தாய்மை பொங்கி எழத்தானே செய்யும்?” : முதலமைச்சர் பேருரை!

ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை.

“மாநில அதிகாரங்களை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு - தாய்மை பொங்கி எழத்தானே செய்யும்?” : முதலமைச்சர் பேருரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை,

நம் இந்திய நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்களைக் கொண்டுள்ள மக்கள் வாழும் நம் இந்திய நாட்டில் இந்த மக்களுக்கென்று அதைப் பாதுகாக்கின்ற அரசியல் சட்ட உரிமைகளும் உள்ளன.

இத்தனை வேறுபாடுகளையும் கடந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். நம் நாட்டு மக்களின் நலன்களைப் போற்றிப் பாதுகாக்கின்ற வகையில், அதற்கான அரசியல் அமைப்பையும், நிர்வாக அமைப்பையும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் உருவாக்கியவர்கள், ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சிக் கருத்தியலை, நெறிமுறைகளைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார்கள் என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே ஒன்றிய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம் என்பதை வேதனையோடு இங்கே பதிவு செய்கிறேன்.

பரந்து விரிந்த இந்த இந்திய நாட்டை, மொழிவாரி உரிமைகளின் அடிப்படையில் உருவான மாநிலங்கள்தான் ஒற்றுமையாகக் காத்து வருகின்றன. இப்படி அமைக்கப்பட்ட மாநிலங்கள் அனைத்து அதிகாரங்களையும் கொண்டவையாக விளங்கினால்தான் மாநிலங்கள் வளர்ச்சி அடையும்; இந்தியாவும் வலிமை பெறும்.

இதனை உணர்ந்து, ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்கின்ற பரந்துபட்ட கொள்கை முழக்கத்தினை தமிழ்நாடு தொடர்ந்து உரக்க முழங்கி வருகிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலமும் இதுகுறித்து முயற்சிகள் எடுக்காத நிலையில், ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே, 1969-ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தலைவர் கலைஞர் அவர்கள், ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராயும் பொருட்டு ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.வி.இராஜமன்னார் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழுவினை அமைத்தார்.

நாட்டிலேயே முதன்முறையாக ஒன்றிய-மாநில அரசின் உறவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்து 1971 ஆம் ஆண்டு இராஜமன்னார் குழு தனது அறிக்கையை வழங்கியது. அந்தக் குழுவின் முக்கியப் பரிந்துரைகளை 51 ஆண்டுகளுக்கு முன்பே, 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் இதே சட்டமன்றத்தில் தீர்மானமாகவும் தலைவர் கலைஞர் நிறைவேற்றினார்.

இதனைத் தொடர்ந்து, ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திட ஒன்றிய அரசின் சார்பில் 1983-ஆம் ஆண்டில் சர்க்காரியா தலைமையிலான ஆணையம்; 2004-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதி பூஞ்ச்சி தலைமையிலான குழு ஆகியவை அமைக்கப்பட்டு, அவற்றின் சார்பில் ஆயிரக்கணக்கிலான பக்கங்களைக் கொண்ட அறிக்கைகள் வழங்கப்பட்டும் இதுநாள் வரையில் எந்தவித மாற்றமுமின்றி, ஏமாற்றமே தொடர்கிறது.

அடுத்தடுத்து மாநிலப் பட்டியலிலுள்ள முக்கிய அதிகாரங்களான மருத்துவம், சட்டம், நிதி ஆகியவற்றை ஒத்திசைவுப் பட்டியலுக்கு மடைமாற்றம் செய்யும் பணிகளே விரைவாக இன்றைய ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமூகநீதி, பொருளாதார ஏற்றத்தாழ்வின்மை, ஒடுக்கப்பட்டோருக்கான வாய்ப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, மாநில அரசின் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் தமிழ்நாட்டு மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்யும் வண்ணம் இருந்து வந்த நமது கல்விக் கொள்கையினை நீர்த்துப் போகச் செய்து முழுமையாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் ‘நீட்’ எனும் ஒற்றைத் தேர்வின் வாயிலாக மட்டுமே மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும் முறைக்கு மாற்றப்பட்டுவிட்டது.

இந்த ‘நீட்’ தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்விதமாகவும் உள்ளது.

இந்த நீட் தேர்வின் காரணமாக பல மாணவர்களுடைய மருத்துவக் கனவுகள் சிதைந்து போயிருக்கின்றன. பல மாணவர்களுடைய விலை மதிப்பில்லா உயிர்களை இழந்து நாம் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாகவே, நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களை தொடர்ந்து உருவாக்கி வரும் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளை நோக்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி, பல உலக நாடுகளில் இருந்தும் உயர்தர சிகிச்சை பெற மக்கள் வருகை புரிந்தவண்ணம் இருக்கிறார்கள் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களையும், உயர்தர மருத்துவமனைகளையும், முன்னணி மருத்துவக் கல்வி நிறுவனங்களையும் கொண்டுள்ள தமிழ்நாட்டில், தரமான கல்வி கொடுக்கப் போகிறோம் என்ற பெயரில் நீட் தேர்வு மூலம் பொதுக் கல்வி முறையை சிதைப்பதையே நாம் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இந்த ‘நீட்’ தேர்வால் ஏற்பட்டுள்ள இன்னல்களைக் களையும்விதமாக, இந்த சட்டமன்றப் பேரவையால் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் மறுக்கப்பட்டுள்ளது!

இதேபோல், மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு ஒன்றிய அரசால் மாற்றம் செய்யப்பட்டதால், தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் மூலம் மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்க ஒன்றிய அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தி மொழியை ஒன்றிய அரசு மறைமுகமாக தமிழ்நாட்டு மாணவர்களின் மீது திணிக்க முற்படுகிறது.

கல்விக் கொள்கையில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலனை மட்டுமே முதன்மையாகக் கருதும் திராவிட மாடல் அரசு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய சுமார் 2,500 கோடி ரூபாயை விடுவிக்காமல் தமிழ்நாட்டு மாணவர்களின் நலனை வஞ்சித்து வருகிறது.

இவ்வாறு தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒப்புதல் கொடுக்கப்பட்ட நிதியை வழங்காதது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவே தனது கடுமையான கண்டனங்களை ஒன்றிய அரசுக்கு தெரிவித்துள்ளது என்பதை இந்த மாமன்றத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, மொழி, இன, பண்பாடு ஆகியவற்றின் தனித்தன்மைகளை உறுதிசெய்யும் வண்ணம் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டியது இன்றியமையாததாகும் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

“மாநில அதிகாரங்களை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு - தாய்மை பொங்கி எழத்தானே செய்யும்?” : முதலமைச்சர் பேருரை!

ஒன்றிய நிதிக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலங்களுக்கு பகிரப்படும் நிதியானது தமிழ்நாடு போன்ற பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள மாநிலங்களின் பங்களிப்பிற்கு ஈடாக அல்லாமல் குறைவாகப் பகிரப்படுகிறது என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட போது அதன் அறிமுக நிலையிலேயே தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்த மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று.

எனினும், பொருளாதாரத்தில் முன்னேறிய மாநிலங்களின் கருத்துகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி, உற்பத்தித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்தி உள்ளது. மிக முக்கியமாக, மாநிலங்களின் வருவாயை ஈட்டக்கூடிய அதிகாரம் பறிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக விளங்கி, ஒன்றிய அரசின் வரி வருவாயில் பெரும் பங்களிப்பை தமிழ்நாடு தரும்போதிலும், நாம் பங்களிக்கக்கூடிய ஒரு ரூபாய் வரியில் 29 பைசா மட்டுமே நமக்கு நிதிப்பகிர்வாக அளிக்கப்படுகின்றது. இது மிகமிகக் குறைவு.

இயற்கை சீற்றங்களினால் தமிழ்நாடு பாதிக்கப்பட்ட போதெல்லாம்கூட, உரிய இழப்பீடுகள், தகுந்த ஆய்வு மற்றும் அளவீடுகள் செய்த பின்னரும், பல முறை வலியுறுத்தியும், வழங்கப்படவே இல்லை. இந்த நேரத்தில், இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய கருத்தை இந்த மாமன்றத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

“Both the Union and the States are created by the Constitution. Both derive their respective authority from the Constitution. The one is not subordinate to the other in its own field; and the authority of one is Co-ordinate with that of the other”.

ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி மாநில அரசின் தீவிர மக்கள்தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் பிறப்பு விழுக்காடு கட்டுப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்ட நிலையில், அதனை தண்டிக்கும்விதமாக 2026-ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த கருதியிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறையினால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் வெகுவாக குறைக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கூட்டாட்சிக் கருத்தியலுக்கு எதிராக ஒன்றிய அரசு நடந்துகொள்ளும் போதெல்லாம் அதற்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து எதிர்வினை ஆற்றி வருகிறது.

இந்தப் பிரச்சினைகள் குறித்து எல்லாம் மக்கள் மன்றத்தில் விரிவாக எடுத்துக் கூறி, தேவைப்பட்டால் சட்டமன்றத்தில் அதற்குரிய தீர்வை எட்டுவதற்கு உரிய சட்டங்களை இயற்றிடவும் நாம் என்றும் தயங்கியதே இல்லை.

இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் நாம் இயற்றிய சட்டமுன்வடிவுகள் மீது உரிய ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்திய தமிழ்நாடு ஆளுநர் அவர்களுடைய செயலை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்து, சமீபத்தில் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காக்கும் வகையில் கூட்டாட்சிக் கருத்தியலின் மகத்துவத்தை நாடெங்கும் பரப்பிடும் வகையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாம் பெற்றிருக்கிறோம் என்பதை இந்த மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவீர்கள்.

அமெரிக்க நாட்டின் புகழ் பெற்ற குடியரசுத் தலைவர்களுள் ஒருவரும், அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தை வகுத்து தந்த சட்ட மாமேதையுமான ஜேம்ஸ் மேடிசன் அவர்களுடைய கருத்தை இங்கே பதிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

“The operations of the federal Government will be most extensive and important in times of war and danger; those of the State Governments, in times of peace and security.”

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றுமையைப் பேணிப் பாதுகாப்பது ஒன்றிய அரசினுடைய முதற்கடமை! அந்த உயரிய நோக்கத்தினை செம்மையாக செயல்படுத்திட அனைத்து மாநிலங்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும்.

அதேவேளையில், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் மாநிலங்களின் பங்கு முதன்மையானது. அதற்கு ஒன்றிய அரசு உரிய ஆதரவை வழங்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை கருத்து!

இந்திய திருநாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் மிகப்பெரும் பொறுப்பை மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, நகர்ப்புற மேம்பாடு என அனைத்தையும் மாநிலங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன.

ஆனால் அவற்றையெல்லாம் நிறைவேற்றிடத் தேவையான அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருந்து பறிக்கப்பட்டு ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டு வருகின்றன. பசியால் வாடித் தவிக்கும் தன்னுடைய குழந்தைக்கு என்ன உணவு கொடுத்திட வேண்டும் என்பது அந்த குழந்தையின் தாய்க்குத் தான் தெரியும். ஆனால், அந்த குழந்தை உண்ணும் உணவை, கற்கும் கல்வியை, கடந்து செல்லும் பாதையினை, டெல்லியில் இருந்து யாரோ ஒருவர் தீர்மானித்தால் கருணையே உருவான தாய்மையும் பொங்கி எழத்தானே செய்யும்?

தொடர்ந்து மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழலில், கூட்டாட்சிக் கருத்தியலை வலியுறுத்தும் வகையிலும், ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை, அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்திடவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிக்கூறுகள், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்திடவும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திடவும், உயர்மட்ட அளவிலான குழு ஒன்றினை அமைப்பதென்பது மிக, மிக அவசியமாக வந்திருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப் அவர்களைத் தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

“மாநில அதிகாரங்களை பறிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு - தாய்மை பொங்கி எழத்தானே செய்யும்?” : முதலமைச்சர் பேருரை!

இதன் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற I.A.S. அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி அவர்களும், தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் அவர்களும் இருப்பார்கள். இந்த உயர்நிலைக் குழு, பின்வரும் கொள்கைகள் குறித்து ஆய்வை நடத்தும் என்றும் அறிவிக்கிறேன்.

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள், கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளின் அனைத்து நிலைப்படிகளையும் உயர்நிலைக் குழு ஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்தல்;

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள விதிகளை உயர்நிலைக் குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு நகர்த்தப்பட்ட பொருண்மைகளை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகளைப் பரிந்துரை செய்தல்;

மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்தல்;

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்றக் கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல்;

1971-இல் அமைக்கப்பட்ட இராஜமன்னார் குழு மற்றும் ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும், 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் இருக்கக்கூடிய வளர்ச்சியினையும் உயர்நிலைக் குழு கருத்தில்கொள்ளுதல் வேண்டும். இவற்றை ஆராய்ந்து அறிக்கைகள் வழங்கும்.

உயர்நிலைக் குழு தனது இடைக்கால அறிக்கையைப் ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திட உயர்மட்டக் குழு அமைத்திடுவது தமிழ்நாட்டின் நலன் காக்க மட்டுமல்ல; “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் அடிப்படையில் பரந்து விரிந்த இந்திய திருநாட்டின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளை காத்திடவே நாம் இன்று இந்த முயற்சியை முன்னெடுத்து இருக்கிறோம்.

நம் தாய்த்தமிழ் மொழியை காத்திடும் முயற்சிகளில் ஈடுபடும்போதெல்லாம், இந்தியாவின் பல பகுதிகளில் தம் இயல்பை இழந்து கொண்டிருக்கும் பிற மொழிகள் குறித்தும், அழிந்து கொண்டிருக்கும் பழங்குடியினரின் மொழிகள் குறித்தும் நாம் கவலை கொள்கிறோம் என்பதுதான் உண்மை.

ஏறு தழுவுதல் போன்ற பண்பாட்டு வடிவங்களை சிதைக்கும் முயற்சிக்கு எதிராக உலகத்தமிழர்கள் ஒன்றுபட்டு எதிர்வினை ஆற்றும் வேளையில், மணிப்பூர், நாகலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநில மக்களின் பண்பாட்டு உணர்வுகளும் உரிய முறையில் மதிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை!

தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமங்களுக்கும் என்ன தேவை என்பதை உணர்ந்து அதற்குரிய நலத்திட்டங்களை நிறைவேற்றும் உரிமையும், அதற்கான உரிய நிதி ஆதாரமும் தேவை என்ற கருத்தை வலுவோடு நாம் முன் வைப்பது, இந்தியாவின் கேரளா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் பொருந்தி வருவதை அனைவரும் உணர்வார்கள்.

மாநிலங்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வு மற்றும் நிதிப் பகிர்வை நாம் வலியுறுத்துவது தமிழ்நாட்டின் நலன் கருதி மட்டுமல்ல, பரந்து விரிந்த இந்திய திருநாட்டில் உள்ள குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை, காஷ்மீர் முதல் கேரளம் வரை அனைத்து மாநிலங்களின் நலன் கருதியே நாம் நம்முடைய வாதங்களை முன் வைக்கிறோம். மாநில சுயாட்சி குறித்த விவாதங்களில் முதல் குரல் என்றுமே தமிழ்நாட்டில் இருந்துதான் ஒலிக்கத் தொடங்கும்.

அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில், மக்களாட்சிக் கருத்தியலை சூழ்ந்து இருக்கும் கருமேகங்களுக்கிடையே தெளிவான ஒளி பாய்ச்சிட, காலம் நம்மை அழைக்கிறது. தேவை எழும்போதெல்லாம் நாட்டிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு, இந்த முறையும் தன்னுடைய வரலாற்றுக் கடமையை நிறைவேற்றிட முன் வருகிறது.

வளம் செழிக்கும் மாநிலங்களே, வலிமையான நாட்டினை உருவாக்கிடும் என்ற தெளிவோடு, பேரறிஞர் அண்ணா காட்டிய வழியில், முத்தமிழறிஞர் கலைஞர் முன்வைத்த “மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி” எனும் முழக்கத்தினை செயல்படுத்தி மக்களாட்சி தத்துவத்தினை இந்தியத் திருநாட்டில் முழுமையாக மலரச் செய்வோம்!

banner

Related Stories

Related Stories