Tamilnadu

அ.தி.மு.க MLA எழுப்பிய கேள்வி : அமைச்சர் துரைமுருகன் பதிலால் அவையில் எழுந்த சிரிப்பலை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 -2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை, அடுத்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நேற்றில் இருந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில், வினா - விடை நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது அ.தி.மு.க உறுப்பினர் ஓ.எஸ்.மணியன்,”வேதாரணியம் தொகுதிக்குட்பட்ட துளிசியா பட்டினத்தில் ஔவையாருக்கு ரூ.13 கோடியில் மணி மண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் அறிவு களஞ்சியம் துவங்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ”ஔவையார் ஒருவர் அல்ல. 5 பேர் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். ’அறம் செய்ய விரும்பு’ என்ற பாடலை பாடியவர் ஒருவர். அதேபோல் புறநானூற்று பாடல் பாடியது வேறு ஔவையார். சங்க காலங்களில் 5 ஔவையார்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதில் எந்த ஔவையாரை உறுப்பினர் குறிப்பிடுகிறார்?” கேள்வி எழுந்தது. அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, நிதிநிலைக்கு ஏற்ப ஔவையார் அறிவு களஞ்சியம் அமைக்க அரசு பரிசீலனை செய்யும் என அமைச்சர் மு.பே.சாமிநாதன் பதிலளித்தார்.

Also Read: ”சென்னையில் 12 துணை மின் நிலையம் அமைக்கப்படும்” : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!