Tamilnadu

ஒன்றிய அரசிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு வைத்த 3 கோரிக்கைகள் : அது என்ன?

தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, டெல்லியில் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்து, தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனுவை வழங்கினார்.

தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்த, 1,50,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தொழில்துறை நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையில், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த கோரிக்கையை ஏற்று, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்காக மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) மற்றும் மாநில வல்லுநர் மதிப்பீட்டுக் குழு (SEAC) ஆகியவற்றின் மறுசீரமைப்பை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரினார். இதற்கு ஒன்றிய அமைச்சர், தமிழக அரசின் முன்மொழிவிற்கு விரைவில் அனுமதி வழங்குவதாக உறுதியளித்தார்.

அதற்குபின், தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர மற்றும் வன சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாக்கும் பசுமைக் கவசம் உருவாக்குவதற்கான திட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இந்த திட்டம், 27.53 கோடி ரூபாய் செலவில் கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்க இயற்கை சார்ந்த தீர்வுகளைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தின் தாங்கல் பகுதியிலிருந்து தேங்குமரஹாடா கிராமத்தை இடமாற்றம் செய்வதற்கான ரூ. 74.4 கோடி திட்டத்திற்கும் CAMPA மூலம் அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த இடமாற்றம் புலிகள் பாதுகாப்பிற்கும், அப்பகுதியில் மனித-வனவிலங்கு மோதல்களைத் தடுக்கவும் அவசியமானது என்பதையும் எடுத்துரைத்தார். இந்த சந்திப்பில், தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூவும் உடனிருந்தார்.

Also Read: ”தந்தை பெரியாரை யாராலும் வீழ்த்த முடியாது” : கனிமொழி MP பேச்சு!