Tamilnadu

”ED கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு" : ஜோதிமணி MP பரபரப்பு குற்றச்சாட்டு!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கண்காணிப்புக் குழு தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், புதுக்கோட்டைச் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி உள்ளிட்டோரும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி எம்.பி, "பா.ஜ.கவின் கூட்டாளிகள்தான் ED,CBI IT. ED அடிக்கும் பகல் கொள்ளையில் இவர்களின் கூட்டாளியான பா.ஜ.கவுக்கு எவ்வளவு பங்கு?. இதுவரை லஞ்சம் வாங்கிய ED அதிகாரிகள் மீது பா.ஜ.க அரசு என்ன‌ நடவடிக்கை எடுத்துள்ளது. ED பாஜகவின் கூட்டாளியாகதான் செயல்பட்டு வருகிறது.

லஞ்சம் வாங்கியதாகக் கடந்த மாதம் ராஜஸ்தானில் ED அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழ்நாட்டில் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி நேற்று பிடிபட்டுள்ளார். இன்னும் பல மாநிலங்களிலும், இடங்களில் இது போன்ற வசூல் வேட்டையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கலாம். இது பா.ஜ.கவிற்கு தெரிந்துதான் நடக்கிறது. பா.ஜ.க அடிக்கும் கொள்ளைக்கு அமலாக்கத்துறை உடந்தை. அமலாக்கத்துறை கொள்ளைக்கு பா.ஜ.க உடந்தை.

இந்தியாவில் யாராவது கருப்புப் பணம் வைத்துள்ளார்கள் என்றால் அது நரேந்திர மோடி தலைமையில் இருக்கும் பாஜகவும், இவர்களது கூட்டாளி அதானியிடமும் தான் இருக்கும். பா.ஜ.க அரசு மக்களிடமிருந்து பணத்தைச் சுரண்டி அதானி போன்ற பெருமுதலாளிககுக்கு கொடுக்கிறது. பிறகு தேர்தல் பத்திரங்கள் மூலம் பணத்தைத் திரும்பி வாங்கிக் கொள்கிறது. இவர்கள் இருவரும் சேர்ந்து மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.

Also Read: BJP- Bribery Janatha Partyயா? : சரமாரியாக கேள்வி எழுப்பும் அமைச்சர் மனோ தங்கராஜ்!