
சிவகங்கை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் பாண்டிதுரை கொடுத்த தொடர் நெருக்கடி காரணமாக, அக்கட்சியின் மாவட்ட மகளிர் அணித் தலைவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் சிவகங்கை மாவட்ட பாஜக மகளிர் அணித் தலைவியாகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ராஜேஸ்வரி தற்கொலைக்கு முயல்வதற்கு முன்பாக மாநில மகளிர் அணித் தலைவி கவிதாவிடம் பேசியதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவி வருகிறது.
அந்த ஆடியோவில், "பாஜக மாவட்டத் தலைவர் பாண்டிதுரை, தன்னைச் சில புகைப்படங்களை அனுப்பச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதாகவும், தொடர்ந்து மனரீதியான நெருக்கடி கொடுத்து வருவதாகவும், இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும்" ராஜேஸ்வரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ராஜேஸ்வரி தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்து வந்த அழகப்பபுரம் போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரிக்கு ஆதரவாக பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.






