அரசியல்

“தொடர்ந்து 9 தோல்விகரமான நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிப்பதே ஒரு சாதனைதான்!” : கனிமொழி என்.வி.என் சோமு!

“நீங்கள் போற்றி பாதுகாப்பது சனாதன தர்மத்தை! நாங்கள் நம்புவதும், பின்பற்றுவதும் சாதித்துக்காட்டுவதும் சமதர்மத்தை; சமூகநீதியை!”

“தொடர்ந்து 9 தோல்விகரமான நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிப்பதே ஒரு சாதனைதான்!” : கனிமொழி என்.வி.என் சோமு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

“ஒட்டுமொத்த இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்படிப்பட்ட தமிழ்நாட்டை ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் முழுமையாக புறக்கணித்தது ஏன்?” என்று மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதித்தின் போது திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பினார்.

அவரது பேச்சின் விவரம் :

“நிதியமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கையே ஒரு தோல்விகரமான நிதிநிலை அறிக்கை. ஆனாலும் அவரது தொடர் முயற்சியை நாம் பாராட்டியே ஆகவேண்டும். தொடர்ந்து ஒன்பதாவது முறையாக தோல்விகரமான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பது என்பதே ஒரு சாதனைதானே! 

இவர்களது இந்த சாதனை மக்களுக்கோ, இந்திய பெருநாட்டிற்கோ நன்மை அளிக்கவில்லை. அவர்களது கட்சிக்காரர்களுக்கும், குறிப்பிட்ட சில பல பெரு முதலாளிகளுக்குமே நன்மையளித்து வருகிறது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டின் குரல் நிதிநிலை அறிக்கையில் எதிரொலிக்காவிட்டாலும் சில ஆண்டுகளாக நமது நிதியமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கைகளில் குறைந்தபட்சம் நம் தமிழ்மொழியின் பெருமைமிகு அடையாளமான திருக்குறளையாவது குறிப்பிட்டு பேசிவந்தார் என்று தமிழ் மக்கள் ஆறுதல்பட்டார்கள். ஆனால் இந்த ஆண்டு அந்தப் பெயரளவுக்கான அங்கீகாரம் கூட வழங்கப்படாமல் பொருளாதார ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் தமிழ்மக்களின் குரல் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுவிட்டது.

எனவே திருக்குறளை அடிக்கோடிட்டு நான் எனது உரையைத் தொடங்குகிறேன்.

 “வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலன்று கொடாது எனின்”.

இதன் பொருளை சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், அதிகாரம் போர்க்களங்களை வென்று காட்டலாம், ஆனால் மக்கள் மன்றத்தில் உறுதிசெய்யப்படும் சரியான நீதிதான் மக்களின் மனங்களையும் நாட்டின் நிலைத்தன்மையையும் வென்று காட்டும்!

 2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையானது ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலை பற்றிய எந்தவொரு அக்கறையும் கொள்ளாத நிதிநிலை அறிக்கை. ஒரு முகமற்ற, தொலைநோக்கற்ற, அடிப்படையே இல்லாததொரு பட்ஜெட்.

இது உழைக்கும் மக்களுக்கோ, மாதாந்திர ஊதியம் வாங்கும் எளிய மக்களுக்கோ,  விவசாயிகளுக்கோ எந்தவொரு தீர்வுக்கும் வழிவகுக்காது. கார்ப்பரேட் முதலாளிகளின் விருப்பங்களையெல்லாம் ஈடு செய்யும் வகையிலேயே இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றியமையாத துறைகளுக்கு வழங்கப்படும் மானியத்தை தவறு என்கிறது ஒன்றிய அரசு. உணவு, பூச்சிக்கொல்லி வேதிப்பொருட்கள், பெட்ரோலியம் பொருட்கள் மீதான மானியத்தை குறைக்கும் நடவடிக்கை என்பது எளிய தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் மீது தொடுக்கப்படும் நேரடியான தாக்குதலே!

மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வும் மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டிருப்பது பொருளாதாரக் கூட்டாட்சித் தத்துவத்தையே கேள்விக்குறியாக்குகிறது.

சமூக, பொருளாதார ரீதியான வேறுபாடுகளையும், மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியையுமே இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கும். இலட்சோபலட்சம் மக்களின் எண்ணவோட்டத்திற்கு சிறிதும் பொருந்தாது, ஒரு உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே தெளிவற்ற தன்மையோடு இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திட்டங்கள் வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய வெளிப்படைத்தன்மையோடு அறிவிப்பை வெளியிடாமல், தெளிவற்ற தன்மையோடு இந்த நிதிநிலை அறிக்கை ஒன்றிய நிதியமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிக் கூட விவாதிக்க வழியில்லாமல் இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

“தொடர்ந்து 9 தோல்விகரமான நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிப்பதே ஒரு சாதனைதான்!” : கனிமொழி என்.வி.என் சோமு!

 உணவு மற்றும் விவசாய உயிர்க்கொல்லிகளுக்குக்கூட மானியங்கள் வழங்கப்படாது "அகண்ட பாரதம்" என்ற வாசகம் ஒரு வெற்றுக் கூச்சலாக, வீண் விளம்பரமாகவே திகழ்கிறது.

சுகாதாரம் மற்றும் கல்வி உட்கட்டமைப்பில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கை ஓங்கவுள்ளது என்பதையும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவே இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதும் அம்பலப்படுகிறது.

 2014ம் ஆண்டில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 410 ஆக இருந்தது. ஆனால் 2026ல் ரூ. 853 ஆக உள்ளது.  இப்படி பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அடிப்படை, அத்தியாவசியப் பயன்பாட்டுப் பொருட்களின் விலை  விண்ணைத்தொடும் உச்சத்தை கடந்த 12 ஆண்டுகளில் எட்டியுள்ளது. அதுமட்டுமல்லாது சில பொருட்களின் விலை எளிய மக்களின் கைக்கே எட்டாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

 நமது பிரதமர் உள்ளிட்ட இந்த ஒன்றிய பாஜக அரசின் அமைச்சர்கள், இந்த மக்கள் மன்றத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு விவாதிப்பதை விட எக்ஸ் தளத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு விளம்பரம் தேடுவதிலேயே குறியாக உள்ளனர். இதுவே நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல்தான்.

ஆற்றல் உற்பத்தி சார்ந்த துறைகளில் வரிகள் குறைப்பு என்பது பரஸ்பரம் இரு நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாக இல்லாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்களின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து எடுக்கப்படும் ஒரு அவமானகரமான விஷயமாகவே மாறிவிட்டது.

இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தங்கள் முழுக்க முழுக்க இந்திய துணைக்கண்டத்திற்கே அவமானத்தை தேடித்தந்துள்ளது என்றே சொல்லலாம். இந்தியா அமெரிக்காவிடம் ஒட்டுமொத்தமாக சரணாகதி அடைந்துவிட்டது.  அமெரிக்கா இந்த விவகாரத்தில் வெற்றிபெற்றுள்ளது.

இது எப்படி இருக்கிறது தெரியுமா? நீ அவல் கொண்டுவா… நான் உமி கொண்டு வருகிறேன்… அதை  ஊதி ஊதித் தின்னலாம் என்பது போல இருக்கிறது.

உன்னுடையது எதுவோ அது என்னுடையது, என்னுடையது எதுவோ அதுவும் என்னுடையது என்று மோடியிடம் டிரம்ப் சொல்லியிருக்கிறார் போல!

 ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒன்றை நான் நினைவு படுத்த விரும்புகிறேன். இந்தியாவில் ஒரு மாநிலத்தை அவர்களது முதலாளிகளின் விருப்பம் போல சில காரணங்களுக்காக அவர் புறக்கணித்து இருக்கிறார்.

 ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி  மட்டுமல்லாது, உங்களது பொருளாதார ஆய்வறிக்கைகள்படியே இந்திய அளவில் பல்வேறு துறைகளில் முதலிடமும், பல துறைகளில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாகவும் திகழும் ஒரு மாநிலத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்திருக்கிறார்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இடம் பெயர்வோர் அடங்கிய 25 இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும், இந்தியாவிலேயே அதிகபட்ச தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக அது திகழ்கிறது. இந்தத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அந்த மாநிலம் மிகப்பெரிய அளவில் மாற்றிக்காட்டியிருக்கிறது.

16 சதவீத ஜிடிபியை சாதித்துக் காட்டி, துடிப்பான, கொள்கைத்திரம் மிக்க ஆளுமைத்திறன் கொண்ட ஒரு முதலமைச்சரால், தேசத்தின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு முதலமைச்சரால் தலைநகரின் வளர்ச்சிக்கு மட்டும் வழிவகுக்காமல் மாநில அளவில் பரந்துபட்ட வளர்ச்சிக்கு, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய மிகப்பெரிய வளர்ச்சிக்கு அந்த மாநிலம் வித்திட்டுள்ளது.

அந்த மாநிலம்தான் தமிழ்நாடு; அதன் முதலமைச்சர்தான் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் தளபதியார், ஆற்றல்மிகு நிர்வாகத்திறன் கொண்ட ஆளுமை திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

தொன்மையான பண்பாட்டு அடித்தளமும், கட்டிடக்கலை பாரம்பரியமும் கொண்ட பாதுகாப்பான உட்கட்டமைப்பை; ஆச்சரியத்திற்குரிய சூழலைக் கொண்ட தமிழ்நாடு உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை மட்டுமல்ல, வெளிநாட்டுப் பயணிகளையும் தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

திறன் மேம்பாடு மற்றும் கல்வி உட்கட்டமைப்பில் இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பள்ளிக்கல்வியை முழுமையாகப் பெறுவதை உறுதி செய்யும் தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வை மற்றும் இந்தியாவிற்கே முன்னோடியாக உருவாக்கப்பட்டுள்ள பல திட்டங்கள் அடுத்த தலைமுறைக்குத் தேவையான உட்கட்டமைப்பை இந்த அரசு உருவாக்கி உள்ளது என்பதை உறுதி செய்கிறது.

மென் பொருள் துறையில் மட்டுமல்ல, வாகனம் மற்றும் வாகனத் தளவாட உற்பத்தியிலும், மின்னணு சாதன உற்பத்தியிலும் முன்னேற்றம் கண்டுகொண்டே இருப்பதுதான் நிலையான நிர்வாகத்திறனுக்கு, குறிப்பாக திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எடுத்துக்காட்டு!

இந்தத் தரவுகள் எல்லாம் திராவிட நாயகர் மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது மகத்தான திராவிட மாடல் ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட வளர்ச்சிக்கு கட்டியம் கூறுபவையே!

ஒன்றிய  நிதியமைச்சர் அவர்கள் இவற்றையெல்லாம் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாது அவர் பிறந்து வளர்ந்த மாநிலத்தையே புறக்கணித்தது துரதிர்ஷ்டவசமானது. இந்த நிதிநிலை அறிக்கையால் அவர் பிறந்த வீட்டிற்கும் பயனில்லை! புகுந்த வீட்டிற்கும் பயனில்லை!

“தொடர்ந்து 9 தோல்விகரமான நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிப்பதே ஒரு சாதனைதான்!” : கனிமொழி என்.வி.என் சோமு!

எந்த மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்டாரோ அந்த மாநிலத்திற்கும் பயனில்லை. இப்படி யாருக்கும் பயனளிக்காத நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிப்பது நியாயமா?

இன்று இந்த அரசு கடன் வாங்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 24 பைசா புதிய கடன்களில் இருந்து வருகிறது. ஆனால் அவற்றில் இருந்து 20 பைசா வட்டிக்கே சென்றுவிடுகிறது. வெறும் 4 பைசா மட்டுமே வளர்ச்சிக்கு ஒதுக்கப்படுகிறது.

புதிதாக கடன் வாங்குவதை புதிய உட்கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்தாமல், பழைய கடன்களை ஈடுகட்ட செலவாவது பொருளாதார நெருக்கடியை உருவாக்கி மிகச்சிறிய அளவிலான வளர்ச்சியை மட்டுமே மாநிலங்கள் சென்றடைய இடம் அளிக்கிறது. ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால் முறையற்ற நிதிநிலை மேலாண்மையை இந்த நிதிநிலை அறிக்கை அம்பலப்படுத்திவிட்டது.

ஒன்றிய அரசு தொடர்ந்து செலவுகளை ஏற்றிக்கொண்டு கடன் வாங்கிக்கொண்டே இருப்பதால், மொத்த செலவில் 26 சதவீதம் என்றிருந்த நிலை மாறி,  இப்போது 40 சதவீதம் வட்டியை கட்ட மட்டுமே வருவாயில் இருந்து செலவிடப்படுகிறது.

இந்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தொடர்ந்து செஸ் வரி ஏற்றம் மற்றும் பிற வரிகளை உயர்த்துவது மட்டுமல்லாமல் மாநிலங்களுக்கு அவர்களுக்கு தேவையான வரிப்பகிர்வை முறையாக அளிக்காமல் உள்ளது இந்த ஒன்றிய அரசு. உத்தர பிரதேசம், பீகார் மற்றும் பிற பாஜக ஆளும் மாநிலங்களின் மீது மட்டும் எப்போதும் ஒன்றிய நிதியமைச்சருக்கு கரிசனம் உண்டு. நாங்கள் அதைப்பற்றி குறை சொல்லவில்லை. ஆனால் மற்ற மாநிலங்கள் இந்தியாவிலேயே இல்லையா என்ன?

ஒன்றிய நிதியமைச்சரின் நிதிநிலை அறிக்கையில் கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் கருத்திலேயே கொள்ளப்படவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பா? 

ஊதியம் வாங்கி வாழும் ஒவ்வொரு வரி செலுத்தக்கூடிய நபரும் ஏதாவது ஒரு வகையில் வரிச்சலுகையை இந்த நிதிநிலை அறிக்கையில் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஒன்றுமே இடம்பெறவில்லை. நடுத்தர வர்க்கத்தை ஒன்றிய நிதியமைச்சர் முற்றிலுமாக புறக்கணித்து துரோகம் இழைத்துவிட்டார். இது அம்மக்களை நடுத்தெருவில் தவிக்கவிடும் நிதிநிலை அறிக்கை!

பாஜகவிற்கு ஆதரவளிக்கும் மாநிலங்களுக்கு அமுதத்தையும் பாஜகவை ஆதரிக்காத, ஆனால் மிகப்பெரிய வருவாயை ஒன்றியத்துக்கு அளிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது அமிலத்தையும் ஏன் ஒன்றிய அரசு கக்குகிறது?

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களை தூக்கியெறிந்து துரோகம் இழைக்கும் வகையில் செயல்பட்டு நமது அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையையே முற்றிலுமாக இந்த ஒன்றிய அரசு சிதைக்கிறது!

எதற்காக இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை! ஏன் இந்த பாசாங்குத்ததனம்!

பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பல திறனற்ற பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கி பொருளாதார வளர்ச்சிக்கே தீங்கு விளைவிக்கும் அளவிற்கு, குறிப்பாக ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி இயங்கிவந்த கிராமப்புற பொருளாதாரத்தையே முற்றிலுமாக பொருளாதார தேக்கத்திற்கு தள்ளிவிட்டது இந்த ஒன்றிய அரசு.

இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பையே இந்த ஒன்றிய அரசு சிதைத்து விட்டது. இதனால் தான் இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சீர்கேடடைந்து மீண்டு எழுந்து நிற்கமுடியாமல் சரிந்து கிடக்கிறது.

எங்கள் தி.மு.கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள், மக்கள் சேவையே மகேசன் சேவை என்று குறிப்பிட்டார். இந்த திருநாட்டின் எளிய மக்களுக்கு சேவை செய்ய மறந்தால் நீங்கள் அதிகாரத்தில் இருந்து எதிர்பாராத நேரத்தில், எந்தவொரு நொடியிலும் தூக்கியெறியப்படுவீர்கள் என்பதை மறவாதீர்!

இந்த நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை என்பது Sunday ஒன்றிய அமைச்சரினால் வெளியிடப்பட்ட Sunday Budget!

ஆன்மீக மேம்பாட்டிற்காக ஒரு நாளை ஒதுக்கி வியாபாரத்தையே நிறுத்திய மேற்கத்திய பண்பாட்டை குறிக்கும் sunday law வைப்போல நமது ஒன்றிய நிதியமைச்சர் செயல்படுகிறார்.

53.47 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2026 - 27 நிதிநிலை அறிக்கையில் ஒன்றிய அரசின் செலவினங்கள் மற்றும் வருவாய் மேலாண்மை சார்ந்த நடவடிக்கைகளை திறம்பட புரிந்துகொள்ளவேண்டியது அவசியம்.

ஒரு மிகப்பெரிய அளவில், குறிப்பாக வருவாயில் இருந்து 20 சதவீதம் கடன்களுக்கான வட்டியை கட்ட ஒதுக்கீடு செய்வது என்பது மொத்த நிதிநிலை அறிக்கையிலேயே இரண்டாவது மிகப்பெரிய செலவீனமாக மாறியுள்ளது. இந்த செலவினங்களைக் கையாண்டு மாநிலங்களுக்கான பங்கீட்டை நிர்ணயித்த பிறகு உள்ள நிதி மட்டுமே முழுமையாக கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத்துறைக்கு செலவிடப்படவுள்ளது.

கல்வி மேம்பாட்டிற்கு மிகக்குறைந்த அளவில் நிதி ஒதுக்கீடு என்பது கோத்தாரி கமிஷன் பரிந்துரையான 6 சதவீதத்திற்கும் குறைவு. கல்வி நிறுவனங்களில் திறமையான ஆசிரியர்கள் தட்டுப்பாடு, மிகப்பெரிய மக்கள் தொகையை நிர்வகிக்கவும் சரியான கல்வி உட்கட்டமைப்பு இல்லாததும் இந்திய துணைக்கண்டத்திற்கே அபாயகரமான சோதனையாக அமைந்துள்ளது.

 சுகாதாரத் துறையைப் பொறுத்தமட்டில் இன்றியமையாத விழுமியமான எளிய மக்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் குறைந்த செலவில் சிகிச்சை வசதிகளை அளிக்க மொத்த ஜி.டி.பி.யில் வெறும் 2 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுவது உலக சுகாதார முனையத்தின் பரிந்துரைகளுக்கும் குறைவானது.

விவசாயம் மற்றும் வேளாண் தளவாடங்கள் சார்ந்த துறைக்கு மிகக்குறைவான அறிவிப்புகளே உள்ள நிலையில் அடிப்படை ஆதார விலை சீரமைப்புகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ள நிலையே நீடிக்கிறது. நேரடியான பலன்களை விவசாயிகளுக்கு வழங்க ஒன்றிய அரசு தவறிவிட்டது. கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், விவசாயத்துறை மேம்பாடு, சூழலியல் பாதுகாப்பு, சிறு குறு தொழில் மேம்பாடு ஆகிய பல்வேறு விழுமியங்களை ஒன்றிய அரசு பெயரளவில் மட்டுமே கண்டுகொண்டுள்ளது.

நான் எனது உரையை முடிப்பதற்கு முன்பு ஒரேயொரு அறிவுரையை இவர்களுக்கு வழங்க விரும்புகிறேன்.

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் மறந்துவிடாதீர்!

ஆனால் அந்த ஏழையை சொல்லொணா துயருக்கு உட்படுத்தினால் வெளிப்படும் கண்ணீர், பாய்ந்துவரும் ஏவுகணையைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மறந்துவிடாதீர்கள்!

நீங்கள் போற்றி பாதுகாப்பது சனாதன தர்மத்தை!

நாங்கள் நம்புவதும், பின்பற்றுவதும் சாதித்துக்காட்டுவதும் சமதர்மத்தை; சமூகநீதியை!

எங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களது வார்த்தையில் சொல்வதென்றால் சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம், மதச்சார்பின்மை, மொழிப்பற்று, இனவுரிமை, மாநில சுயாட்சி - ஒன்றியத்தில் கூட்டாட்சி உள்ளிட்ட அரசியல் பண்பாட்டு விழுமியங்களை தன்னகத்தே தாங்கி நிற்கும் மண் தமிழ்நாடு!

இந்த இலட்சியங்களை வென்றெடுக்குக்கும் கொள்கைப் பயணத்தில் நாங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்!

எவர் எதிர்த்தாலும்; எத்தனை சதிவலை பின்னினாலும் அவற்றையெல்லாம் எதிர்த்து தவிடுபொடியாக்கி; அந்த சதிகளுக்கெல்லாம் மக்கள் பேராதரவோடு சவுக்கடி கொடுத்து எங்கள் பாதையில் தொடர்ந்து சென்றே தீருவோம்! வென்றே தீருவோம்!!”

banner

Related Stories

Related Stories