Tamilnadu

“மு.க.ஸ்டாலின் திராவிடத்தின் அடையாளம்”: “உங்களில் ஒருவன்” நூல் குறித்து Scroll இணையதளம் சிறப்புக்கட்டுரை!

கழகத் தலைவர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய தன் வரலாற்று நூலான "உங்களில் ஒருவன்” நூலினை மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம், “ONE AMONG YOU” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இப்புத்தகம் குறித்து நிகில் சஞ்சய்-ரேகா அட்சுலே (Nikhil Sanjay-Rekha Adsule) “Scroll. in” இணைய தளத்தில் மு.க.ஸ்டாலின் அவர்களின் வரலாற்று நூலான "உங்களில் ஒருவன்” புத்தகத்தை பற்றி சிறப்புக் கட்டுரை வடித்துள்ளார்.

அக்கட்டுரையில் அவர், மு.க.ஸ்டா லின் அவர்களின் 'உங்களில் ஒருவன்' முதல் பாகம் நூல் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமைப் பயணத்தை கண்களால் பார்க்க முடிகிறது என்றும் இந்த நூல், 'தனிமனிதனை அவரது அரசியல் கொள்கையிலிருந்து பிரிக்க முடியாது" என்பதனையும் இந்த வரலாற்றுப் புத்தகம் எடுத்துக்காட்டு கிறது என்றும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

நூல் குறித்து நிகில் சஞ்சய் - ரேகா அட்சுலே அவர்கள் எழுதிய சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் வருமாறு:- தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் தன்வரலாற்று நூலான 'உங்களில் ஒருவன்' மானுட இருத்தலைப் பற்றிய 'கார்ல் ஜங்'கின் காவிய வரிகளான "வெறுமனே இருத்தல் என்ற இருளில் ஒளியூட்டுவதே மானுட இருத்தலின் ஒரே குறிக்கோள்" என்பது எனக்கு நினைவூட்டுகிறது.

முதல் அத்தியாயத்திலேயே, "பிறக்கும்போதே ஒரு தலைவருக்கு மகனாகத்தான் நான் பிறந்தேன்" என ஸ்டாலின் கூறுகிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தருணத்தை அதில் நினைவுகூர்கிறார். வரலாற்றை வைத்துப் பார்க்கையில் அடக்குமுறையைக் கையாளக்கூடிய அரசு இயந்திரத்தின் அதிகாரம் இப்போது அவர் கையில் வந்து சேர்ந்திருக்கிறது.

ஓர் அரசியல் செயற்பாட்டாளராகவும் சமூகத்தில் திராவிடக் கருத்தியலை எடுத்துரைப்பவராகவும் அவரது வாழ்க்கையைப் பற்றிய நூலாகவும் இது இருப்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது. ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றின் முதல் பாகமான இந்த நூல் அவரது குழந்தைப்பருவத்தில் தொடங்கி நெருக்கடிநிலைக் காலத்தில் அவர் கைது செய்யப்பட்டதுவரை முடிவடைகிறது. புகழ்பெற்ற ரஷ்ய ஸ்டாலினைப் பற்றி பலரும் தீவிரமான கருத்துகளைக் கொண்டிருந்த காலத்தில் இவருக்கு ஸ்டாலின் எனப் பெயரிடப்பட்டிருப்பதைப் பற்றிய விளக்கத்தை இந்த நூல் வழங்குகிறது.

இந்தப் பெயரின் காரணமாகவே மிகப் பிரபலமான பள்ளி இவரை மாணவனாகச் சேர்த்துக்கொள்ள மறுத்திருக்கிறது. இவரது தந்தை கலைஞர் "பள்ளிக்கூடத்தை வேண்டுமானால் மாற்றுவேன், ஆனால் பெயரை மாற்ற மாட்டேன் என உறுதியாக இருந்துவிட்டார். ஸ்டாலினின் குடும்பத்தில் அரசியல் உறுதி எந்த அளவுக்கு பின்னிப்பிணைந்திருந்தது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. தி.மு.க.வின் பயணத்தையும் ஸ்டாலினின் சொந்த வாழ்க்கையையும்; குடும்பத்தையும் இந்நூலை படிப்பவர்கள் பிரித்துப் பார்க்க இயலாதபடிக்கு இந்நூல் அமைந்திருக்கிறது.

பெண்களைப் பற்றி குறிப்பிட்டு இருப்பது பாராட்டுக்குரியது!

இந்நூலில் வரும் ஆண்டுகளில், தன் வாழ்க்கையைப் பற்றியும், அதில் நிலையான பங்கு வகித்து, அவர் பெரும் அரசியல் ஆளுமைகளிடம் அரசியல் பயின்றதையும் பெண்களின் குறியீட்டுப் படிநிலையை ஸ்டாலின் இந்த நூலில் அங்கீகரித்திருந்தது என்னைக் கவர்ந்தது. திராவிட இயக்கத்தின் அடித்தளமானாலும் மேல்கட்டுமனமானாலும் அதன் உருவாக்கத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது. இந்த நினைவுக் குறிப்பைப் படிக்கும்போது, கழகத்தினரும் கழகமும் கிட்டத்தட்ட ஒன்றிலிருந்து ஒன்று கிளைகளாகத் தோன்றும் என்றாலும் இரண்டுமே ஒன்றுதான் என்பது வெளிப்படையாக இருக்கிறது. ஸ்டாலினின் பாட்டி அஞ்சுகம் அம்மாள் பற்றிய அத்தியாயத்தில் அவர் பேரனை 'தாலின்' என அழைப்பது பற்றிய பகுதி மிகவும் கவர்ந்தது.

திராவிட இயக்கம்:

சலூன் கடையில் என்று தலைப்பிட்ட அத்தியாயத்தில், பிரெஞ்சுப் புரட்சியில் முக்கியப் பங்காற்றிய சலூன்களின் வரலாறு எனக்கு அறிமுகமானது. அவை அச்சமூகத்தில் பெண் விடுதலைக்கான மையங்களாகவும் விளங்கின. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் கருத்தியல்களின் பரப்புரைக்கான களங்களாக அமைந்த பிரெஞ் சலூன்களுக்கு இணையாகத் திராவிடக் கருத்தியலைப் பரப்புரை செய்யும் மையங்களாக விளங்கிய திராவிட முடிதிருத்தும் நிலையங்களை வைத்துப் பார்ப்பது ஒரு சுவாரசியமான ஒப்பீடு.தி.மு.க. எனும் அமைப்பை வலுப்படுத்தியவை எவை என்பதுக் குறித்து ஸ்டாலின் விவரிப்பது அவரது கூர்ந்த, நினைவுத்திறன், உள்வாங்கும் திறனை வெளிப்படுத்துகிறது. இன்றைய ஸ்டாலினுக்கு கண்டிப்பாக ஒரு நாற்காலி ஆசை கியைாது. பல ஆண்டுகளாகக் களத்தில் இருந்து செயல்பட்ட வரலாற்றைக் கொண்டவர்.

•நூலைப் படிப்பவர்களுக்கு அடிப்படை பண்புகள் கிடைக்கின்றன!

இந்தச் செயல்பாட்டால் திராவிட இயக்கத்தின் அடிப்படைப் பண்புகள், குறிக்கோள்களைப் பற்றியதொரு தெளிவான சிந்தனை வாசகருக்குக் கிடைக்கிறது. இதைப் பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்களில் கூறுவதானால் "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” எனலாம். இந்தத் தெளிவு மிகவும் முக்கியம். ஏனென்றால், புவியியல் - அரசியல் ரீதியான வட இந்தியா பெரும்பாலும் திராவிட இயக்கத்தைப் பிரிவினைத் தன்மை கொண்டதாகச் சித்தரிக்கிறது. ஆனால் இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் தமிழ் உணர்வு என்பது கூட்டாட்சி ஒன்றியத்தில் தனித்தன்மை மிக்க மொழி, பண்பாட்டைக் கொண்ட பகுதிக்குத் தன்னாட்சியை வலியுறுத்துவதாக உள்ளதே ஒழிய பிரிவினைவாதமாக இல்லை. நல்ல நிர்வாகம் என்ற போர்வையில் இந்தி-யை திணிக்கப்படுவதைத் தீர்க்கமாக எதிர்க்கும் கொள்கைகளை தைரியமாக எடுத்துரைக்கிறது இந்த நூல்.

*நாடகம் – திரைப்படத்தில் திராவிட உணர்வு ஊட்டுவதை நினைவுபடுத்துகிறது!

தனது தந்தை தொடங்கிய முரசொலி நாளேடு, நாடகம், திரைப்படங்கள் ஆகியவை சாமானியர்களிடையே திராவிட உணர்வை ஊட்டுவதில் ஆற்றிய பங்கை நூலில் மிக விரிவாக ஸ்டாலின் கூறுவது குறிப்பிடத்தக்கது. ஒரு சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பை ஸ்டாலின் தன்னுடைய கடமையாக நினைப்பதாகத் தெரிகிறது

அவரது அரசியல் நுழைவு, அரசியல்தான் தனது வாழ்க்கை என்பதை உணர்வது, தி.மு.க.வின் கொள்கைகளை உள்வாங்குவது ஆகியவை ஜேம்ஸ் பால்ட்வினின் கலைஞன் பற்றிய பார்வையை நினைவூட்டியது. பால்ட்வினைப் பொறுத்தவரை, சமூகத்தால் தற்காத்து வைக்கப்பட்டிருக்கும் மாயைகளை உடைத்து பொதுச்சமூகத்தை அறிவொளி பாய்ச்சுபவரே உண்மையான கலைஞர் ஆவார்.

என்னைப் பொறுத்தவரையில், ஸ்டாலினின் வாழ்க்கையில் அவர் அடக்குமுறையை எதிர்த்து நின்ற செயல்களும், மனத்திடமும் பால்ட்வினின் வரையறைக்குப் பொருந்திப் போகிறது. ஏ.எஸ்.பன்னீர்செல்வனின் ஆங்கில மொழிபெயர்ப்பானது தடையற்றதாகவும் எளிமையாகவும் இருக்கிறது. ஸ்டாலினின் தன்வரலாற்று நூலுடன் பன்னீர்செல்வன் எழுதிய கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் படிப்பது தந்தை-மகன் இருவரையும் மேலும் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும்.

அறிஞர்கள், சாமானியர்கள் என இருதரப்புமே விரும்பிப் படிக்கும் வகையில் எந்தக் கடினமான சொற்களும் இல்லாமல் எளிமையாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. மொத்தத்தில், 'உங்களில் ஒருவன்' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு தனிநபர் - அரசு - குடிமைச் சமூகம் - திராவிட அடையாளம் ஆகியவற்றின் இடையேயான சமன்பாடுகளையும் அவை எவ்வாறு ஒரு வலிமையான அரசியல் இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் வளர்த்தெடுத்தது என்பதையும் புரிந்துகொள்ள ஓர் பயனுள்ள வழியாக இந்த நூல் அமைந்திருக்கிறது.” இவ்வாறு நிகில் சஞ்சய் -ரேகா அட்சுலே தனது சிறப்புக் கட்டுரையில் எழுதியுள்ளார்.

'உங்களில் ஒருவன்' நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு தனிநபர் - அரசு - குடிமைச் சமூகம் - திராவிட அடையாளம் ஆகியவற்றின் இடையேயான சமன்பாடுகளையும் அவை எவ்வாறு ஒரு வலிமையான அரசியல் இயக்கத்தையும் அதன் தலைவர்களையும் வளர்த்தெடுத்தது என்பதையும் புரிந்துகொள்ள ஓர் பயனுள்ள வழியாக இந்த நூல் அமைந்திருக்கிறது.

Also Read: "உங்களில் ஒருவன் - படிப்படியாய் படிக்கவேண்டிய பாடம்!" : முதல்வர் மு.க.ஸ்டாலினின் நூல் குறித்த விமர்சனம்!