தமிழ்நாடு

எச்சில் இலைமீது அங்கப்பிரதட்சணம் - அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு : கி.வீரமணி ஆவேசம்!

கோவிலில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைமீது அங்கப்பிரதட்சணம் செய்வது அரசமைப்புச் சட்டம் தந்த அடிப்படை உரிமை என்று ஒரு நீதிபதி உத்தரவுப் பிறப்பிக்கலாமா? என கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

எச்சில் இலைமீது அங்கப்பிரதட்சணம் - அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு : கி.வீரமணி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோவில் ஒன்றில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைமீது அங்கப்பிரதட்சணம் செய்ய மத அடிப்படையில் உரிமை உண்டு - இதுதான் அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள தனி மனிதர் உரிமை என்று மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்புக் கூறியுள்ளார். இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும், மக்கள் மன்றத்திலும் - சட்டப்படியும் மேல் நடவடிக்கை எடுக்கத் தவறமாட்டோம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள சட்டப்பூர்வ அறிக்கை வருமாறு:

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு ஒன்று, நாம் 2024 ஆம் ஆண்டில்தான் வாழுகிறோமா என்ற அய்யப்பாட்டை எழுப்பியுள்ளது.

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே நெரூர் அக்ரஹாரத்தில் சத்குரு சதாசிவ பிரமேந்திரரின் ஜீவ சமாதி (அது ஒரு கோவிலா என்பதே கேள்விக்குறி) இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் குறிப்பிட்ட நாளில் அன்னதானம் நடைபெறுகிறது.

எச்சில் இலைமீது அங்கப்பிரதட்சணமாம்!

அந்நாளில் பார்ப்பன பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைமீது நேர்த்திக் கடன் என்ற பெயரில் அங்கப்பிரதட்சணம் நடைபெற்று வந்தது. பக்தியின் பெயரால் நடைபெறும் இந்தக் காட்டுமிராண்டித்தனம் 2015 இல் தடை செய்யப்பட்டது.

எச்சில் இலைகளின்மீது அங்கப்பிரதட்சணம் செய்யும் சடங்குக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று கோரி கரூர் நவீன்குமார் என்பவர் மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்தவிசித்திர தீர்ப்பு இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

அவரின் தீர்ப்புப் பின்வருமாறு:

‘‘முக்கிய துறவிகளில் ஒருவரான சதாசிவ பிரமேந்திரரின் பக்தர்கள், அவரின் ஜீவ சமாதி நாளில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக சாப்பிட்ட வாழை இலைகள்மீது அங்கப்பிரதட்சணம் செய்வது 120 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பழைமையான சடங்காகும். (இதுவே கேள்விக்குரியதாகும்).

2015 இல் நிறுத்தப்பட்ட இந்தச் சடங்கு மீண்டும் நடத்தப்பட அனுமதி கேட்டு, மனுதாரர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினார்; பதில் இல்லை.

அனைத்துத் தரப்பு இந்திய அரசமைப்புச் சட்டம் உத்தரவாதம்அளித்துள்ள அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை இது.

மத அடிப்படையான உத்தரவாதமா?

மத நடவடிக்கையை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் அடிப்படை உரிமையில் வருகிறது என்பதில் சந்தேகம் இல்லை. மனுதாரர் ஒரு ஹிந்து; நெரூர் சதாசிவ பிரம்மேந்திரரின் சமாதி ஆண்டு முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிகிறது. அவர் ஒரு சித்த புருஷர்.

ஜீவ சமாதி தினத்தன்று பக்தர்கள் உணவு உண்ட வாழை இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்யும் பாரம்பரிய வழக்கம் இருந்தது. இது ஆன்மிக பலனைத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

மகாபாரதத்திலும் எச்சில் இலைமீது உருளும் அங்கப்பிரதட்சணம் உண்டாம்!

மகாபாரத காலத்தில்கூட சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது ஆன்மிகப் பலனாகக் கருதப்பட்டது. கிராமங்களில் மத நிகழ்வுகளை நடத்த அதிகாரிகளின் அனுமதி தேவையில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் ஒலி பெருக்கிகள் பயன்படுத்த விரும்பினால் மட்டுமே அனுமதி பெறவேண்டும்.

இவ்வழக்கில் அதிகாரிகள் அனுமதி வழங்குவது குறித்த கேள்வி எழவில்லை. விருந்தினர்கள் உணவு உட்கொண்ட பின் வாழை இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யும் அடிப்படை உரிமையை மனுதாரர் நன்றாகப் பயன்படுத்த முடியும். இதில் அதிகாரிகள் தலையிட முடியாது.

மனுதாரர் அல்லது எந்தவொரு பக்தரோ தனது அடிப்படை உரிமையை பயன்படுத்துவதை எந்தத் தனி நபராலும் தடுக்க முடியாது. ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் மனுதாரரின் அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கும், இடையூறு செய்பவர்களை சம்பவ இடத்திலிருந்து அகற்றுவதற்கும் உதவுவது போலீசாரின் கடமையாகும்‘’ என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

ஏற்கெனவே உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தடை செய்த ஒன்று!

இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் இதே மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு தலித் பாண்டியன் என்பவரின் மனுவின்மீது (மனு எண்: 7068/2015) எச்சில் இலைகள்மீது அங்கப்பிரதட்சணம் செய்வதற்குத் தடை விதித்து விட்டது - அதைக்கூட மறைத்து - ஆத்திரத்தில் இப்படி ஒரு உத்தரவா?

இப்பொழுது அதே மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி - மத விடயத்தில் தலையிட முடியாது - அது அடிப்படை உரிமை என்று கூறி, சாப்பிட்ட எச்சில் இலைமீது அங்கப்பிரதட்சணம் செய்ய உரிமையுண்டு - யாரும் தடுக்க முடியாது - அப்படித் தடுத்தால் காவல்துறை அவர்களை அப்புறப்படுத்தவேண்டும் என்று உத்தரவிடுகிறார் என்றால், இதன் பொருள் என்ன?

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது!

அதுமட்டுமல்ல; கருநாடகாவில் குக்கே சுப்ரமண்யா கோவில் உள்பட பல கோவில்களில் மட்டை ஸ்நானம் என்ற எச்சில் இலைமீது நடத்தப்பட்டு வந்த அங்கப்பிரதட்சணம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மதன், பானுமதி ஆகியோர் வழங்கிய தீர்ப்பு கவனிக்கத்தக்கது.

‘‘இது பழங்கால வழக்கம்; எனவே, தடை விதிக்கக் கூடாது என்று கோவில் நிர்வாகம் வாதாடுகிறது. 500 ஆண்டுகால வழக்கம் என்பதால், அதைப் பின்பற்ற அனுமதிக்க முடியாது. தீண்டாமை கூட பழங்கால வழக்கம்தான் என்பதால், அதையும் அனுமதிக்க முடியுமா? எனவே, ‘மட்டை ஸ்நானம்‘ என்ற எச்சில் இலையில் உருளும் அங்கப்பிரதட்சணத்தை அனுமதிக்க முடியாது. கருநாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது’’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். (‘தி இந்து’, 13.12.2014).

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அதிகாரம் உண்டா?

உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி - எச்சில் இலைமீது உருளுவது மத அடிப்படை உரிமை - அதைத் தடுக்க முடியாது என்று உத்தரவுப் பிறப்பிப்பது சட்டப்படி குற்றச் செயல் அல்லவா!

உச்சநீதிமன்றத்தைவிட தனக்கு அதிக அதிகாரம் உண்டு என்று நினைக்கிறாரா இந்த நீதிபதி?அரசமைப்புச் சட்டம் 51ஏ(எச்) என்ன கூறுகிறது? அரசமைப்புச் சட்டம்பற்றிப் பேசும் நீதிபதி, இந்திய அரசமைப்புச் சட்டம் 51ஏ(எச்) என்ன கூறுகிறது என்பதை அறியாதவரா? அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், கேள்வி கேட்கும் உரிமை மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறதே!

அறிவியல் மனப்பான்மை, சீர்திருத்தம் என்பவற்றைச் செயல்படுத்தினால், இதற்கு மதப் பழக்க வழக்கம் குறுக்கே நின்றால், கண்டுகொள்ளாது செல்ல வேண்டுமா? மாற்றம் என்பதுதான் மாறாதது என்ற அடிப்படைப் புரிதல் தேவையில்லையா?

மேலும், இந்திய அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளில் மதச் சுதந்திரம், மத உரிமைப் பாதுகாப்புபற்றிய 25, 26 ஆவது பிரிவுகளை இந்த அறிவியல், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு யுகத்திற்கு ஒவ்வாத ஒரு தீர்ப்பின்மூலம் தவறான வியாக்யான விளக்கம் தந்தால், இந்த அருவருக்கத்தக்க, உலகம் முகம் சுளிக்கக்கூடிய, சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடிய தீர்ப்பு ஏற்கத்தகாதது மட்டுமல்ல, வன்மையான கண்டனத்திற்கும் உரியதாகும்.

நாம் இப்படி எழுதி கண்டனம் தெரிவிப்பதற்கு முதல் காரணம்,அரசமைப்புச் சட்ட விரோதத் தீர்ப்பு இது என்பதால்.இந்திய அரசமைப்புச் சட்டக் கூறுகள் (Article 25, 26) எப்படித் தொடங்குகின்றன?

Article 25: Freedom of conscience and free profession, practice and propagation of religion.

(1) Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion.

இதன் தமிழாக்கம் வருமாறு:

பிரிவு 25: மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரமும், சுதந்திரமாகச் சமய நெறி ஓம்புதலும், ஒழுகுதலும், ஓதிப் பரப்புதலும்:

பொது ஒழுங்கமைதி, ஒழுக்க நெறி, நல்வாழ்வு ஆகியவற்றிற்கும் இந்தப் பகுதியின் பிற வகையங்களுக்கும் உள்பட்டு, அனைவரும், மனச்சான்று வழி ஒழுகுவதற்கான சுதந்திரத்திற்கும், சுதந்திரமாகச் சமயநெறி ஓம்புதல், ஒழுகுதல், ஓதிப் பரப்புதல் ஆகியவற்றிற்கான உரிமைக்கும் சரி சமமாக உரிமை கொண்டவர் ஆவர்.

எச்சில் இலைமீது அங்கப்பிரதட்சணம் - அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு : கி.வீரமணி ஆவேசம்!

Article 26: Freedom to manage religious affairs - Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall have the right-

இதன் தமிழாக்கம் வருமாறு:

பிரிவு 26: சமயம் சார்ந்த காரியங்களை நிர்வகிப்பதற்கான சுதந்திரம்: பொது ஒழுங்கமைதி, ஒழுக்க நெறி, நலவாழ்வு ஆகியவற்றிற்கு உட்பட்டு, ஒவ்வொரு சமயக் கிளையும் அல்லது அதன் பிரிவு எதுவும் - இந்த இரண்டில் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ள தவறான விளக்கம்.

பொது அமைதி, ஒழுக்கம், சுகாதாரம் இவற்றிற்குக் கட்டுப்பட்டவைதான் மதச் சுதந்திரம், மத உரிமையே தவிர, அது லகான் இல்லாத குதிரை போன்றதல்ல. Religious, Freedom and rights are not absolute, unbridled rights என்பது மறுவுற நன்கு உணர்ந்தோர் அறிவர்.

அரசமைப்புச் சட்டப்படி, உச்சநீதிமன்றத்தின் முந்தைய ஒரு தீர்ப்பை, உயர்நீதிமன்ற நீதிபதி மீறிய தன்னிச்சையான அல்லது அவர் விசித்திர விளக்கப்படி தீர்ப்பு எழுதுவது - தான் பதவிப் பிரமாணம் எடுத்த அரசமைப்புச் சட்டத்திற்கு- முரணானது. எவ்வகையில் இது சட்டப்படி சரியானது ஆகும்?

அரசமைப்புச் சட்ட விதிமுறைகள், நீதித்துறை நடைமுறைகள் இரண்டையும் அவர் மீறி உள்ளார். இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

மீண்டும் கோவிட்-19 போன்ற பல தொற்று நோய்கள் பரவிக் கொண்டுள்ள இந்தக் காலகட்டத்தில் எச்சில் இலைமீது படுத்து, உருண்டு செல்வது அருவருப்பு என்பதோடு மக்களிடையே தொற்று நோய் உருவாகி, மக்கள் நல்வாழ்வுக்கும் கேடு செய்வதாகும்.

இத்தீர்ப்பை இப்படியே விட்டால், தீண்டாமை, சதி என்ற உடன்கட்டை ஏற்றுதல்கூட இதுபோன்ற நீதிபதிகளால் நியாயத் தீர்ப்புகள்போல் வழங்கும் ஆபத்து எதிர்காலத்தில் மலிவாகும். நம் நாட்டைப் பார்த்து உலகம் கைகொட்டிச் சிரிக்கும் அவலத்திற்கும்கூட ஆளாகும் அபாயம் ஏற்படும்.

இது 51-ஏ(எச்) பிரிவுக்கு மட்டுமல்ல சாதாரண பகுத்தறிவுக்கும்கூட எதிரான அசிங்கத்திற்குப் பொட்டு வைத்துக் கொண்டாடும் ‘‘அறிவுக் கொழுந்துகள்’’ பெருகும் அபாயத்தையும்கூட ஏற்படுத்திவிடும்.

எனவே, இதுபற்றி மக்கள் மன்றமும், நீதிமன்றமும் பரிகாரம் தேடுவது அவசரம், அவசியம்!

வேறு தீர்ப்புகளிலும் இதே நீதிபதி தெரிவித்த பிரச்சினைக்குரிய கருத்துகள்! இந்தத் தீர்ப்பு மட்டுமல்ல; வேறொரு தீர்ப்பில் பகுத்தறிவைக் கேலி செய்து கருத்துக் கூறிட, அது பிரச்சினையான நிலையில், அந்த வரிகளைப் பின்வாங்கியவர்தானே?

தந்தை பெரியார், மணியம்மையார் திருமணம் என்ற பெயரால் செய்த ஏற்பாட்டை பொறுத்தவரையில் - தீர்ப்பு ஒன்றில் கையாண்டதும் நினைவில் இருக்கலாம்.

சங்கராச்சாரியாருக்கு வக்காலத்து

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டபோது, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி, எழுந்து நிற்காதது குற்றமில்லை - அவர் மோன நிலையில் இருந்தார் என்றும் சங்கராச்சாரியாருக்கு நேசக்கரம் நீட்டி பேசியவரும் இதே நீதிபதிதான் அல்லவா!

மத நடைமுறைகளில் சட்டம் தலையிடவே இல்லையா?

மத சம்பிரதாயங்களில் மாற்றம் கூடாது என்று கூறும் நீதிபதிக்கு ஒரு கேள்வி. கோவில்களில் உயிர்ப்பலி முறை இருந்ததே - அது தடுக்கப்படவில்லையா? ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று இருந்ததே - அதெல்லாம் சட்டம் போட்டுத் தடுக்கப்படவில்லையா?

பார்ப்பனர்கள் எச்சில் இலைமீது உருண்டதுண்டா?

எச்சில் இலைமீது உருளுபவர்கள் பார்ப்பனர்களாக இருந்தாலும், அதனையும் நாம் ஆதரிக்கமாட்டோம், மனிதநேய அடிப்படையில்!

எச்சில் இலையில் உருளுவது அருவருப்பானது அல்லவா? சுகாதாரக் கேடு அல்லவா? ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியின் இத்தகைய உத்தரவுகள் வெளிவருவது கண்டு சிந்திக்கும் திறன் உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்?

பக்தி என்ற பேரால் மக்களைக் காட்டுமிராண்டிக் காலத்துக்கு இழுத்துச் செல்ல - ஒரு நீதிபதி துணை போகலாமா என்பதே நம் கேள்வி!

சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுபற்றி யோசிப்போம்! உச்சநீதிமன்றத்தைவிட தனது அதிகாரம் மேலானது என்று நினைத்துச் செயல்பட்டுள்ள இந்த நீதிபதிமீது சட்டப்படியான நடவடிக்கைத் தேவை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories